Published:Updated:

கொள்ளை பணத்தில் சினிமா... நடிகைகளுடன் சொகுசு வாழ்க்கை... `பலே’ முருகனின் கதை!

கூலிங்கிளாஸ், ஹைடெக் கார் என 'டிப்டாப்' ஆசாமியாக வலம்வரும் முருகனுக்கு, போலீஸாரே சல்யூட் அடித்து வழியனுப்பிவைத்த வைபவம் ஏராளம். இவர், வீசிய பணத்துக்காக காவல்துறை அதிகாரிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இப்போதும் 'பவ்யம்' காட்டுகிறார்கள். இதுதான் 'கொள்ளையன்' முருகனின் பலம்.

Murugan with police
Murugan with police

முள் புதரில் வீசப்பட்ட கறுப்பு பை...

கடந்த 2- ம்தேதி அதிகாலை நடைபெற்ற, திருச்சி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள், மிக்கி மவுஸ் முகமூடி, ஜெர்கின் மற்றும் கையுறைகள் அணிந்திருந்தது சிசிடிவி கேமரா பதிவுகளில் தெரியவந்தது. முதலில் கொள்ளை நடந்தவிதம், உடை, பாவனைகளை வைத்து கொள்ளையர்கள் வடமாநிலத்தவராக இருக்கலாம் என சந்தேகித்தனர். கொள்ளையன் சிக்னலுக்காக நூலைப் பயன்படுத்தியது சிசிடிவி -யில் தெளிவானது. தொடர்ந்து அமைக்கப்பட்ட 7 தனிப்படை, விசாரணையைத் தொடங்கியது. அடுத்து, திருச்சி மட்டுமில்லாமல் தமிழகம் முழுக்க போலீஸார் அலர்ட் செய்யப்பட்டனர்.

திருச்சியில் கொள்ளையடிக்கப்பட்ட லலிதா ஜுவல்லரி
திருச்சியில் கொள்ளையடிக்கப்பட்ட லலிதா ஜுவல்லரி

கடந்த 3-ம் தேதி மாலை 5.30 மணியளவில், திருவாரூர் மடப்புரம் பாலம் அருகில் எஸ்ஐ பாரதநேரு தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியே வந்த பைக்கை போலீஸார் நிறுத்தினர். ஆனால், பைக் நிற்காமல் சென்றது. அதைத் தொடர்ந்து, எஸ்ஐ அந்த பைக்கை விரட்டினார். இதைக் கவனித்த, பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த நபர், சட்டென பைக்கிலிருந்து குதித்து ஓட்டமெடுத்தார். அப்போது, அவர் வைத்திருந்த கறுப்பு பையை, அருகிலிருந்த முட்புதரில் வீசிவிட்டு எஸ்கேப் ஆக, அதைக் கவனித்த வழிப்போக்கர் ஒருவர், பையை எடுத்து எஸ்ஐ-யிடம் கொடுத்தார்.

போலீஸாரின் 5 மணி நேரத் தாமதம், தப்பியோடிய சுரேஷ் மற்றும் முருகன் ஆகியோரைப் பிடிக்கக் கிடைத்த `கோல்டன் ஹவர்ஸ்’ (Golden Hours) மிஸ் ஆகி, குற்றவாளிகள் எஸ்கேப் ஆகக் காரணமானது.

கொள்ளையர்களைக் கோட்டைவிட்ட போலீஸார்...

பையைப் பெற்றுக்கொண்ட எஸ்ஐ, திருவாரூர் நகர காவல் நிலையத்துக்கு மணிகண்டனை அழைத்துச்சென்றார். அங்குவைத்து பையைப் பிரித்துப் பார்த்தபோதுதான், அதில் 4.5 கிலோ தங்கநகைகள் இருந்தது தெரிந்தது. மேலும், தப்பியோடியது பிரபல கொள்ளையன், திருவாரூர் முருகனின் மைத்துனர் சீராத்தோப்பு சுரேஷ் என்பது தெரியவந்தது.

