Published:Updated:

மும்பை: `ஆடைகள் ஏன் தரம் குறைவாக இருக்கின்றன?’ - கடைக்காரரின் கைவிரல்களை வெட்டிய வாடிக்கையாளர்

நம்பர் பிளேட் இல்லாமல் பிடிபட்ட வாலிபர்

மும்பையில் தரம் குறைந்த ஆடைகளை விற்பனை செய்ததாக கடைக்காரரின் விரல்களை வாடிக்கையாளர் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மும்பை: `ஆடைகள் ஏன் தரம் குறைவாக இருக்கின்றன?’ - கடைக்காரரின் கைவிரல்களை வெட்டிய வாடிக்கையாளர்

மும்பையில் தரம் குறைந்த ஆடைகளை விற்பனை செய்ததாக கடைக்காரரின் விரல்களை வாடிக்கையாளர் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
நம்பர் பிளேட் இல்லாமல் பிடிபட்ட வாலிபர்

மும்பையில் தரம் குறைந்த ஆடை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் கடைக்காரர் ஒருவரின் கைவிரல்களை வாடிக்கையாளர் அரிவாளால் வெட்டி எடுத்துவிட்டார். மும்பை பாந்த்ரா பகுதியில் ரெடிமேட் ஆடைகளை விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் ஆதிக் குரேஷி (22). இவரின் கடைக்கு ஆடை வாங்க லதீப் ஆசிக் அலி என்பவர் தனது நண்பருடன் வந்தார். ஆடைகளை ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஆடைகளின் தரம் சரியில்லை என்று லதீப் தெரிவித்தார். இதனால் லதீப்புக்கும், குரேஷிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது கடைசியில் சண்டையில் முடிந்தது. உடனே லதீப் சம்பவ இடத்திலிருந்து சென்றுவிட்டார்.

கைதான லதீப்
கைதான லதீப்

ஆனால் இந்தச் சம்பவம் நடந்த இரண்டு நாள் கழித்து லதீப் தன் நண்பர்கள் சிலருடன் குரேஷியை கொலை செய்யும் நோக்கத்தில் வந்தார். இரவில் குரேஷி தனது கடையை மூடிவிட்டு சாந்தாகுரூசில் உள்ள தனது வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது லதீப்பும் அவரின் நண்பர்களும் பைக்கில் சென்று மடக்கினர். அவர்கள் குரேஷியை ஆட்டோவிலிருந்து வெளியில் இழுத்து அரிவாளால் வெட்டினர். உடனே குரேஷி தன்னைப் பாதுகாத்துக்கொள்ள கையைக்கொண்டு தடுத்தார். இதில் குரேஷியின் இரண்டு கைவிரல்கள் துண்டிக்கப்பட்டன. உடனே லதீப்பும் அவரின் நண்பர்களும் தப்பிச்சென்றுவிட்டனர். குரேஷியை அவரின் நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர். கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் லதீப் வீட்டு முகவரியைக் கண்டுபிடித்தனர். அவரின் மொபைல் போன் மூலம் லதீப் நடமாட்டத்தை போலீஸார் தீவிரமாகக் கண்காணித்துவந்தனர். இந்த நிலையில் லதீப் பாந்த்ராவில் நம்பர் பிளேட் இல்லாத ஸ்கூட்டரை ஓட்டிச்சென்றிருக்கிறார். இதை கவனித்த போக்குவரத்துக் காவலர் கிரண் ராஜ்புத், உடனே லதீப்பை பிடித்தார். சம்பவ இடத்திலிருந்து லதீப் தப்பிச்செல்ல முயன்றார். எனினும் காவலர் கிரண் அவரை மடக்கிப் பிடித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்றார். ஏற்கெனவே லதீப் நடவடிக்கையை போலீஸார் மொபைல் மூலம் கண்காணித்துவந்தனர். அவர் போலீஸ் கட்டுப்பாட்டில் இருப்பதைத் தெரிந்துகொண்டு உடனே வந்து அவரைக் கைதுசெய்தனர். அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.