மெளனம் காக்கும் சபாநாயகர் தனபால்
''ஸ்ரீரங்கம்தான் எனது பூர்வீகம். ஸ்ரீரங்கத்துக்கு வரும்போது, என் தாய்வீட்டுக்கு வருவதுபோல உணர்கிறேன்.

இப்போது நானும் உங்களில் ஒருத்தியாக இருக்க இங்கேயே வந்துவிட்டேன்'' - ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டபோது, ஜெயலலிதா இப்படித்தான் முழங்கினார். 'ஸ்ரீரங்க நாயகி’யாக ஜெயலலிதாவுக்கு மகுடம் சூட்டினாலும், காலம் அந்தக் கொடுப்பினையை அவருக்கு வழங்கவில்லை.
'எம்.எல்.ஏ பதவியை ஒருவர் ராஜினாமா செய்தாலோ, அந்தப் பதவியில் இருந்து ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டாலோ அல்லது தகுதி இழப்புக்கு ஆளானாலோ அந்த எம்.எல்.ஏ-வின் தொகுதி காலியாக உள்ளது; உடனே அங்கு தேர்தல் நடத்த வேண்டும்’ என்று, சட்டமன்றம் தேர்தல் கமிஷனுக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஆனால், ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளது; என அறிவிக்கத்தான் யாருக்கும் 'தில்’ இல்லை. தொகுதி காலியான உண்மை தெரிந்த பிறகும் கனத்த மௌனத்தில் இருக்கிறது சட்டமன்றச் செயலகம்.
இப்படி மௌனம் சாதிப்பது ஏன்? சட்டசபை வளாகத்தில் விசாரித்தோம். '' 'எம்.எல்.ஏ ஒருவர் பதவி விலகினால், அதை சபாநாயகர் ஏற்றுக்கொண்ட பிறகு, சட்டசபை செயலாளர் அதைக் கூடிய விரைவில் அரசிதழில் வெளியிட வேண்டும். அதோடு, காலியான இடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக அரசிதழை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என்று சட்டமன்றப் பேரவை விதி 21 (1) சொல்கிறது.
இதுபற்றி, விதி 288-லும் குறிப்பிடப்பட்டுள்ளது. 'ஓர் உறுப்பினர் குற்றம் செய்ததற்காக கைது செய்யப்பட்டாலோ அல்லது இந்தியாவின் எந்த ஒரு நீதிமன்றத்தினால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலோ, மத்திய அல்லது மாநில அரசுகளின் நிர்வாக ஆணைப்படி காவலில் வைக்கப்பட்டாலோ, தண்டிக்கும் நீதிபதி, குற்றவியல் நீதிபதி (மாஜிஸ்திரேட்) அல்லது நிர்வாக அதிகாரி, அதைப் பற்றிய செய்தியை சபாநாயகருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். அதில் கைது, தண்டனைக்கான காரணம், எந்த இடத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என்கிற விவரங்களை எல்லாம் சொல்ல வேண்டும்.’ தொகுதி காலியாக இருப்பது தொடர்பாக அரசிதழில் வெளியிடப்படும். அதன்பிறகு, அதை முறைப்படி தமிழக தேர்தல்

அதிகாரிக்கு சட்டசபை செயலாளர் அனுப்பி வைப்பார். இதுதான் நடைமுறை. தொகுதி காலியாக இருக்கிறது என்கிற அறிவிப்பை சபாநாயகர்தான் செய்ய வேண்டும் எனச் சொல்கிறது பேரவை விதி. ஆனால், சபாநாயகர் தனபால் இதுபற்றி அறிவிக்கத் தயங்குகிறார். இதற்கான உத்தரவில் தனபால் கையெழுத்துப் போட்டு, பிறகு செயலாளர் ஜமாலுதீன் கையெழுத்துப் போட்டு அது அரசிதழில் வெளியிடப்படும். அதன்பிறகு அதை ஜமாலுதீன் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைப்பார்.
ஜெயலலிதாவால் சபாநாயகர் நாற்காலியில் அமர வைக்கப்பட்ட தனபால், தன் தலைவியின் தொகுதி காலியாக உள்ளது என எப்படி அறிவிக்க முடியும் என்று தயங்கி, நிறுத்தி வைத்துள்ளார். இதுபற்றி சொல்லியும்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சர்களாக இருந்த கருப்பசாமி, மரியம் பிச்சை மற்றும் புதுக்கோட்டை முத்துக்குமார், ஏற்காடு பெருமாள் ஆகியோர் மறைந்தபோது, அவர்கள் இறந்துவிட்டனர் என்ற தகவலும், பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த தகவலும், சட்டசபை ஆவணங்களில் பதிவாகி உள்ளன. ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டதைக் குறிப்பிடாமல் 'ஒத்துழையாமை இயக்கம்’ கடைப்பிடிக்கிறார் தனபால்'' என்கின்றனர் சட்டமன்ற ஊழியர்கள்.
கருப்பசாமி, மரியம் பிச்சை, முத்துக்குமார், பெருமாள் ஆகியோர் மறைந்தபோது, அவர்கள் இறந்துவிட்டனர் என்கிற தகவல் சட்டமன்ற இணையதளத்திலும் இடம்பெற்றன. ஜெயலலிதாவுக்கு 'பதவி பறிப்பு’ என்று எப்படி குறிப்பிட முடியும் என்கிற பயம்தான் தனபாலை வாட்டுகிறது. சட்டமன்றம் அறிவிக்காமல் போனாலும், தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தேர்தல் ஆணையத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டார். ஆகையால், ஸ்ரீரங்கம் தொகுதி ஆறு மாதத்துக்குள் இடைத்தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிடும். அதற்குள் சட்டசபையில் இருந்து தகவல் வருமா என்பது தெரியவில்லை. ஆனால், இதற்காக தி.மு.க நீதிமன்றத்துக்குச் செல்லப்போகிறது என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது.
பொதுத்தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என எந்தத் தேர்தலாக இருந்தாலும் ஜெயலலிதாவின் பிரசாரம் இல்லாமல் அ.தி.மு.க தேர்தல்களைச் சந்தித்தது இல்லை. ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதாவின் பிரசாரம் இருக்குமா என்பது இப்போதைக்கு மில்லியன் டாலர் கேள்வி.
- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி