கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். அந்த வீட்டில் டைல்ஸ் போடுதல் மற்றும் இதர பணிகளுக்காக பவன் குமார் என்பவர் உள்பட வடமாநில தொழிலாளர்கள் மூன்றுபேரை கடந்த 3-ம் தேதி அழைத்து வந்துள்ளார். இவர்கள் வீட்டின் மேல்தளத்தில் தங்கி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் மட்டும் இடையில் ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் மீதமிருந்த இருவரும் ஊருக்குச் செல்வதற்காக ஆயத்தமாகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் திடீரென காணாமல் போயுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில் விருத்தாசலம் பகுதியில் வேலை செய்துவந்த பவன்குமாரின் உறவினர் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன் பவன்குமாரை தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்போது தொடர்பு இணைக்கப்படாததினால் சந்தேகமடைந்தவர், விருத்தாசலத்தில் இருந்து பு.மாம்பாக்கம் கிராமத்திற்கு நேரில் வந்து தேடி பார்த்துள்ளார். பவன்குமார் வேலை செய்த வீட்டின் அருகே வந்து பார்த்தபோது, காம்பவுண்ட் சுவர் அருகே கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும் ரத்தக்கரை படிந்த துணிகளும் இருந்துள்ளன. அதை தள்ளி பார்த்தபோது நிலப்பரப்பில் ரத்தம் உறைந்த நிலையில் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர், அருகில் இருந்த மக்களிடம் கூறினாராம். பின், இந்த தகவல் காட்டுத்தீயாக பரவியுள்ளது. மேலும், உளுந்தூர்பேட்டை காவல்துறை அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி மகேஷ் தலைமையிலான உளுந்தூர்பேட்டை காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளின் முன்னிலையில் சந்தேகத்திற்கு இடமான இடத்தை தோண்டியுள்ளனர். அப்போது திடுக்கிடும் உண்மை வெளிப்பட்டுள்ளது.
சுமார் ஒரு அடி ஆழத்திலேயே... தலையில் தாக்கப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்த ஆண் சடலம் ஒன்று கிடைத்துள்ளது. இது யார்? என விசாரணை மேற்கொண்டபோது, பீகார் மாநிலத்தில் இருந்து கட்டட வேலைக்காக அழைத்து வரப்பட்ட பவன்குமார் என்பது தெரியவந்துள்ளது. உடலை மீட்ட காவல்துறை அதிகாரிகள், பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள உளுந்தூர்பேட்டை காவல்துறையினர், தொழிலாளி பவன்குமார் கொலை செய்யப்படுவதற்கான காரணம் என்ன? உடன் தங்கியிருந்த இளைஞர் எங்கே சென்றார்? அவர்தான் கொலை செய்தாரா? உள்ளிட்ட பல சந்தேக கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read
இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல்துறையினரிடம் பேசினோம். "தகவலின் பேரில் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். வி.ஏ.ஓ புகாரை தொடர்ந்து 174வது பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. உடற்கூறாய்வு முடிவு வந்ததும், அதன் அடிப்படையில் புகார் பிரிவு மாற்றப்படலாம். தொழிலாளி கொன்று புதைக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் குற்றவாளி குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.