ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சார்நிலை கருவூலத்தில் கணக்கராகப் பணிபுரிந்துவருபவர் முதுகுளத்தூர் அருகேயுள்ள கீழத்தூவல் பகுதியைச் சேர்ந்த முனியாண்டியின் மகன் முனியசாமி. இவர் கடந்த மாதம் 7-ம் தேதி அலுவலகத்தில் ஓய்வூதியக் கணக்கிலிருந்த பணத்தைத் தன்னுடைய நண்பரான ஜீவா என்பவருடைய ராமநாதபுரம் வங்கிக் கணக்குக்கு ரகசியக் குறியீட்டைப் பயன்படுத்தி ரூ.9,24,972 அனுப்பி கையாடல் செய்திருக்கிறார். இதேபோல கடந்த 5-ம் தேதி அவரது வங்கிக் கணக்குக்கு ரூ.20 லட்சம் அனுப்பி கையாடல் செய்திருப்பதும், கருவூலத்தில் நடைபெற்ற தணிக்கையின்போது மேற்கண்ட ரூ.29 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து முதுகுளத்தூர் சார்நிலை கருவூல, உதவி கருவூல அதிகாரி சையது சிராஜுதீன் கணக்கர் முனியசாமி செய்திருக்கும் பண மோசடி குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் செய்தார். அவரின் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி ஆகியோர் வழக்கு பதிவுசெய்து சார்நிலை கருவூலத்தில் அரசுப் பணத்தைக் கையாடல் செய்த கணக்கர் முனியசாமியைத் தேடிவருகின்றனர்.
மேலும், அவரது வங்கிக் கணக்குகளை ஆய்வுசெய்ததில் ஒவ்வொரு மாதமும் பல லட்சம் ரூபாய் அரசுப் பணத்தை வேறொருவர் வங்கிக் கணக்குக்கு மாற்றியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தலைமறைவாக இருக்கும் முனியசாமி கைதுசெய்யப்படும்பட்சத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.