Published:Updated:

சிபாரிசு செய்தார்கள்... விருது கொடுத்தோம்!

அலட்சியமாகத் தரப்படுகிறதா அரசு விருதுகள்?

சாதனை படைத்தவர்களுக்கும் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கும் சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கிக் கௌரவிப்பது வழக்கம். இந்த வருடம் அப்படி விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால், விருது வழங்கப்பட்டவர்களில் பலர் சாதனைக்குச் சொந்தக்காரர்களாக இல்லாமல் இருந்தால்கூட பரவாயில்லை... சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் கொடுமை!

சுகாதாரம் இல்லாத ஊரே சிறந்த நகராட்சி!

தமிழ்நாட்டின் சிறந்த நகராட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வர் ஜெயலலிதாவிடம் விருது வாங்கினார் பெரியகுளம் நகராட்சித் தலைவர் ஓ.ராஜா. இவர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி. 'சிறந்த நகராட்சியாகத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு பெரியகுளத்தில் என்ன இருக்கிறது?’ என்று விசாரித்தோம். ''பெரியகுளத்தில் ஓடும் வராக நதி சென்னையில் உள்ள கூவம் நதியைப் போன்றது. பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டுவந்தாலும், அதை செயல்படுத்தாமல் இருப்பதால், அத்தனைக் கழிவுகளும் இந்த வராக நதியில்தான் கலக்கின்றன. இதனால் சுத்தம், சுகாதாரம் என்றால் என்ன என்று கேட்கும் நிலையில்தான் இந்த நகராட்சி உள்ளது. நகராட்சி அலுவலகத்தைச் சுற்றி இருந்த சுமார் 75 வேப்பமரங்களை வெட்டி விற்றுவிட்டார்கள். இதை எதிர்த்துக் கேள்வி கேட்ட அதிகாரி மாற்றப்பட்டார். பெரியகுளத்தில் உள்ள பெரும்பகுதி மரங்களை வெட்டியதில் அதிகாரம் பொருந்தியவருக்குப் பங்கு உண்டு.

சிபாரிசு செய்தார்கள்... விருது கொடுத்தோம்!

இந்த நகராட்சியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சில வாரங்களுக்கு முன்புதான் நகராட்சித் தலைவர் ராஜாவுக்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போனார். அது தொடர்பான விசாரணை இன்னும் நிலுவையில் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பெரியகுளத்தை சிறந்த நகராட்சியாக அறிவித்து, அதன் தலைவர் ராஜா முதல்வரிடம் விருது வாங்குகிறார் என்றால், இது யாரை சந்தோஷப்படுத்த நடந்தது?'' என்று பொங்குகிறார்கள் அங்குள்ள நடுநிலையாளர்கள்.

தேனி மாவட்ட ஆட்சியர் பழனிசாமியிடம் பேசினோம். ''எங்களுக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. முதல்வர் விருதுக்காக நாங்கள் அந்த நகராட்சியை பரிந்துரைக்கவில்லை. இதுபற்றி நீங்கள் நகராட்சிகள் துறை செயலரிடம் பேசுங்கள்!'' என்று சொன்னார்.  

நகராட்சி நிர்வாகங்களில் ஆணையர் சந்திரகாந்த்திடம் பேசினோம். 'மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள்  என்று உள்ளாட்சித் துறைகள் அவர்கள் செய்த வேலைகள் குடிநீர், பொது மருத்துவம், சுகாதாரம், சாலை வசதி, நிதி நிலை, வறுமை ஒழிப்பு, அடிப்படை வசதிகள் என்று பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு காலாண்டுக்கும் எங்களுக்கு அனுப்புவார்கள். அப்படி அனுப்பும் வேலைகளின் தரத்தைப் பொறுத்து நாங்கள் அதனை ஆய்வு செய்வோம். 300 கேள்விகளைத் தயாரித்து எங்கள் குழு கள ஆய்வு செய்யும். அதன் பிறகே இந்த விருதுக்கு தேர்வு செய்கிறோம். இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை'' என்றார்.

நீதிமன்றத்தை அவமதித்தவருக்கு கல்பனா சாவ்லா விருது!

