Published:Updated:

நெல்லை: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.15 லட்சம் இழப்பு; மனஉளைச்சலில் விபரீத முடிவெடுத்த இளைஞர்!

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த சிவன்ராஜ்

விவசாயியான தன்னுடைய தந்தையிடம் நிலங்களை விற்கச் சொல்லி நிர்பந்தம் கொடுத்து, அந்தப் பணத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிவந்த கார் டிரைவர், 15 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால், கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.

நெல்லை: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.15 லட்சம் இழப்பு; மனஉளைச்சலில் விபரீத முடிவெடுத்த இளைஞர்!

விவசாயியான தன்னுடைய தந்தையிடம் நிலங்களை விற்கச் சொல்லி நிர்பந்தம் கொடுத்து, அந்தப் பணத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிவந்த கார் டிரைவர், 15 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால், கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.

Published:Updated:
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த சிவன்ராஜ்

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடைசெய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துவருகிறார்கள். அதற்காக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இதுவரை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் கொடுக்காததால், ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகும் பலர், பணத்தை இழந்த சோகத்தில் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் வாடிக்கையாகிவிட்டன. பெண்கள்கூட ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு அடிமையாகி, பணத்தை இழந்து தற்கொலை செய்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை 25-க்கும் அதிகமானோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம், பணகுடி பகுதியைச் சேர்ந்த சிவன்ராஜ் என்பவர், ஆன்லைன் ரம்மி விளையாடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்களை வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது. வாடகை கார் ஓட்டுநராகப் பணியாற்றிவந்த அவர், கடந்த சில வருடங்களாகவே ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாக இருந்திருக்கிறார்.

உயிரிழந்த சிவன்ராஜின் தந்தை பாஸ்கர்
உயிரிழந்த சிவன்ராஜின் தந்தை பாஸ்கர்

ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக விவசாயியான தன் தந்தை பாஸ்கரிடம் அடிக்கடிப் பணம் கேட்டு தொல்லை கொடுத்துவந்திருக்கிறார். மகனின் நெருக்கடியைத் தாங்க முடியாத பாஸ்கர், தன் நிலங்களை விற்று பணம் கொடுத்திருக்கிறார். அவற்றைவைத்து ரம்மி விளையாடிய சிவன்ராஜ் தொடர்ச்சியாகத் தோல்வியையே சந்தித்திருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளில் 15,00,000 ரூபாயை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்த சிவன்ராஜ், இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் தந்தையிடம் பணம் கேட்டிருக்கிறார். அவரும் தன்னிடமிருந்த கடைசி நிலத்தை 6,00,000 ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறார். அதை வாங்கியவர், நேற்று ஒரு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் தொகையாகக் கொடுத்திருக்கிறார். ஆனால், அந்தப் பணத்தை ஒரே இரவில் சிவன்ராஜ் ரம்மி விளையாட்டில் இழந்திருக்கிறார்.

தற்கொலை
தற்கொலை
சித்திரிப்புப் படம்

தந்தையிடம் தொடர்ந்து பணத்தை வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்ததால், மனஉளைச்சலில் இருந்திருக்கிறார். அதனால் நேற்று இரவு விஷமருந்திய அவர், தன்னுடைய சித்தி மகளிடம் விஷம் அருந்தியதையும், அதற்குக் காரணமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு இருந்ததையும் தெரிவித்து வருந்தியிருக்கிறார். உடனடியாக உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த கார் டிரைவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.