விமானத்தில் வந்து செயின் பறிப்பு… சொகுசான வாழ்க்கை… கைதானவர்கள் பின்னணி இதுதான்!

 நகை பறிப்பு

சென்னை மாநகரில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள், அப்பகுதியினரை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது. இதனால் பெண்கள் தனியாக சாலையில் நடக்கவே தயங்கிய நிலை ஏற்பட்டது.  சாலை ஓரத்தில் நடத்து கொண்டிருக்கும் பெண்களிடம் திடீரென பைக்கில் வரும் ஆசாமிகள், கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களின் செயினைப் பறித்துச் செல்லும் சம்பவங்கள் வீடியோக்களில் வைரலாக வலம் வரத்தொடங்கின. 

காவல்துறையினர் பல மாதங்களாக வலைவீசியும், எந்த துப்பும் இல்லாததால் அவர்களை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் விமானம் மூலம் சென்னை வந்து செயின் பறிப்பு போன்ற குற்றச் செயலில் ஈடுபடுவது தெரியவந்தது. இந்த நிலையில் காவல்துறையினர் அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்தனர். இந்த நிலையில் கடந்த சில மாத காலமாக, பல இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் சஞ்ஜய் மற்றும் சந்தீப் ஆகியோரை சென்னை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் மனோகரன், “சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்ட இருவரும் டெல்லி க்ரைம் ஹிஸ்ட்ரி லிஸ்ட்டில் இருக்கிறார்கள். டெல்லியில் இவர்கள் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. 23 செயில் பறிப்பு சம்பவங்களில்  இருவரும் சேர்ந்து ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 25 சவரன் நகைகள் மற்றும் கொள்ளையில் ஈடுபட  பயன்படுத்தப்பட்ட மோட்டர் வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த இன்னும் மூன்று பேரை தேடி வருகிறோம். அவர்கள் டெல்லியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவர்களை பிடிக்க தனிப்படை ஒன்று டெல்லிக்கு விரைந்திருக்கிறது. டெல்லியில் இருந்து ஒரு டீமாக இவர்கள் சென்னைக்கு வந்திருக்கிறார்கள். ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்தி பழைய டூ வீலரை வாங்கி இருக்கிறார்கள். சென்னையில் தங்குவதற்கு ஒரு அறையை வாடகைக்கு எடுத்து இருக்கிறார்கள். கொள்ளையடிப்பதற்காக டூ வீலரை அந்த வீட்டில் வைத்து இருக்கிறார்கள். கொள்ளையடித்துவிட்டு விமானம் மூலம் டெல்லி சென்றுவிடுவதும், டெல்லியிலிருந்து மீண்டும் விமானம் மூலம் சென்னையில் கொள்ளையில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. 

மனோகரன்

சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடங்களையும், மக்கள் நடமாட்டம் குறைந்த ஒதுக்கு புறமான இடங்களையும் செயின் பறிப்பிற்காக தேர்வு செய்கிறார்கள். காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கிய போது, ‘அவர்கள் வட இந்தியரைப் போன்று இருக்கிறார்கள், அவர்கள் பயன்படுத்திய வாகனம் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டது’ என்ற தகவல்கள் கிடைத்தன. கொள்ளையடிக்க பயன்படுத்திய வாகனத்தில் கடைசி எண் 6 மட்டும் தெரிந்தது. மற்ற எண்கள் மறைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு டூவீலர் ஸ்டாண்டிலும் இந்த வாகனம் இருக்கிறதா என தேடினோம். 

கடைசியில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அந்த டூவீலர் நிறுத்தப்பட்டிருந்தது. அதை வைத்து செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடித்தோம். கொள்ளையடித்த பணத்தில் டெல்லியில் உள்ள மங்கல்புரி பகுதியில் அடுக்குமாடி வீடுகளை கட்டி சொகுசாக வாழ்க்கை நடத்தி வந்திருக்கின்றனர். தனியாக வீட்டில் வசிப்பவர்கள் முடிந்தவரை சிசிடிவி கேமராவை பொறுத்த வேண்டும். இதனால் குற்றம் பெருமளவு குறையும்” என்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!