விண்கலம் வெடித்துச் சிதறியதில் உயிர்நீத்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா நினைவாக சாகச செயல் புரிந்த பெண்களுக்காக 'கல்பனா சாவ்லா’ விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அந்த விருது நாகை மாவட்ட போலீஸ் எஸ்.பி பொன்னிக்கு வழங்கப்பட்டது.

மணல் கடத்தல் குற்றத்தை ஒடுக்குவதில் துணிச்சலாகப் பணியாற்றியதற்காகவும் மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியதற்காகவும் 5 லட்சம் ரொக்கம், தங்கப்பதக்கம், சான்றிதழ் தாங்கிய கல்பனா சாவ்லா விருது பொன்னிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பொன்னி 2008 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரி. செங்கல்பட்டில் கூடுதல் எஸ்.பி-யாகப் பணியாற்றியவர் 2011-ல் எஸ்.பி-யாகப் பதவி உயர்வு பெற்று ஈரோடு எஸ்.பி ஆனார். பிறகு, பல மாவட்டங்களுக்கு மாறுதலானவர் கடந்த பிப்ரவரி முதல், நாகப்பட்டினம் எஸ்.பி-யாக இருக்கிறார். இவர் மீதும் சில சர்ச்சைகள் நிலுவையில் உள்ளன.

சிபாரிசு செய்தார்கள்... விருது கொடுத்தோம்!

'' 'திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டார்’ என குன்னூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் பெண் எஸ்.ஐ உமா மகேஸ்வரி கொடுத்த புகார் தமிழகத்தையே அதிரவைத்தது. காரணம், அவர் புகார் சொன்னது குன்னூர் மாஜிஸ்திரேட் தங்கராஜ் மீது. உடனே தங்கராஜை அப்போது திருப்பூர் எஸ்.பி-யாக இருந்த பொன்னி தலைமையிலான டீம் கைதுசெய்ய.. இது நீதித்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை உண்டாக்கியது. சட்ட நடைமுறைகளை மீறி தங்கராஜ் கைது செய்யப்பட்டிருக்கிறார் என நீதித்துறை வட்டாரம் கடும் எதிர்ப்பைக் காட்டியது. உடனே, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து (சூ மோட்டோ) நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுத்துக்கொண்டது. 'மாஜிஸ்திரேட் தங்கராஜை கைது செய்வதற்கு முன்பு நீலகிரி மாவட்ட தலைமை நீதிபதியிடம் முறையாகத் தெரிவிக்கவில்லை. நீலகிரி மாவட்ட தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்குத் தகவல் அனுப்பவில்லை. தங்கராஜை அவரது சட்ட ஆலோசகர் தொடர்புகொள்ள அனுமதிக்கவில்லை. இவை அனைத்தும் வழிமுறைகளை மீறியதாகும்’ என அப்போது புகார் பட்டியல் வாசித்தது நீதிமன்றம். அத்துடன் பொன்னி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கான அடிப்படை முகாந்திரம் இருப்பதாகச்  சொல்லி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.  

இந்த வழக்கு அடுத்த கட்டத்தை தொட்டபோது, பொன்னி உட்பட அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தனியாக ப‌தில்மனு தாக்கல் செய்தனர். 'நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. சட்டப்படிதான் கடமையைச் செய்தோம்’ என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்கள். அதோடு 'நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்’ என்றும் சொன்னார்கள். 'மனுவில் தவறு செய்யவில்லை என்று கூறிவிட்டு மன்னிப்பை வாய்மொழியாக கூறுவதை ஏற்க முடியாது’ என சொன்னது நீதிமன்றம்.

''இந்த அளவுக்கு சூடுபிடித்த இந்த வழக்கில், நீதிமன்றத்தில் பொன்னி ஆஜராகி குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார். பொன்னியின் மன்னிப்பைக்கூட ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுத்தது. அப்படிப்பட்டவர்தான் இப்போது விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டிருக்கிறார்'' என்று வருத்தப்படுகிறார்கள் நீதித்துறையை சேர்ந்தவர்கள்.  

விருது வாங்கியதும் மீடியாவிடம் பேசிய பொன்னியிடம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பற்றி கேட்டோம். பதில் எதுவும் சொல்லாமல் நகர்ந்துவிட்டார்.  

