Published:Updated:

புதுக்கோட்டை: 9 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை; இளைஞருக்கு 6 ஆண்டுகள் சிறை!

குற்றவாளி உதயச்சந்திரன்
குற்றவாளி உதயச்சந்திரன்

குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து, தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.2,00,000 அரசு சார்பில் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டப்பட்டது.

2019-ம் ஆண்டு, புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வடக்கிப்பட்டியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த உதயச்சந்திரன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக, சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் குற்றம் உறுதிசெய்யப்பட்ட நிலையில், உதயச்சந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். கடந்த 2019-ல் நடந்த இந்தச் சம்பவம் குறித்த வழக்கு, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கு இறுதி விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி முனைவர் சத்யா, ``குற்றவாளிக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து, தீர்ப்பளித்தார்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

அபராதத்தைக் கட்டத் தவறும் பட்சத்தில் மேலும் ஒரு வருடம் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.2,00,000 அரசு சார்பில் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து, குற்றவாளி திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அரசுத் தரப்பில் அரசு வழக்கறிஞர் அங்கவி ஆஜராகி வாதாடினார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக, சிறப்பாகப் புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் கருணாகரன், முதல்நிலைக் காவலர் நாகநாதன் ஆகியோரை புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் வெகுவாகப் பாராட்டினார்.

அடுத்த கட்டுரைக்கு