பொருளாதார வளர்ச்சியில் தேசிய அளவில் தமிழகம் கடைசி இடத்தில் இருக்கிறது என அறிவித்திருக்கிறது மத்திய புள்ளியியல் துறை. ஆனால், இந்தியாவிலேயே ஹெலிபேடுகள் (ஹெலிகாப்டர் தளம்) அதிகம் உள்ள மாநிலம் என்கிற பெருமை(!)யை தமிழ்நாடு தாங்கி நிற்கும் தகவல் புள்ளிவிவர புலிகளுக்கே தெரியாது.

ஜெயலலிதாவின் ஹெலிபேடு செலவு
ஜெயலலிதாவின் ஹெலிபேடு செலவு
ஜெயலலிதாவின் ஹெலிபேடு செலவு

ஹெலிபேடு இல்லாத மாவட்டமே இல்லை என்கிற அளவுக்கு ஹெலிபேடுகள் தமிழகத்தில் நிரம்பிக் கிடக்கின்றன. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆகாய வழியாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார் ஜெயலலிதா. பொதுக் கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு அருகிலேயே ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டன. இப்படி தேர்தல் நேரத்தில் மட்டும் 34 இடங்களில் ஹெலிபேடுகள் உருவாக்கப்பட்டன.

ஜெயலலிதாவின் பிரசார கூட்டம் நடைபெறும் இடம் முடிவானதும் ஹெலிபேடு அமைப்பதற்காக முதலில் இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் முதலில் பூமி பூஜை போட்டார்கள். புதிதாக ஒரு கட்டடத்தை எழுப்புவதற்கு முன்பு புரோகிதரை வைத்து சடங்குகள் எல்லாம் நிகழ்த்துவதுபோல இந்த ஹெலிபேடுகளுக்கும் நடத்தப்பட்டன. ஏற்கெனவே ஹெலிபேடுகள் இருந்த இடங்களில்கூட இன்னொரு ஹெலிபேடு உருவாக்கப்பட்டது. அந்த அளவுக்கு அ.தி.மு.க-வின் பணம் செலவழிக்கப்பட்டது.

ஒரு முறை ஹெலிகாப்டர் இறங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஹெலிபேடுகள் அதற்குப் பிறகு எதற்குமே பயன்படாமல் வெறுமனே காட்சிப் பொருளாகக் கிடக்கின்றன. வைக்கோல் சேமிப்புத் தளமாகவும் களத்து மேடாகவும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது ஹெலிபேடுகள்.

ஹெலிகாப்டர் தளம் அமைப்பதற்காக விளையாட்டு மைதானத்தைச் சேதப்படுத்திய விவகாரம் நீதிமன்றப் படியேறியிருக்கிறது. கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் ஏற்கெனவே  ஹெலிபேட் இருக்கிறது. ஆனால், அதைப் பயன்படுத்தாமல் ஜெயலலிதா வந்து செல்வதற்காக மாணவர்கள் விளையாடும் கால்பந்து, ஹாக்கி, தடகளம், கிரிக்கெட் மைதானங்களை ஹெலிபேடாக மாற்றினார்கள். இதனால் மாணவர்கள் பயிற்சி பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டிருக்கிறார் தி.மு.க மாணவரணி செயலாளர் இள.புகழேந்தி. 'ஹெலிபேடு அமைப்பதற்கு எவ்வித அனுமதியும் பெறவில்லை’ என பதில் தந்திருக்கிறார்கள். இதன் அடிப்படையில் வழக்குப் போட்டிருக்கிறார் புகழேந்தி.

எம்.பி. தேர்தலின்போது தூத்துக்குடியில் ஜெயலலிதா பிரசாரம் செய்ய கதிர்வேல் நகரில் ஹெலிபேடு அமைக்கப்பட்டது. இப்போது தூத்துக்குடி மேயர் தேர்தல் பிரசாரத்துக்காக பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே புதிய ஹெலிபேடு உருவாக்கப்பட்டது. நான்கு மாதம்கூட முடியாத நிலையில் பழைய ஹெலிபேடை பயன்படுத்தாமல் புதிய ஹெலிபேடை உருவாக்கும் அளவுக்கு கரன்ஸிகளைக் கொட்டி வைத்திருக்கிறது அ.தி.மு.க.

ஹெலிகாப்டர்கள் வந்து இறங்கும்போது விசாலமான பரந்துவிரிந்த கான்கிரீட் தளம் தேவை. ஹெலிகாப்டர் நிறுத்த கொஞ்ச இடம் போதும் என்றாலும், ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக விசாலமாகவே ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டன. அந்த வகையில் அமைக்கப்பட்ட ஹெலிபேடுகள் ஒவ்வொன்றும் சராசரியாக 17 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டிருக்கின்றன. பெரம்பலூரில்தான் மிகக் குறைந்த மதிப்பில் அதாவது ரூ.16.99 லட்சத்தில் ஹெலிபேடு அமைக்கப்பட்டிருக்கிறது. மிக அதிகபட்சமாக ரூ.17.22 லட்சத்தில் அரக்கோணத்தில் ஹெலிபேடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக 34 ஹெலிபேடுகள் அமைக்க 5 கோடியே 80 லட்சத்து 70 ஆயிரத்து 223 ரூபாயை செலவழித்திருக்கிறது அ.தி.மு.க. மத்திய தேர்தல் ஆணையத்துக்கு அ.தி.மு.க தலைமைக் கழகத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட செலவுக்கணக்கில்தான் இப்படி ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

- எம்.பரக்கத் அலி

                                 படம்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு