Published:Updated:

காளை முட்டி இளைஞர் மரணம்; வன்முறைக்களமான எருதுவிடும் விழா - போலீஸார் தீவிர விசாரணை..!

உயிரிழந்த இளைஞர்

எருதுவிடும் விழாவில், காளை மாடு முட்டியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த இளைஞரின் மரணத்துக்கு போலீஸார் நடத்திய தடியடிதான் காரணம் என்று தகவல் பரவியதால், கூடியிருந்த இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

காளை முட்டி இளைஞர் மரணம்; வன்முறைக்களமான எருதுவிடும் விழா - போலீஸார் தீவிர விசாரணை..!

எருதுவிடும் விழாவில், காளை மாடு முட்டியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த இளைஞரின் மரணத்துக்கு போலீஸார் நடத்திய தடியடிதான் காரணம் என்று தகவல் பரவியதால், கூடியிருந்த இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

Published:Updated:
உயிரிழந்த இளைஞர்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளிக்கு அருகிலிருக்கும் கல்நார்சாம்பட்டி கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி நேற்று எருதுவிடும் விழா நடைபெற்றது.

இதில், 200 மாடுகள் ஓடுவதற்கு அட்டை வழங்கப்பட்டு, மதியம் 2:30 மணி வரை 150 மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டது. பின்னர், விழாக் குழுவினர் கேட்டுக்கொண்டதால், 2:45 மணியளவில் மேலும் மூன்று மாடுகள் மட்டும் ஓட தாசில்தார் குமார் அனுமதி வழங்கினார். இதையடுத்து, எருதுவிடும் விழா முடிவடைந்ததாக விழாக் குழுவினர் அறிவித்தனர். இதைச் சில மாடுகளின் உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ளாமல், தங்களது மாடுகளையும் ஓடவிட அனுமதி கேட்டனர். அதற்கு தாசில்தார் ‘முடியாது’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ஒருசில மாடுகளின் உரிமையாளர்கள் வேண்டுமென்றே போலீஸார், பொதுமக்கள் நின்றிருந்த பாதையில், மாடுகளை அவிழ்த்துவிட்டனர். அந்த நேரத்தில், கூட்டத்தைக் கலைக்க போலீஸாரும் தடியடி நடத்தினர்.

உயிரிழந்த இளைஞர்
உயிரிழந்த இளைஞர்

மாடுகள் சீறிப்பாய்ந்து ஓடியதால், கூடியிருந்த மக்களும் அச்சத்தில் கலைந்து ஓடினர். அப்போது, ஒரு காளை மாடு முட்டியதில் ஜோலார்பேட்டை அருகிலிருக்கும் பெரியகம்மியம்பட்டு மேல் முஸ்லிம் தெருவைச் சேர்ந்த முஷ்ரப் என்ற 19 வயது இளைஞருக்கு வயிற்றுப் பகுதியில் ஆழமாக காயம் ஏற்பட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக புதுப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் கவலைக்கிடமான நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், முஷ்ரப் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள். இதனிடையே, சம்பவ இடத்தில் போலீஸார் தாக்கியதால்தான் முஷ்ரப் உயிரிழந்தார் என்றவாறு ஒரு தகவல் பரவியதால், விழா நடந்த இடம் வன்முறைக்களமாக மாறியது. அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள், போலீஸாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

உடைந்த ஒரு லத்தி இளைஞர்களின் கையில் சிக்கியதால், அந்த லத்தியைக் காட்டி இளைஞரின் மரணத்துக்குப் போலீஸார்தான் காரணம் என்று சத்தம் போட ஆரம்பித்தனர். சம்பவ இடத்தில் பதற்றம் கூடியதால், அதிவிரைவுப்படை வரவழைக்கப்பட்டு, கூட்டத்தைக் கலைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணன், சப்-கலெக்டர் லட்சுமி ஆகியோரும் விரைந்துவந்து, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரை அழைத்து கல்நார்சாம்பட்டி கிராமத்திலிருக்கும் நடுநிலைப்பள்ளியின் உள்ளே நின்றபடி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, சில இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், திருமால் என்ற ஆயுதபடைக் காவலருக்கு வலதுபக்க கண்புருவத்தில் காயம் ஏற்பட்டது. எஸ்.பி., சப்-கலெக்டரின் கார்கள் மீதும் கல்லெறியப்பட்டன. இதில், அந்த கார்களின் கண்ணாடி, இரண்டு போலீஸ் வேன்களின் கண்ணாடிகளும் உடைந்தன.

போலீஸார் தடியடி நடத்திய காட்சி
போலீஸார் தடியடி நடத்திய காட்சி

இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி அந்தப் பகுதியைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். சம்பவ இடத்தில், வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமியும் நேரில் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டுவருகிறார். வன்முறையில் ஈடுபட்டதாக 30-க்கும் மேற்பட்ட இளைஞர்களையும் பிடித்து போலீஸார், காவலில் வைத்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தால், நள்ளிரவு முழுவதும் பெரும் பரபரப்பான சூழ்நிலை அந்தப் பகுதியில் நிலவியது.

இது தொடர்பாக, எஸ்.பி பாலகிருஷ்ணன் காணொளி ஒன்றை வெளியிட்டு பேசியிருக்கிறார். அதில், ‘‘கூட்டத்துக்குள் அவிழ்த்துவிடப்பட்ட மாடு முட்டியதில்தான் இளைஞர் முஷ்ரப் உயிரிழந்திருக்கிறார். இது தெரிந்தும், கிராம இளைஞர்கள் 300-க்கும் மேற்பட்டோர், மதுபோதையில் தகராறு செய்து சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்’’ என்று கூறியிருக்கிறார்.

உயிரிழந்த இளைஞர்
உயிரிழந்த இளைஞர்

அதோடு, திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை ஓர் எச்சரிக்கைப் பதிவையும் வெளியிட்டிருக்கிறது. அதில், ‘‘கல்நார்சாம்பட்டி வன்முறை தொடர்பாக நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, சம்பவ இடத்திலுள்ள சி.சி.டி.வி பதிவுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே, இச்சம்பவம் தொடர்பாக உண்மைத்தன்மை அறியாமல், தேவையின்றி வீண் வதந்திகளை பரப்புவோர்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.