சேலம், தாதகாபட்டியைச் சேர்ந்தவர்கள் யுவராஜ் - மான்விழி தம்பதியர். இவர்கள் சேலத்திலுள்ள தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு நிதிஷா (7), அக்ஷரா (5) என்கிற இரண்டு மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் நிதிஷா கடந்த மூன்று ஆண்டுகளாக சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு தினமும் இன்சுலின் ஊசி செலுத்திவந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்களின் இரண்டாவது மகள் அக்ஷராவுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. பின்னர் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டபோது அவரும் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் மிகவும் மன உளைச்சலுக்குத் தள்ளப்பட்டனர் தம்பதியர். இரண்டு குழந்தைகளுக்குமே சர்க்கரைநோய் வந்துவிட்டதே... இந்தச் சிறிய வயதில் இவர்கள் இப்படிக் கஷ்டப்பட வேண்டுமா என்று குழந்தைகளுடன் தாங்களும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவுசெய்துள்ளனர். இதையடுத்து தாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு, யுவராஜ் தன் மனைவி மான்விழி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தனது மோட்டார் சைக்கிளில் மேட்டூர் அருகே கொளத்தூர் கர்நாடக - தமிழக எல்லை அருகே காவிரி ஆற்றில் இரண்டு குழந்தைகளையும் தள்ளிவிட்டுட்டு, தாங்களும் காவிரியில் குறித்து தற்கொலை செய்துகொண்டனர்.
சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் தற்கொலை செய்துகொண்ட கூலித்தொழிலாளி வீட்டில் உள்ள கடிதத்தைக் கைப்பற்றியதுடன், தற்கொலை செய்துகொண்டவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.