போலீஸார், அவரிடம் இரவு 10.45 மணி வரை யாருக்கும் தெரியாமல் விசாரித்தார்கள். 5 மணி நேரம் கழித்துதான், நகைகள் மற்றும் கொள்ளையன் மணிகண்டன் புகைப்படங்கள் வெளியானது. அதைப் போலீஸாரே பரப்பினர். போலீஸாரின் 5மணி நேரத் தாமதம், தப்பியோடிய சுரேஷ் மற்றும் முருகன் ஆகியோரைப் பிடிக்கக் கிடைத்த `கோல்டன் ஹவர்ஸ்’ (Golden Hours) மிஸ் ஆகி, குற்றவாளிகள் எஸ்கேப் ஆகக் காரணமானது.

Lalitha jewellery Robbery
Lalitha jewellery Robbery

தகவலறிந்து விரைந்து வந்த ஏடிஎஸ்பி அன்பழகன், நகர டிஎஸ்பி நடராஜன், தஞ்சாவூர் டிஐஜி லோகநாதன் மற்றும் திருச்சி மாநகர துணை ஆணையர் மயில்வாகனன் உள்ளிட்ட பலரும் மணிகண்டன், தப்பியோடிய சுரேஷின் தாய் கனகவல்லி, மாரியப்பன், ரவி, குணா உள்ளிட்டோரைப் பிடித்துவந்து விசாரித்தனர்.

Manikandan
Manikandan

விசாரணையில் மணிகண்டன், “சுரேஷ் என்னுடைய நண்பன். `தஞ்சாவூரிலிருந்து ரயிலில் நீடாமங்கலம் வருகிறேன், என்னை வீட்டில் விட்டுவிடு’ என போன் செய்தார். அதன்படி சுரேஷை பைக்கில் அழைத்துவந்தேன். அவ்வளவுதான்” என்றார். இவர்களை தஞ்சை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் வைத்து பல மணி நேரம் விசாரித்தும் பலனில்லை.

திருச்சி போலீஸார், கடந்த 5-ம் தேதி மாலை இருவரையும் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இருவரையும் 18-ம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி திரிவேணி உத்தரவிட்டுள்ளார். தப்பியோடிய முருகன், சுரேஷ் உள்ளிட்ட 7 பேருக்கு போலீஸார் வலைவீசி உள்ளனர்.

ரகசிய இடத்தில் சுரேஷ்…

முன்னதாக அவர்களிடம், திருச்சி டிசி மயில்வாகனம் சுமார் 8 மணி நேரம் தனியாளாய் விசாரணை நடத்தினாராம். அப்போது, லோக்கல் போலீஸாரை நெருங்கவே விடவில்லை. இனி, திருவாரூர் போலீஸாரை நம்பி பலனில்லை என்பதால், அவர் தனிப்படை அதிகாரிகளை உஷார்படுத்தியுள்ளாராம். அதன்படி கடந்த 5-ம் தேதியே பிடிபட்டுவிட்ட சுரேஷை, திருவாரூரில் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை விசாரித்து வருவதாகச் சொல்கிறார்கள்.

முருகனைப் பிடித்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் இந்த ரகசிய விசாரணையாம். விசுவாசமான போலீஸார், மிச்சமிருக்கும் 25 கிலோ நகையையும், முருகனையும் காப்பாற்ற நினைத்து, சுரேஷ் சிக்கிவிட்ட தகவலைப் பரப்பினர். ஆனால், திருச்சி மாநகர போலீஸ் ஆணையர் அமல்ராஜ், சுரேஷ் கைதை மறுத்துவருகிறார். இதனால், போலீஸாருக்குள்ளே லடாய் தொடர்கிறது.

பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் திருச்சி ஐ.ஜி வரதராஜு
பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் திருச்சி ஐ.ஜி வரதராஜு

எஸ்ஐ கண்ணன் எங்கே..?

இப்படியிருக்க, முக்கிய குற்றவாளிகளே சிக்காதநிலையில் கடந்த 4-ம் தேதி இரவு, திருச்சி ஐஜி வரதராஜு, குற்றவாளிகளைப் பிடித்ததற்காக பாரதநேரு உள்ளிட்ட 7 போலீஸாருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். அப்போது ஐஜி, “எஸ்ஐ கண்ணன் எங்கே?” எனக் கேட்டாராம். யார் அந்தக் கண்ணன் என்பதும், ஐஜி அவசரமாக பாராட்டு வழங்கவேண்டிய அவசியம் என்னவென்பது குறித்தும் தனிப்படை போலீஸார் புலம்புகிறார்கள்.

