Published:Updated:

கடிதம் வந்தது முன்னே... கத்தி வந்தது பின்னே...

அமைச்சரின் தம்பி கொலையில் அ.தி.மு.க. புள்ளியா?

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதை நிரூபிக்கும் வகையில் பால்வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணாவின் தம்பி ரவி கொலை அரங்கேறி இருக்கிறது.

ரமணாவின் சித்தப்பா ஜெயராமன். இவரது மகன் ரவி, திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் ரியல் எஸ்டேட் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார். கடந்த 14-ம் தேதி மதியம் பைக்கில் சென்ற ரவியைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர் கூலிப்படையினர். இந்தக் கொலைக்கான பின்னணியை, 'நிலத்தகராறு’ என்று ஒற்றை வார்த்தையில் முடிக்கிறார்கள் போலீஸார்.

கடிதம் வந்தது முன்னே... கத்தி வந்தது பின்னே...

சம்பவ இடத்துக்குச் சென்று மக்களிடம் விசாரித்தோம். ''அமைச்சரின் தம்பி என்பதால் ரவி, ரியல் எஸ்டேட்டில் கோலோச்சி வந்தார். திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலம் சம்பந்தமாக எந்தப் பிரச்னை என்றாலும் பலரும் ரவியிடமே அணுகி இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, செவ்வாய்பேட்டையை அடுத்த பூஜ்யன்கண்டிகையில் மூன்று ஏக்கர் இடத்தை 50 லட்சம் ரூபாய்க்கு விற்க நிலத்தின் உரிமையாளர் முடிவு செய்திருக்கிறார். இந்த இடத்தை செவ்வாய்பேட்டை அ.தி.மு.க பிரமுகரும் ஊராட்சி மன்றத் தலைவருமான வெங்கடேசன் விலைக்கு வாங்க முயற்சித்து இருக்கிறார். அந்த நிலத்தில் ஏற்கெனவே பல வில்லங்கங்கள் இருந்த காரணத்தினால், ஒரு தரப்பினர் ரவியை சந்தித்து அந்த நிலம் பற்றிப் பேசி இருக்கிறார்கள். மற்றொரு தரப்பான நிலபுரோக்கர் நெமிலிச்சேரி திருநாவுக்கரசு மற்றும் முருகன் ஆகியோர் செவ்வாய்பேட்டை அ.தி.மு.க பிரமுகரை அணுகி இருக்கிறார்கள். இதில் ரவிக்கும், வெங்கடேசனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.  ஒரு வாரத்துக்கு முன்பு ரவியின் ஹார்டுவேர்ஸ் கடை முகவரிக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், 'செவ்வாய்பேட்டை நிலம் சம்பந்தமாக பஞ்சாயத்துப் பேசாதே. மீறிப் பேசினால் உன் கதை முடிந்துவிடும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து ரவி, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியபோது ரவியின் ஆதரவாளர்கள், 'நம் கையில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது. ஏன் இப்போது அமைச்சர்கூட நம்ம ஆளுதான். இப்படி இருக்கும்போது இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயந்தால் தொழில்பண்ண முடியாது. எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவியிடம் போனில் பேசிய ஒரு மர்ம நபர், 'செவ்வாய்பேட்டை இடம் விஷயத்தில் தலையிடாதே. மீறினால் உன் தலையை துண்டிச்சிருவோம்’ என்று மிரட்டியிருக்கிறார். ரவி, கடந்த 6-ம் தேதி செவ்வாய்பேட்டை போலீஸில் அ.தி.மு.க பிரமுகர் வெங்கடேசன், திருநாவுக்கரசு, முருகன் ஆகியோர் மீது புகார் கொடுத்திருக்கிறார். வழக்கம்போல போலீஸார் புகாரைக் கிடப்பில்போட, எதிர்த்தரப்பினர் ரவியைப் போட்டுத் தள்ளிவிட்டனர்'' என்றனர்.

கடிதம் வந்தது முன்னே... கத்தி வந்தது பின்னே...

ரவியின் தந்தை ஜெயராமனிடம் பேசியபோது, ''நிலத்தகராறில் என் மகனைக் கொன்னுட்டானுங்க. யாருக்கும் அவன் எந்தத் தொந்தரவும் செய்யலை. தான் உண்டு தன் குடும்பம் உண்டுன்னு இருப்பான்'' என்று கண்கலங்கினார். போலீஸ் டி.எஸ்.பி சந்திரசேகர், ''போலீஸில் ரவி, புகார் கொடுத்தது தெரியாது. கொலையாளிகளைத் தேடி வருகிறோம். நிலத்தகராறில் கொலை நடந்துள்ளது'' என்றார்.

வேப்பம்பட்டு பகுதி மக்கள், ''அமைச்சரின் பெயரைச் சொல்லி ரவி ஆடிய ஆட்டத்துக்கு அளவே கிடையாது. ரமணாவுக்குப் பதவி பறிபோனபோது அடங்கி இருந்த ரவி, மீண்டும் ரமணாவுக்குப் பதவி கிடைத்ததால், 'எங்கள் அண்ணன் அமைச்சர்’ என்று எல்லோரிடமும் அறிமுகமாகிக்கொள்வார்'' என்றனர்.

போலீஸார், ''கடந்த 6-ம் தேதி ரவி, செவ்வாய்பேட்டை அ.தி.மு.க பிரமுகர் மற்றும் ஒருசில நில புரோக்கர்கள் மீது புகார் கொடுத்தார். விசாரணையின்போது சம்பந்தப்பட்டவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இப்போது வெங்கடேசன், திருநாவுக்கரசு ஆகியோரை கைது செய்து இருக்கிறோம். முருகன் உள்பட கூலிப்படையினரைத் தேடி வருகிறோம்'' என்றனர்.

அமைச்சர் பி.வி.ரமணா, ''என் தம்பி எதற்காக கொலை செய்யப்பட்டான் என்ற விவரம் தெரியவில்லை. ரியல் எஸ்டேட் தொழிலில் என்னுடைய பெயரை ரவி, பயன்படுத்தியதாகக் கூறப்படும் தகவல் பொய்யானது. ரவி, என்னுடன் பேசுவது கிடையாது. என்னுடைய வீட்டுக்கோ, தலைமைச் செயலகத்துக்கோ வந்து என்னைச் சந்தித்தது கிடையாது. நான், திருவள்ளூர் சென்றால்கூட அவன் வீட்டுக்குச் செல்வதும் கிடையாது'' என்றார்.

தலைநகரத்துக்கு மிக அருகில் மாநில அமைச்சர் ஒருவரின் தம்பியை பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள். அப்படியானால் சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. தவறு நடந்த பிறகு குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு இல்லை காவல் துறை, தவறு நடக்காமல் தடுப்பதற்குத்தான் என்பதை அவர்கள் எப்போது உணரப் போகிறார்கள்?

- எஸ்.மகேஷ், படம்: தி.குமரகுருபரன்