Published:Updated:

தந்தையுடன் மீன்பிடிக்கச் சென்ற சிறுவன் சிறைப்பிடிப்பு; சிறுநீரகம் பாதித்த மகனை நினைத்து கதறும் தாய்!

சோகத்தில் மூழ்கியிருக்கும் மீனவக் குடும்பம்

இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட, சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தன் மகனை மீட்டுத் தரும்படி மத்திய, மாநில அரசுகளுக்குத் தாய் கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

தந்தையுடன் மீன்பிடிக்கச் சென்ற சிறுவன் சிறைப்பிடிப்பு; சிறுநீரகம் பாதித்த மகனை நினைத்து கதறும் தாய்!

இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட, சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தன் மகனை மீட்டுத் தரும்படி மத்திய, மாநில அரசுகளுக்குத் தாய் கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Published:Updated:
சோகத்தில் மூழ்கியிருக்கும் மீனவக் குடும்பம்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நவம்பர் 5-ம் தேதி மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற இரண்டு விசைப்படகுகள், 14 மீனவர்கள், ஒரு சிறுவன் என 15 பேரை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைதுசெய்து தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

இந்தச் சூழ்நிலையில் பிடிபட்ட15 பேரில் தங்கச்சிமடம் ராஜா நகர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராயப்பன், அவரின் மகன் குடும்ப வறுமை காரணமாக தந்தையுடன் மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையால் கைதாகியிருக்கிறார். மேலும், அந்தச் சிறுவனுக்கு சிறுநீரகக் கோளாறு இருக்கும் காரணத்தால் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுவருவதாலும் மத்திய, மாநில அரசுகள் துரித முயற்சி மேற்கொண்டு இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட சிறுவனை உடனடியாக மீட்டுத் தரக் கோரி அவரின் தாய் மெர்லின் கண்ணீர்மல்க அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மகனை நினைத்து கதறி அழும் தாய் மெர்லின்
மகனை நினைத்து கதறி அழும் தாய் மெர்லின்

இது குறித்து நம்மிடம் அவர் கண்ணீர்மல்கப் பேசுகையில், "ஏற்கனவே என் கணவர் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை அரசு எங்கள் படகையும், என் கணவரையும் கைதுசெய்தது. பின்னர் என் கணவரை விடுதலை செய்த இலங்கை அரசு படகை விடுவிக்கவில்லை. கடன் வாங்கி வாங்கப்பட்ட விசைப்படகில் மீன்பிடித்து, கொஞ்சம் கொஞ்சமாகக் கடனை அடைத்துவருகிறோம்.

விடுமுறை நாள் என்பதால், தந்தையுடன் கடலுக்கு மீன்பிடிக்க என் மகன் சென்றான். அவர்களை இலங்கை அரசு கைதுசெய்திருக்கிறது. என் மகனுக்கு சிறுநீரக பாதிப்பு இருக்கிறது. அவனை மட்டுமாவது விடுதலை செய்யுங்கள். அவனுக்கு தினமும் மருந்து, மாத்திரைகள் கொடுக்க வேண்டும். என் மகனை எப்படியாவது மீட்டுத் தாருங்கள்” என கதறி அழுதார்.

மெர்லின்
மெர்லின்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளையும், இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தத்தில் மீனவ சங்கத்தினர் ஒன்றிணைந்து மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கின்றனர்.

இந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட 14 மீனவர்களையும் வருகிற 17-ம் தேதி வரை சிறையில் அடைக்க அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கைதுசெய்யப்பட்ட மீனவர்களில் சிறுவனை அங்குள்ள தனியார் இல்லத்தில் வைத்து பராமரிக்கவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.