Published:Updated:

மும்பை: போலி கொரோனா தடுப்பூசி முகாம்; தடுப்பூசி மருந்தில் தண்ணீர் கலந்த டாக்டர் தம்பதி கைது!

தடுப்பூசி சித்திரிக்கப்பட்ட படம்
தடுப்பூசி சித்திரிக்கப்பட்ட படம்

மும்பையில் போலி தடுப்பூசி முகாம் நடத்தியவர்களுக்கு, வீணாகும் தடுப்பூசிக் கழிவுகளைக் கொடுத்து உதவிய டாக்டர் தம்பதி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மும்பையில் ஏராளமான இடங்களில் போலி கொரோனா தடுப்பூசி முகாம்க்கள் நடத்தப்பட்டு கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் 2,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோசடி தொடர்பாக ஏற்கெனவே நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தியது போக எஞ்சியிருக்கும் தடுப்பூசி மருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகளை எடுத்துவந்து அதில் சிறிது தண்ணீரைக் கலந்து பொதுமக்களுக்கு தடுப்பூசியாகச் செலுத்தி ஏமாற்றியுள்ளனர்.

கைது
கைது

இந்த வீணாகும் தடுப்பூசிக் கழிவுகளைக் கொடுத்து உதவியது சார்க்கோப்பில் இருக்கும் சிவம் மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் சிவ்ராஜ் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து சிவ்ராஜ், அவரின் மனைவி டாக்டர் நீதா ஆகியோர் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டனர். இந்த டாக்டர் தம்பதி கொடுத்த வீணான மற்றும் காலாவதியான மருந்துகள் மூலமே காந்திவலி ஹவுஸிங் சொசைட்டியில் 390 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. டாக்டர் சிவ்ராஜ் மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதிவரை தனது மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தியிருக்கிறார். இந்த முகாமில் பயன்படுத்தப்பட்ட பிறகு தூக்கி எறியப்படும் மற்றும் பயன்படுத்தப்படாத தடுப்பூசிகளை டாக்டர் சிவ்ராஜ், மகேந்திரா என்பவரிடம் கொடுத்துள்ளார். மகேந்திராவும், டாக்டர் மணீஷ் என்பவரும் சேர்ந்துதான் மும்பை முழுவதும் போலி தடுப்பூசி முகாம்களை நடத்தி மோசடி செய்துள்ளனர். மும்பை முழுக்க இவர்கள் நடத்திய போலி தடுப்பூசி முகாமில் 1.5 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். வழக்கமாக முகாம்களில் பயன்படுத்திய பிறகு எஞ்சிய தடுப்பூசியை மாநகராட்சி நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும். ஆனால் டாக்டர் சிவ்ராஜ் மாநகராட்சியிடம் கொடுக்காமல், அதை மகேந்திரா மற்றும் டாக்டர் மணிஷ் ஆகியோரிடம் கொடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதோடு டாக்டர் சிவ்ராஜ் தனது மருந்துவமனையில் நடந்த தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு முழு அளவு மருந்தையும் செலுத்தாமல், குறிப்பிட்ட அளவு மருந்தைச் சேமித்துள்ளார். அந்த மருந்தைத்தான் டாக்டர் சிவ்ராஜ் மோசடிப் பேர்வழிகளுக்குக் கொடுத்து உதவியுள்ளார். இதுவரை போலி தடுப்பூசி முகாம் தொடர்பாக ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொய்வாடா, பாங்குர் நகர், போரிவலி போலீஸார் இந்த வழக்குகளை பதிவு செய்துள்ளனர். பொய்வாடாவில் போலி தடுப்பூசி முகாம் நடத்தியதாக ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த போலி தடுப்பூசி முகாம்களால் மக்கள் தங்களது குடியிருப்புகளில் தடுப்பூசிமுகாம் நடத்த அச்சம் அடைந்துள்ளனர். ஏழு வழக்குகள் தொடர்பாக 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு