Published:Updated:

பசிக் கொடுமையால் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட 5 வயது சிறுவன்! - புதிய சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி!

சிசிடிவி காட்சி
News
சிசிடிவி காட்சி

தள்ளுவண்டிமீது இறந்துகிடந்த 5 வயது சிறுவன், பசிக் கொடுமையால் இறந்திருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், அந்தச் சிறுவனை இரண்டு நபர்கள் தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி சிவக்குமார், கடந்த 20 வருடங்களாக சென்னைக்குச் செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக தள்ளுவண்டியில் இஸ்திரி போட்டுவருகிறார். இவரின் தள்ளுவண்டியின் மீது கடந்த 15-ம் தேதி காலையில், 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பிரேத பரிசோதனைக்காக அந்தச் சிறுவனின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த காவல்துறையினர், குழந்தை படுகொலை செய்யப்பட்டு தள்ளுவண்டியில் வீசப்பட்டானா என்ற சந்தேகக் கோணத்தில் வழக்கு பதிந்து விசாரணையை மேற்கொண்டுவந்தனர்.

தள்ளுவண்டியில் இறந்துகிடந்த சிறுவன்!
தள்ளுவண்டியில் இறந்துகிடந்த சிறுவன்!

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மருத்துவமனை உடற்கூறாய்வு முடிவில், உயிரிழந்த சிறுவன் இரு தினங்களாக உணவு இல்லாமலும், தண்ணீர் இல்லாமலும் பசியில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்தச் செய்தி, கேட்போரின் நெஞ்சங்களை பட படக்கச் செய்தது. அதுவரையில் சிறுவனை யாரும் உரிமை கோராத நிலையில், சிறுவன் யார் என அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரம் காட்டிவந்தனர். அதேபோல, சிறுவனின் உயிரிழப்பு கொலையா அல்லது இயற்கை மரணமா என்ற கோணத்திலும் போலீஸார் தீவிரமாக விசாரித்துவந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில், அந்தச் சிறுவனை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரண்டு சிசிடிவி காட்சிகளில், இருவர் நடந்து செல்கின்றனர். அதில் ஒருவர் அச்சிறுவனைத் தோளில் சுமந்து வருவது போன்ற காட்சியும், உடன் வரும் மற்றொருவர் கையில் ஆயுதம் போன்ற ஒன்றை எடுத்துச் செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது.

விழுப்புரம் மேற்கு காவல் நிலையம்
விழுப்புரம் மேற்கு காவல் நிலையம்
தே.சிலம்பரசன்

இந்த 5 வயது குழந்தையைத் தூக்கி வந்தவர்கள், பழைய பேருந்து நிலையத்திலிருந்து நடந்தே வந்து தள்ளுவண்டிமீது போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த இரண்டு நபர்கள் யார் என அடையாளம் காணும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவரும் காவல்துறையினர், இருவரும் விரைவில் பிடிபடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.