Published:Updated:

ஆ...சிட்!

அடிக்கடி வந்த போன்... காத்திருந்த கொலைவெறி கண்கள்..

ஆ...சிட்!

அடிக்கடி வந்த போன்... காத்திருந்த கொலைவெறி கண்கள்..

Published:Updated:

'அம்மா எரியுதும்மா... வலி தாங்க முடியலையே... எனக்கு எதாவது ஊசி போடுங்க...!’ -மதுரை அரசு மருத்துவமனையின் 301-வது வார்டில் அலறல் சப்தம் கேட்டபடியே இருக்கிறது.

 மதுரை மாவட்டம் திருமங்கலம், பேரையூர் அருகில் உள்ள சின்ன பூலாம்பட்டியைச் சேர்ந்தவர் மீனா. அவரது தோழி அங்காள ஈஸ்வரி. இருவரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உறுப்புக் கல்லூரியில் இளநிலை ஆங்கில இலக்கியம் படித்து வருகிறார்கள். கல்லூரி முடிந்ததும் மதியம் பஸ் பிடித்து வீட்டுக்கு வருவது தினசரி வழக்கம். சம்பவம் நடந்த அன்று மதியம் 2 மணியளவில் மீனாவும், அங்காள ஈஸ்வரியும் திருமங்கலம் நேதாஜி தெருவில் உள்ள ஒரு குறுகலான சந்தில் நடந்து வந்திருக்கிறார்கள். இந்த இருவரையும் கொஞ்ச இடைவெளியில் சக கல்லூரி மாணவிகள் சிலரும் வந்திருக்கிறார்கள். அப்போது, மறைவில் இருந்து வெளிப்பட்ட ஒரு மர்ம ஆசாமி மீனாவின் முகத்தில் ஆசிட் வீசியிருக்கிறான். அவனைத் தடுக்கப்போன அங்​காள ஈஸ்வரியின் முகத்திலும் உடலிலும் ஆசிட் துளிகள்பட்டுத் தெறித்​தன. இருவரும் வலி தாங்காமல் அழுது புரண்டு கதறியிருக்கிறார்கள். இருவரையும் அங்கிருந்து மீட்டு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள்.  

ஆ...சிட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு விரைந்தோம்.

ஆ...சிட்!

அங்கேதான் நாம் கட்டுரையின் துவக்கத்தில் சொன்ன கதறல் சத்தத்தைக் கேட்டோம். சம்பவத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியில் இருந்து மீளாத பிரியாவிடம் பேசினோம். 'எனக்கு முன்னாலதான் பத்தடி தூரத்துல மீனாவும், அங்காள ஈஸ்வரியும் நடந்து போனாங்க. அது ஒரு குறுகலான சந்து. அந்த இடத்துல 35 வயது இருக்கும் ஒருத்தன் திடீர்னு வந்தான். பிரவுன் கலர் சட்டையும் ஜீன்ஸ் பேன்ட்டும் அணிந்து இருந்தான். ஏதோ ஒரு பாட்டிலை எடுத்து அப்படியே மீனாவின் தலையில் ஊத்தினான். அவள் வலியால் துடித்துக் கத்தினாள். அவகூட இருந்த அங்காள ஈஸ்வரி அதை தைரியமாக தடுக்க, அவள் மீதும் ஆசிட் பட்டது. அந்த ஆள் வீசியது ஆசிட்தான் என்பதைப் புரிந்துகொண்டு, கத்தினோம். அவன் பார்வை பயங்கர மோசமாகக் கொலைவெறியோடு இருந்ததை இப்போ நினைத்தாலும் ஈரக்குலை நடுங்குது. கொஞ்ச தூரத்துல ஒரு     பைக் இருந்துச்சு. அதை எடுத்துட்டு கிளம்பிட்டான். நாங்க எல்லோருமா சேர்ந்துதான் மீனாவையும், அங்காள ஈஸ்வரியையும் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனோம்'' என்று படபடத்தார்.

மருத்துவமனைக்குக் கதறியபடி வந்தார் மீனாவின் தாய் முரு​கேஸ்வரி.  'என் மகளுக்கு என்ன ஆச்சு?' என்று கேட்டபடி, மயங்கி சரிந்துவிட்டார். அங்கிருந்தவர்கள் அவருக்குத் தண்ணீர் கொடுத்து எழுப்பி உட்கார வைத்தனர்.  'காட்டு வேலைக்குப் போயிருந்தேன். அப்பத்தான் என் மகளுக்கு நடந்ததைச் சொன்னாங்க. அலறியடிச்சுகிட்டு ஓடியாந்தேன். என் வீட்டுக்காரரு இதயநோயால் இறந்து 21  நாள்தான் ஆகுது. நாங்க யாரு வம்புதும்புக்கும் போகாத ஆளுங்க. எங்களுக்கு எதிரிங்க யாரும் இல்லை. இனி இவளை வெச்சுகிட்டு நான் எப்படிச் சமாளிக்கப்போறேன்னு தெரியலைங்க...'' என்று கதறினார்.