இடிந்த பாலம் கட்டியவருக்கு விருது!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் விவேக் ஆனந்தன் கரங்களால் விருது பெற்றவர், நெடுஞ்சாலைத் துறையில் பென்னாகரம் உட்கோட்ட உதவிப் பொறியாளர் இளங்கோவன். இவருக்கு எந்த அடிப்படையில் விருது கொடுத்தார்கள் என்று கொந்தளிக்கிறார்கள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள். இதுபற்றி நம்மிடம் பேசியவர்கள், ''கடந்த ஜூன் மாதம்தான் ஓசூர் கிராம சாலைகள் பிரிவில் இருந்து பென்னாகரத்துக்கு மாறுதலாகி வந்தார் இளங்கோவன். வந்த இரண்டு மாதங்களிலேயே அவரது பணி மிகச்சிறப்பாக இருந்ததாக விருது கிடைத்துள்ளது. கிருஷ்ணகிரி பக்கமுள்ள ராயக்கோட்டையில் கடந்த மே மாதம் இளங்கோவன் மேற்பார்வையில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது. இளங்கோவனோ, 'இதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. கான்ட்ராக்ட்காரர்தான் பொறுப்பு’ என்று  சொன்னார். இதில் கொடுமை என்ன தெரியுமா... அந்தப் பாலத்தின் பணிகள் முடிக்கப்பட்டதாகச் சொல்லி பில் பணத்தை அரசிடம் இருந்து வாங்கிவிட்டனர். பாலம் திடீரென இடிந்து விழவும் என்ன செய்வதென்று இளங்கோவனுக்குத் தெரியவில்லை. ஆனாலும், இளங்கோவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், அவருக்கு இருக்கும் செல்வாக்கைப் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படிப்பட்டவருக்கு சிறந்த அதிகாரிக்கான விருது கொடுத்திருக்கிறார்கள். உண்மையிலேயே வேலை பார்க்கும் அதிகாரிகள் இதுபோன்ற விஷயங்களைப் பார்க்கும்போது மனச்சோர்வு அடைகிறார்கள்'' என்றனர்.

சிபாரிசு செய்தார்கள்... விருது கொடுத்தோம்!

தர்மபுரி கலெக்டர் விவேக் ஆனந்தனிடம் பேசியபோது, ''ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகப் பணியாற்றியவர்களை கௌரவிக்கவே இந்த விருது வழங்கப்படுகிறது. நீங்கள் குறிப்பிடும் நபரை தர்மபுரி கோட்டப் பொறியாளர் தங்கமணிதான் சிபாரிசு செய்தார். நாங்க விருது கொடுத்தோம். இதுபற்றி நான் உடனடியாக விசாரிக்கிறேன்'' என்று சொன்னார்.

சிபாரிசு செய்தார்கள்... விருது கொடுத்தோம்!

இளங்கோவனை விருதுக்கு பரிந்துரைத்த தர்மபுரி கோட்டப் பொறியாளர் தங்கமணியிடம் பேசினோம். ''அவர் இங்கே வந்து இரண்டு மாதங்கள் ஆனது உண்மைதான். இந்த இரண்டு மாதத்தில் அவர் மிகவும் துடிப்புடன் செயல்பட்டுள்ளார். ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, அதிக கவனத்துடன் பணியாற்றினார். சாலைப் பணியாளர்கள் செய்யும் வேலைகளை உடனுக்குடன் போட்டோ எடுத்து எனக்கு 'வாட்ஸ்-அப்’பில் அனுப்பினார். இதற்காகத்தான் அவருக்குப் பரிந்துரைத்தேன்'' என்று சொன்னார்.

பாராட்டுவதும் விருது கொடுப்பதும் நல்ல விஷயம்தான். தகுதியானவர்களுக்கு அது கொடுக்கப்பட வேண்டுமே தவிர, 'வேண்டப்பட்டவர்களுக்காக’ கொடுத்தால் விருதுக்கு என்னதான் மரியாதை!

- எம்.பரக்கத் அலி, சண்.சரவணகுமார், எம்.புண்ணியமூர்த்தி

படங்கள்: எம்.விஜயகுமார்

அடுத்த கட்டுரைக்கு