Published:Updated:

மண்டபம் பார்த்து... பத்திரிகை அடித்து... 'தில்லாலங்கடி' காதலன்!

மண்டபம் பார்த்து... பத்திரிகை அடித்து... 'தில்லாலங்கடி' காதலன்!

பிரீமியம் ஸ்டோரி

'கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான் வாழ்க்கை உண்டானதே...’ - வியாசர்பாடியில் ஒரு கல்யாண மண்டபத்தில் உள்ள ஸ்பீக்கரில் டி.எம்.எஸ் குரல் அலறியபடி இருந்தது. வேன்களில் இருந்து வெளியூர்க்காரர்கள் சிலர் இறங்கி கல்யாண மண்டபத்துக்குள் செல்கிறார்கள். அங்கே தெரிந்த முகங்கள் எதுவும் இல்லை. மேடையில் நிற்கும் மணமக்களும் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் இல்லை. அடுத்தடுத்து வந்த அத்தனை பேரும் திருமண அழைப்பிதழையும், மண்டபத்தின் பெயரையும் மாறி மாறிப் பார்க்கிறார்கள். எல்லாம் சரியாக இருக்கிறது. அவர்களுடன் வந்த மணப்பெண்ணும் வெளியில் ஒரு வேனில் காத்திருக்க... மணமகனை மட்டும் காணவில்லை. ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தவர்கள் பக்கத்தில் இருந்த காவல் நிலையத்துக்குப் போகிறார்கள்.

மண்டபம் பார்த்து... பத்திரிகை அடித்து... 'தில்லாலங்கடி' காதலன்!

சில மாதங்களுக்கு முன்பு...

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சத்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நர்ஸிங் முடித்துவிட்டு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். அந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் மற்றொரு நர்ஸ் மூலமாக விக்னேஷ் என்பவர் அறிமுகமாகிறார். கேட்ரிங் படித்த விக்னேஷ§ம் சத்யாவும் நண்பர்களாகிறார்கள். நட்பு காதலாகிறது. சத்யா தன் காதலை வீட்டில் சொல்கிறார். அவர்களும் திருமணத்துக்கு சம்மதிக்க... அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.

மண்டபம் பார்த்து... பத்திரிகை அடித்து... 'தில்லாலங்கடி' காதலன்!

வியாசர்பாடியில் ஒரு வீட்டுக்கு சத்யா குடும்பம் வருகிறது. திருமண நாள் குறிக்கப்படுகிறது. 'நீங்க இனி கல்யாணத்துக்கு முதல்நாள் வந்தால் போதும். எல்லா ஏற்பாடுகளையும் நாங்க பார்த்துக்குறோம்!’ என்று சொல்லி அனுப்புகிறார் விக்னேஷ். அழைப்பிதழையும் விக்னேஷ் தயார் செய்து சத்யா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். திருமண செலவுக்கும், வரதட்சணை, சீர்வரிசை என்று அத்தனையும் திருமணத்துக்கு முன்பே கொடுத்து அனுப்புகிறார்கள் சத்யா குடும்பத்தினர். தங்கள் சொந்த பந்தங்களையெல்லாம் அழைத்துக்கொண்டு திருமணத்துக்கு முதல் நாள் மணப்பெண் சத்யாவோடு கல்யாண மண்டபத்துக்கு வருகிறார்கள். அப்படி அவர்கள் வந்தபோதுதான் அங்கே வேறு ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்து கொண்டிருந்தது.

போலீஸ் விசாரணையைத் தொடங்குகிறது. விக்னேஷையும், அவரது அம்மாவையும் நீண்ட தேடுதலுக்குப் பிறகு போலீஸ் கைது செய்கிறது. தான் ஏமாந்து நிற்பதை உணர்ந்த சத்யா யாரிடமும் பேசவில்லை. சத்யாவுக்கு அவரது மொத்த குடும்பமும் ஆறுதல் சொல்லி தேற்றியிருக்கிறது. சத்யாவின் சித்தி வகையில் உறவினரான ஆட்டோ டிரைவர் மகேஷ்குமாரும் அந்த திருமணத்துக்காக வந்திருக்கிறார். கலங்கி நின்ற சத்யாவின் பெற்றோரிடம், 'உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா சத்யாவை நான் கல்யாணம் செஞ்சுக்குறேன்!’ என்று கேட்டிருக்கிறார் மகேஷ். சத்யாவிடமும் அவரே பேசி சமாதானப்படுத்தி இருக்கிறார். சத்யாவும் தலையசைக்க... ஆட்டோவைக் கிளப்புகிறார் மகேஷ். தாலி, பட்டுப்புடவை சகிதமாகத் திரும்பி வருகிறார். திருமணம் நடக்க முடிவு செய்யப்பட்டிருந்த அன்று மாலை சத்யா கழுத்தில் தாலி கட்டுகிறார் மகேஷ்.

சத்யாவை ஏமாற்றிய விக்னேஷை விசாரித்த போலீஸாரோ அதிர்ந்து நிற்கின்றனர். ''சத்யா குடும்பத்தினர் சென்னைக்கு வந்தபோது அவர்களை அழைத்துக்கொண்டு போய் காட்டியது விக்னேஷ் வீடே கிடையாதாம். கல்யாணத்துக்கு முன்னாடியே வரதட்சணை வந்துடுச்சு. இதுக்கு மேல எதுக்கு அந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும்? என்று யோசித்திருக்கிறான். கிராமத்துக்காரங்கதானே கல்யாண மண்டபத்துக்கு வந்து தேடிப்பார்ப்பாங்க. ஆளுங்க இல்லை என்றதும் ஊருக்கு கிளம்பிடுவாங்க. நாம அடுத்த பெண்ணை பார்த்துக்கலாம் என்று திட்டம் போட்டிருக்கிறான். போலியான முகவரியில் கல்யாண பத்திரிகை அடித்திருக்கிறான். அவன் சம்பந்தப்பட்ட யாருக்கும் அழைப்பிதழ் கொடுக்கவில்லை. அடித்த மொத்த பத்திரிகையையும் சத்யா வீட்டுக்கு மட்டும் அனுப்பி வைத்திருக்கிறான். இதற்கு அவனுடைய அம்மாவும் உடந்தையாக இருந்திருக்காங்க. காதல் என்ற பெயரில் ஒரு பெண்ணை நம்ப வைத்துக் கல்யாணம் வரை வந்து ஏமாற்றியதுதான் கொடூரத்தின் உச்சம். வெளியூரில் இருந்து வேலைக்காக சென்னை வரும் பெண்கள், அறிமுகம் இல்லாத யாரோ ஒருத்தனை நம்பி ஏமாறுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இனியாவது பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!'' என்கிறார்கள் போலீஸார்.

காதலுக்கு கண் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். புத்திசாலித்தனமும், ஜாக்கிரதை உணர்வும் இருக்க வேண்டாமா? பெண்களே, பெற்றோர்களே உஷார்!

- மா.அ.மோகன் பிரபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு