Published:Updated:

மயானத்தில் வேலை பார்ப்பவரை மிரட்டினாரா ஓ.பி.எஸ்-ஸின் தம்பி?

மயானத்தில் வேலை பார்ப்பவரை மிரட்டினாரா ஓ.பி.எஸ்-ஸின் தம்பி?

மயானத்தில் வேலை பார்ப்பவரை மிரட்டினாரா ஓ.பி.எஸ்-ஸின் தம்பி?

மயானத்தில் வேலை பார்ப்பவரை மிரட்டினாரா ஓ.பி.எஸ்-ஸின் தம்பி?

Published:Updated:

அரசியலில் முக்கியமான இடத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தில் இருப்பவர்களால் சிக்கல் வருவது புதிது அல்ல. அந்தச் சிக்கல் இப்போது தம்பியால் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வந்திருக்கிறது.

மயானத்தில் வேலை பார்ப்பவரை மிரட்டினாரா ஓ.பி.எஸ்-ஸின் தம்பி?

பெரியகுளம் நகராட்சித் தலைவராக இருப்பவர் ராஜா. இவர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி. 'தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி என்னை வேலையைவிட்டுத் துரத்தப் பார்க்கிறார்’ என்று அந்த நகராட்சியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கும் பரமசிவத்தைச் சந்தித்தோம். ''மயானத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக உதவியாளராக வேலை பார்த்து வருகிறேன். அங்கு பரம்பரை பரம்பரையாக  பிணங்களை எரிக்கும், புதைக்கும் வேலையை ஐந்து பேர் பார்க்கிறார்கள். இதனால், அரசால் நியமிக்கப்பட்ட என்னால் வேலை பார்க்க முடியாத நிலை. எனக்கும் அவர்களுக்கும் தொடர்ந்து பிரச்னையாகவே இருந்தது. இதனை நகராட்சித் தலைவருக்கும் ஆணையாளருக்கும் எழுத்துப்பூர்வமாக தெரியப்படுத்திவிட்டேன்.

இப்போது எனக்கு சானிடரி இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு வந்தது. ஆனால், 'நகராட்சித் தலைவர் உனக்கு ஆர்டர் தரக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். அவரைப்போய் பாரு...’ என்று ஆணையாளர் சொன்னார். நகராட்சித் தலைவர் ராஜாவைப் பார்த்தேன். 'உனக்கு புரமோஷன் தர முடியாது. எனக்கு புரமோஷன் வேண்டாம் என்று எழுதிக்கொடு’ என்று கேட்டார். 'நான் என்ன சார் தப்பு செஞ்சேன்... எதுக்காக இப்படி கேட்குறீங்க?’ என்று அவர்கிட்ட கேட்டேன். அதுக்கு அவரு, 'எனக்கு வேண்டியவருக்கு அந்த வேலையைப் போடப்போறேன். நீ இதே வேலையை செய். இல்லைன்னா அதையும் காலி பண்ணிடுவேன்’ என்று கோபமாகச் சொன்னார். நான் எவ்வளவோ கெஞ்சியும் அவர் கேட்கவே இல்லை.

ஒரு வாரத்துக்குப் பிறகு அமைச்சர் பன்னீர்செல்வத்தைப் பார்த்து முறையிட்டேன். நான் சொன்ன விஷயங்களைக் கேட்டவர், 'நீ போய் கமிஷனரைப் பாரு...’ என்று சொன்னார். நானும் கமிஷனரைப் பார்த்தேன். அவர் பதில் எதுவும் பேசாமல் என்னைத் திருப்பி அனுப்பிவிட்டார். மறுபடியும் ராஜாவைப் பார்த்தேன். 'உனக்கெல்லாம் என்னால புரமோஷன் போட முடியாது. உனக்கு திருமாவளவன் போடுவார். அவருகிட்ட போய் கேளு. நாகமுத்து செத்தப்ப எனக்கு எதிரா போஸ்டர் ஒட்டுனீங்க இல்ல... இப்போ எதுக்கு என்கிட்ட வந்திருக்க..?’ என்று கோபப்பட்டார். எனக்கும் நாகமுத்து என்ற இளைஞருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அவருகிட்ட சொன்னேன். 'உங்க ஆளுங்கதானே அப்படி செஞ்சாங்க. இனி இந்தப் பக்கம் வந்துடாதே...’ என்று விரட்டினார். இரண்டு வருடத்துக்கு முன்பு அவருக்கும் நாகமுத்து என்பவருக்கும் இடையில் நடந்த பிரச்னையை மனதில் வைத்து இப்படி பேசுகிறார் என்பது புரிந்தது.

மயானத்தில் வேலை பார்ப்பவரை மிரட்டினாரா ஓ.பி.எஸ்-ஸின் தம்பி?

இதுக்கு மேல் அவரிடம் போராட எனக்கு வழி தெரியவில்லை அதனால்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதில் இருந்து எனக்குத் தொடர்ந்து தொல்லைத் தர ஆரம்பித்தார்கள். என்ன பிரச்னை வருமோ என்று தினமும் பயந்துதான் வாழ்கிறேன்'' என்று கலங்கினார்.

பரமசிவத்தின் வழக்கறிஞர் அப்பாதுரையைச் சந்தித்தபோது, ''நகராட்சி விதிகளின்படி பரமசிவத்துக்கு பதவி உயர்வு கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கு மெமோ மட்டும்தான் கொடுத்து வருகிறார்கள். மொத்தத்தில் அங்கே நடப்பது அதிகார துஷ்பிரயோகம்!'' என்றார்.

பெரிகுளம் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரியிடம் பேசியபோது, ''மயானத்தில் பரமசிவம் சரியாக வேலை செய்வது இல்லை என்று புகார் வந்தது. அதனால் அவருக்கு மெமோ கொடுத்தோம். அவர் மீது பல்வேறு புகார்கள் உள்ளன.  இந்தச் சூழலில் பதவி உயர்வு கொடுக்க முடியாது. அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருப்பதால், நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதன்படி செய்வோம்'' என்று சொன்னார்.

பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் ராஜாவிடம் குற்றச்சாட்டுக்கள் பற்றி கேட்டோம். ''அவருக்கு ஒதுக்கப்பட்டது மயான வேலை. அங்கே அவர் இருப்பதே இல்லை. எந்த நேரமும் அலுவலக வேலைகளை மட்டுமே பார்த்து வந்தார். திடீரென புரமோஷன் வேண்டும் என்று கேட்டால், எப்படி கொடுக்க முடியும்? நாகமுத்து வழக்கு பற்றி நான் அவரிடம் பேசவும் இல்லை. இதற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. என் உறவினர்கள் யாருக்கும் நான் வேலை போடவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், இதை சட்டப்படி எதிர்கொள்வோம்'' என்று மட்டும் சொன்னார்.

வேறு ஒருவர் சொல்லித் தெரிவதைவிட நாமே சரண்டர் ஆகிவிடலாம் என பிரச்னைகளை முதல்வர் கவனத்துக்கு கொண்டுபோய்விட்டாராம் அமைச்சர் ஓ.பி.எஸ்.!

- சண்.சரவணக்குமார்

படங்கள்: வீ.சக்தி அருணகிரி, ஈ.ஜெ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism