Published:Updated:

கருத்துரிமைக்குப் போடப்பட்ட மூங்கணாங்கயிறு!

குண்டர் சட்டத் திருத்தம்... கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்

குண்டர் சட்டத்தில் சில திருத்​தங்கள் செய்து சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மசோதா, ஃபேஸ்புக் போராளிகளைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது.

'குண்டர் சட்டம்’ என்பது 1982-ல் அறிமுகப்​படுத்தப்பட்டது. தமிழ்நாடு அபாயகரமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தைத்தான் குண்டர்கள் சட்டம் என்கிறார்கள். கள்ளச் சாராய வியாபாரிகள், போதை மருந்து குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், விபசார குற்றவாளிகள், மணல் கொள்ளையர்கள், குடிசை நில அபகரிப்பாளர்கள், திருட்டு வீடியோ விற்பவர்கள் மீது இந்தச் சட்டம் பாய்கிறது. இந்தச் சட்டத்தில் இப்போது இரண்டு புதிய திருத்தங்களைச் செய்திருப்பதாகச் சொல்லி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அண்மையில் சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்தார்.

கருத்துரிமைக்குப் போடப்பட்ட மூங்கணாங்கயிறு!

மேலே சொன்ன குற்றங்களில் ஏதாவது ஒன்றில் முதல் முறை குற்றங்கள் புரிந்தாலே அவர்கள் மீது 'குண்டாஸ்’ பாயும் என்பது முதல் திருத்தம். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மற்றும் சமூக வலைதளங்களில் ஒருவரை விமர்சித்து அவதூறு விளைவிக்கும் கருத்துக்களைப் பதிவுசெய்பவர்களும் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்பது இரண்டாவது திருத்தம். எந்தவித விசாரணையும் இன்றி ஒரு வருடம் இந்தச் சட்டத்தால் காவலில் வைத்திருக்க முடியும். 'முதல் முறை குற்றவாளிகளையும், சமூக வலைதளங்களில் இயங்குவோர் மீதும் இந்தச் சட்டம் பிரயோகிக்கப்படலாம் என்பது ஏற்க முடியாத ஒன்று. கருத்துரிமைக்கு போடப்பட்ட மூக்கணாங்கயிறு’ என பலர் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து நீதியரசர் சந்துரு மற்றும் சமூக செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

கருத்துரிமைக்குப் போடப்பட்ட மூங்கணாங்கயிறு!

நீதியரசர் சந்துரு: ''குண்டர் சட்டத்தின் நோக்கம் தண்டனை வழங்குவது அல்ல. மாறாக, தொடர் குற்றம் இழைப்பவரை தடுத்து நிறுத்துவது. இதற்கு விசாரணை இன்றி காவலில் வைப்பது என்று பெயர். இந்த குண்டர் சட்டத்தின் கீழ் பெரும்பாலும் ஏழை மக்களே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். கள்ளச்சாராய முதலாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அதை விலைக்கு வாங்கி சில்லறை விற்பனையில் ஈடுபட்டோர் இந்தச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். பலமுறை உயர் நீதிமன்றம் அதிகாரிகளைக் கடிந்துகொண்ட பின்னரும், தடுப்புக் காவல் தொடர்கிறது. சென்னை நகரத்தில் இந்தச் சட்டத்தின் கீழ் அதிக தடுப்புக் காவலுக்குப் பரிந்துரைக்கும் ஆய்வாளர்களுக்கு, சுழற்கோப்பை விருது வழங்கப்படுகிறது.

குற்றங்களை முறையாகத் துப்புத்துலக்கி குற்றவாளிகளை நீதிமன்றங்கள் முன் நிறுத்தி தண்டனை வாங்கித்தர முடியாத காவல் துறையினர், இந்தச் சட்டத்தைப் பெருமளவுக்குத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இந்தச் சட்டம் தொடர் குற்றமிழைக்க முற்படுவோரைத் தடுக்கப் பயன்படுகிறது என்று சொல்லிவிட்டு, இன்று ஒரு குற்றம் இழைத்தாலும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தலாம் என்று கூறுவது அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு விரோதமானது.

வலைப்பதிவுகளின் மூலம் தவறிழைப்போரை, அந்தத் தவறிழைக்க முற்படும் முன்னரே இந்தச் சட்டத்தின் பிரிவுகளைப் பயன்படுத்தலாம் என்று கூறும் சட்டத்திருத்தம், சட்டத்தின் ஆட்சியையே குற்றுயிராக்கும். இது அதிகார துஷ்பிரயோகத்துக்குத்தான் வழிவகுக்கும். சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் கருத்துகளை சுதந்திர​மாக பதிவுசெய்யலாம் என்று எண்ணிக்​கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை அச்சுறுத்தவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கருத்து சுதந்திரத்​துக்கான மிகப்பெரும் பேரிடி இந்தச் சட்டம்.''

பேராசிரியர் அ.மார்க்ஸ்: ''மிக மோசமான ஒரு சட்டம் இது. தடுப்பு காவல் சட்டம் என்பதே அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. 'அடிக்கடி பல குற்றங்களைச் செய்யக்கூடியவர்கள் தப்பித்துவிடுகிறார்கள். அவர்களுக்கு சுலபமாக பெயில் கிடைத்துவிடுகிறது. அதனால்தான், இந்தத் தடுப்புக் காவல் சட்டம்’ என்று அரசு தடுப்புக் காவல் சட்டத்தை நியாயப்படுத்துகிறது. ஆனால், அடிக்கடி குற்றங்களில் ஈடுபடுவோர் மட்டும் அல்லாமல், முதல் முறை குற்றம் செய்தவர்கள்கூட இந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இது எல்லாம் தவறு என நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்து விடுதலையாகி இருக்கிறார்கள். உதாரணமாக, கூடங்குளத்தில் ஃப்ளெக்ஸ் போர்டு எழுதிக் கொடுத்த ஒருவர் மீது, 'குண்டாஸ்’ சட்டம் பாய்ந்தது. அவர் ஃப்ளெக்ஸ் போர்டு எழுதினாரே தவிர, எந்தக் குற்றமும் செய்யவில்லை. நான் அவருக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி, எங்கள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்து வைத்ததும் ரத்தானது.

நீதிமன்றங்களும் இதுபோல் நூற்றுக்கணக்கான வழக்குகளில் ரத்துசெய்து இருக்கிறார்கள். இப்போதோ, முதல் முறை யார் குற்றம் செய்திருந்தாலும், இனி அவர்களைக் கைதுசெய்து இந்தச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்துவிடலாம். ஒரு வருடம் கழித்து குற்றமற்றவர் எனச் சொன்னாலும், ஒரு வருட காலம் ஜெயிலில் தண்டனை அனுபவித்த மாதிரிதான் இது. குற்றம் இழைக்காதவர்களுக்கு தண்டனை என்பது கண்டிக்கத்தக்கது. பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்​கள்தான். ஆனாலும், இதில் சில பொய் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. இதை முறையாக விசாரிக்காமல், இந்தச் சட்டத்தின் கீழ் முதல் முறை குற்றம்சாட்டப்படுபவரும் இதில் தண்டிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துபவர்களை குண்டாஸில் போடுவேன் என்று மிரட்டுவதும் அடிப்படை கருத்துரிமையை பாதிக்கும் விஷயம். இது மிகக் கொடூரமான சட்டம். இதனை எதிர்க்க வேண்டியது நமது கடமை.''

- நா.சிபிச்சக்கரவர்த்தி

அடுத்த கட்டுரைக்கு