திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகேயுள்ள ராமாநாயுடு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் தாமு. இவர் மனைவி ராஜராஜேஸ்வரி. இந்தத் தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள். கடந்த ஆண்டு தாமு, ராஜராஜேஸ்வரி இருவரும் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

பெற்றோர் உயிரிழந்த நாள் முதலே, நான்கு மகள்களில் கீச்சலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவந்த சிறுமி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து அந்தச் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சிறுமி இறந்த தகவல் பொதட்டூர்பேட்டை பகுதி போலீஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், சிறுமியின் உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சிறுமியின் தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
சிறுமியின் தற்கொலைக்கு மன உளைச்சல்தான் காரணமா அல்லது வேறு ஏதும் பிரச்னையால் இந்த முடிவை எடுத்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. தாய்-தந்தையை இழந்த சிறுமியின் மரணம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