மாமா தயாரிப்பில்... மைத்துனர் கதாநாயகன்...

பல்வேறு மாநிலங்களில் நடந்த பெரிய கொள்ளைகளில் மூளையாகச் செயல்பட்டவர், முருகன் என்கிற பாலமுருகன். திருவாரூர், சீராத்தோப்புதான் சொந்த ஊர். முருகனுக்கு சிறுவயதிலிருந்தே சினிமாமீது தீராத ஆசை. ஆரம்பத்தில் சிறுசிறு திருட்டில் ஈடுபட்ட இவர், நாளடைவில் பெரிய திருட்டுகளில் ஈடுபட ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகள் பேசும் இவர், சில வருடங்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை அடுத்த பூஞ்சேரிக்கு குடிபெயர்ந்த முருகன், தனது கூட்டாளிகளான தினகரன், கோபால், சுரேஷ் உள்ளிட்டோருடன் இயங்கிவந்தார். முருகனுக்கு தினகரன்தான் எல்லாம். கொள்ளையடித்த நகைகளை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தாஸ் என்பவர் மூலம் பணமாக மாற்றுவதில் தினகரன் கில்லாடியாம்.

போகும் இடங்களுக்குத் தனது மனைவி மற்றும் தத்துக் குழந்தைகளை அழைத்துச்சென்று குடும்பமாகத் தங்கிவிடுவது முருகன் ஸ்டைல்.
`திருவாரூர்' முருகன்
`திருவாரூர்' முருகன்

மேலும், முருகன் கையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் உள்ள வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் குறித்த லிஸ்ட் உள்ளது. அதன்படி முதலில் கிராமப்புற வங்கிகளைக் குறிவைத்த முருகன், ஆந்திரா மாநிலம், சைபராபாத் மற்றும் சித்தூரில் இயங்கிவரும் டெக்கான் கிராமீனா வங்கிகளில் 18 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்தார்.

பூஞ்சேரியில் தங்கியிருக்கும் முருகன், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கைவரிசை காட்டிவந்தார். பிறகு, திருவாரூர், ஹைதராபாத், ஆந்திரமாநிலம், கிஷ்மத்பூர், ஹிம்யஸ்த்சாகர், ஷம்ஷாபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனக்குச் சொந்தமான வீடுகளில் பதுங்கிக்கொள்வாராம். அப்படி போகும் இடங்களுக்குத் தனது மனைவி மற்றும் தத்துக் குழந்தைகளை அழைத்துச்சென்று குடும்பமாகத் தங்கிவிடுவது முருகன் ஸ்டைல். இருக்கும் இடம் தெரியாததால், முருகனை போலீஸாரால் நெருங்கவே முடியவில்லை.

முருகனுக்காக ஸ்கெட்ச் போடும் போலீஸ்...

கொள்ளைப் பணத்தோடு முருகன் திருவாரூருக்கு வந்தால், அவரது பங்காளிகள் மற்றும் உறவினர்களுக்கு வாரி வழங்குவார். இதனால் சிலரின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. மேலும், வெளிமாநில போலீஸார் தன்னைத் தேடிவந்தால், அவர்களைச் சமாளிப்பதற்காக லோக்கல் போலீஸாரைப் பலமாக கவனித்துள்ளார். அந்த வகையில், எஸ்ஐ கண்ணன் என்பவரின் கிராஃப் ஏகத்துக்கு உயர்ந்துள்ளது.

Murugan
Murugan

கொள்ளைக்காக முருகனுக்கு ஸ்கெட்ச் போட்டு தருவதே, சில காவல்துறை அதிகாரிகள்தான் என்றும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரச்னை ஒன்றில் சிக்கிய முருகன், அதிலிருந்து தப்பிக்க, திருச்சி காவல் உயர் அதிகாரி ஒருவருக்கு விலை உயர்ந்த காரைப் பரிசாக வழங்கினார் என்றும் பரவலாகப் பேசப்படுகிறது.

Suresh
Suresh

“கொள்ளையடித்த பணத்தை அள்ளிவீசி அதிகாரிகளை வளைப்பதில் முருகன் கில்லாடி. அதுதான் இப்போதும் முருகனைப் பாதுகாக்கிறது” என்கிறார்கள் சில காக்கிகள்.

அம்மா பெயரில் சினிமா கம்பெனி... சுகத்துக்கு நடிகைகள் 

கொள்ளையடித்த பணத்தில் தனது அம்மா பெயரில், `என்.ராஜம்மாள் ஃபிலிம்ஸ்’ மற்றும் `பாலமுருகன் புரடக்ஷ்ன்ஸ்’ எனும் நிறுவனங்களை நடத்தியதுடன், அதன் மூலம் `மனச வினவே’, `ஆத்மா’ உள்ளிட்ட இரண்டு தெலுங்குப் படங்களும் ஒரு தமிழ்ப்படமும் எடுத்துள்ளார். `மனச வினவே’ திரைப்படத்தில் மைத்துனர் சுரேஷை கதாநாயகனாக நடிக்க வைத்துள்ளாராம்.
திரைப்பட விழாவில்  முருகன்
திரைப்பட விழாவில் முருகன்

முருகன், பெண் விவகாரத்தில் பலவீனமானவர். கொள்ளையடித்த பணத்தை அள்ளிவீசி, நடிகைகளை வளைத்தார். அவரிடம் வீழ்ந்த நடிகைகள் ஏராளம். இதனால் முருகன் தீராத நோய்க்கு ஆளாகியுள்ளார். மேலும், அடுத்தடுத்த பொருளாதார நெருக்கடிகளால் சினிமா நிறுவனம் மூடப்பட்டது. மரணப்படுக்கையில் முருகன் திருவாரூர் அழைத்துவரப்பட்டார்.

சுரேஷின் தாய் கனகவல்லி
சுரேஷின் தாய் கனகவல்லி

அவரை மனைவி மஞ்சுளா பராமரித்தார். சில வருடங்களுக்கு முன்பு, ஆந்திரா மாநில போலீஸார், முருகன் திருவாரூரில் இருப்பதை அறிந்து, படுக்கையில் கிடந்த முருகனை அப்படியே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். உடல்நிலையைக் கருத்தில்கொண்டு நீதிமன்றம் உடனடி ஜாமீன் வழங்கியது. வெளியே வந்த அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவே, சென்னையில் தங்கி மீண்டும் கைவரிசைகாட்டத் தொடங்கினார்.

கடந்த 3 வருடங்களில் 19 சம்பவங்கள்... அடுத்து சென்னை போலீஸார் விரட்டவே, முருகன், சுரேஷுடன் திருவாரூர் வந்தார். இந்நிலையில், முருகனின் தாய் ராஜம்மாள் உடல்நலக் குறைவாக இருக்க, அவருடன் இருந்துவந்த முருகன், திருச்சி நகைக்கடையைக் குறிவைத்தாராம்.

என்ன செய்கிறது OCW?

OCW எனும் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவு (Organized Crime Wing) காவல் அதிகாரிகளின் செயல்பாடுகள் மற்றும் சமூக விரோத செயல்பாடுகளைத் துல்லியமாக்கக் கண்காணித்து டிஜி -பிக்கு நேரடியாக அறிக்கை அனுப்பும். திருச்சி கே.கே.நகரில் இயங்கிவரும் இந்தப் பிரிவில், டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர் பதவிகள் காலியாகவே உள்ளன. அதைப் பொறுப்பு அதிகாரிகளே கவனிக்கிறார்கள். இதுபோன்ற காரணங்களால் திருச்சி நகைக்கடை உள்ளிட்ட பெரிய சம்பவங்களையும், குற்றவாளிகளையும் முன்கூட்டியே போலீஸாரால் கண்காணிக்க முடியவில்லை.

திருவாரூரில் இருந்து தப்பிய முருகன், காரில் ஊர் சுற்றிவருகிறாராம். அவரிடம் செல்போன் உள்ளிட்ட எதுவுமே இல்லை. அதனால், போலீஸாரால் முருகன் இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லையாம்.

குற்றவாளிகளுக்கு உதவும் கறுப்பு ஆடுகளை காவல்துறை களையெடுக்குமா?

திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடந்த நகைக் கொள்ளையும் -  விசாரணையும்! - ஒரு புகைப்படத் தொகுப்பு