ஆ...சிட்!

அங்காள ஈஸ்வரியின் அம்மா பாண்டீஸ்வரியும், அப்பா சங்கரபாண்டியும் இன்னொரு பக்கம் கதறியபடி இருந்தனர். சங்கர பாண்டியிடம் பேசினோம்.  'எனக்கு மூன்று பொம்பள பிள்ளைங்க. ஈஸ்வரிதான் மூத்த பொண்ணு. காலேஜ்ல படிக்கிறா. மத்தவங்க பள்ளிக்கூடம் போறாங்க. என் புள்ளை யாருக்கும் கெடுதல் நினைக்காதுங்க!'' என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார்.

மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணி, தென்மண்டல ஐ.ஜி-யான அபய்குமார் சிங், ரூரல் டி.ஐ.ஜி-யான ஆனந்த்குமார் சோமாலி ஆகியோர் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரித்தனர். மருத்துவமனை டீன் சாந்தகுமார், 'மாணவிகள் மீது வீசப்பட்ட ஆசிட் வீரியம் குறைந்தது. அதனால், பாதிப்பு குறைவான அளவே தெரிகிறது. மீனாவின் தலையில் இருந்து ஆசிட் ஊற்றும்போது, நல்லவேளையாக அவர் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார். அதனால், கண்களுக்கு பாதிப்பு இல்லை. தொடர்ந்து சிகிச்சை நடக்கிறது. மீனா மீது வீசப்பட்ட ஆசிட்டின் தன்மையை அறிய சோதனைக்கு அனுப்பி இருக்கிறோம்' என்றார்

ஆ...சிட்!

போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ''ஆசிட் வீசப்பட்ட பெண்ணின் செல்போனுக்கு ஒரு குறிப்பிட்ட நம்பரில் அடிக்கடி தொடர்ந்து போன் வந்திருக்கிறது. அதிக நேரம் பேசியிருக்கிறார்கள். அந்த நபர் யார் என்று விசாரித்து வருகிறோம். போனில் பேசிய நபராக இருந்திருந்தால் நிச்சயம் அது மீனாவுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் ஆசிட் ஊற்றியவரை மீனாவுக்குத் தெரியவில்லை. அப்படியானால் இது யாரோ புரபசனலாகத்தான் செய்திருக்க வேண்டும். வந்தவன் வெறும் அம்பு மட்டும்தான். ஏவியவன் யார் என்றும் பிடிக்க வேண்டும். நிச்சயம் கண்டுபிடிப்போம்'' என்று சொல்கிறார்கள்.

ஆசிட் வீசிய கொடூரன் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்!

- சண்.சரவணக்குமார்

படங்கள்: பா.காளிமுத்து, ஈ.ஜெ.நந்தகுமார், இ.பொன்குன்றம்

ஆசிட் வீச்சு அட்டூழியங்கள்...

2012  நவம்பர் 14-ல் காரைக்காலில் வினோதினியின் மீது சுரேஷ் என்பவர் ஆசிட் வீசினார்.  சிகிச்சை பலன் இல்லாமல் இறந்துபோனார் வினோதினி. சுரேஷ§க்கு ஆயுள் தண்டனை கொடுத்தது நீதிமன்றம். அதையடுத்து, சுரேஷ் மேல் முறையீடு செய்துள்ளார்.

மகளை இழந்த சோகத்தில் வினோதினியின் தாயாரும் இறந்துவிட்டார்.

2013 ஜனவரி 30-ல் சென்னை ஆதம்பாக்கத்தில் வித்யா என்ற இளம்பெண் மீது ஆசிட் வீச்சு. அவர் இறந்துபோனார். குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சீர்காழியில் தங்கபாண்டி என்பவர் 20 வயது இளம்பெண் ஒருவர் மீது ஆசிட் வீசியுள்ளார்.

கடந்த வாரம் கொல்கத்தாவில் லட்சுமி என்ற ஃபேஷன் டிசைனர் மீது ஆசிட் வீச்சு.

ஆசிட் வீச்சுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 30-ல் சென்னையில் பல்வேறு கல்லூரி மாணவிகள் ஒன்றுகூடி பேரணி நடத்தினார்கள். அப்பொழுது அவர்கள் சொன்ன தகவல்கள் அதிர்ச்சி ரகம். கடந்த 15 மாதங்களில் நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால் தேசிய குற்ற ஆவண பதிவேட்டில் வெறும் 68 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. ஆசிட் தாக்குதல்களுக்கு ஆளாகும் நபர்களில் 75 சதவிகிதம் இளம்பெண்கள். பெரும்பாலும் ஒருதலைக் காதல் விவகாரத்தில்தான் ஆசிட் வீச்சுகள் நடக்கின்றன. ஒரு சில இடங்களில் மட்டும் ஆண்கள் மீது முன்விரோத பகையால் ஆசிட் வீசப்படுகிறதாம்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism