Published:Updated:

`அவன் சின்ன கல்லைப் போட்டான்; நான் பெரிய கல்லைப் போட்டேன்’ - போலீஸாரையே அதிரவைத்த கொலையாளி

சிப்காட் காவல் நிலையம்

தூத்துக்குடியில் மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய்த் தகராறில், நண்பரே தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`அவன் சின்ன கல்லைப் போட்டான்; நான் பெரிய கல்லைப் போட்டேன்’ - போலீஸாரையே அதிரவைத்த கொலையாளி

தூத்துக்குடியில் மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய்த் தகராறில், நண்பரே தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
சிப்காட் காவல் நிலையம்

தூத்துக்குடி தேவர் காலனியைச் சேர்ந்தவர் பூல்பாண்டி. இவரின் நண்பர் சில்வர்புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து. இருவரும் கட்டடத் தொழிலளிகள். கட்டடத் தொழிலுக்குச் சென்றபோது இருவரும் நண்பர்களாகி, பழகிவந்துள்ளனர். இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவார்களாம். சின்னக்கண்ணுபுரம் பகுதியிலுள்ள டாஸ்மாக் பார் அருகிலுள்ள பாழடைந்த கட்டடத்தில்தான் இருவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கமாம். இந்த நிலையில் இருவரும் மது அருந்திக்கொண்டிருந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

இதில், கோபமடைந்த பூல்பாண்டி, சிறிய கல்லை எடுத்து மாரிமுத்து மீது வீசியிருக்கிறார்.  பதிலுக்கு அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து பூல்பாண்டியின் தலையில் போட்டிருக்கிறார் மாரிமுத்து.  இதில் தலையில் பலத்த காயமடைந்த பூல்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். மதுபோதையில் நண்பர் உயிரிழந்ததுகூடத் தெரியாமல் அங்கிருந்து கிளம்பிய மாரிமுத்து, அருகிலுள்ள டாஸ்மாக் பாருக்குள் சென்று நண்பரின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

பதறிப்போன பார் ஊழியர்கள் சிப்காட் காவல் நிலையத்துக்குத் தகவல் சொல்லியிருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர். அதுவரை மதுபோதையில் டாஸ்மாக் கடைக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தார் மாரிமுத்து. “நானும் பூல்பாண்டியும் ஃபிரெண்ட்ஸ்தான். அவன் என் மேல சின்னக் கல்லைத் தூக்கிப் போட்டான். நான் பெரிய கல்லைத் தூக்கிப் போட்டேன். சும்மாதான் போட்டேன். மயக்கத்துலதான் இருக்கான். ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனா காப்பாத்திடலாம், பொழச்சுக்குவான்” என போலீஸாரிடம் சொல்ல அதிர்ந்துபோனார்கள் போலீஸார்.

பூல்பாண்டி மீது போடப்பட்ட பெரிய கல்
பூல்பாண்டி மீது போடப்பட்ட பெரிய கல்

இது தொடர்பாக மாரிமுத்துவைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு இதே பாழடைந்த கட்டடத்தின் மாடியில்  ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறுவன் உட்பட இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர். இதே பகுதியில் வழிப்பறிச் சம்பவமும் அடிக்கடி நிகழ்வதாக அந்தப் பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.  திருட்டு பைக் விற்ற பிரச்னையில் கொலை,  தவறான மின் இணைப்பால் கொலை என கடந்த மூன்று நாள்களில் நான்கு கொலைச் சம்பவங்கள் தூத்துக்குடியில் நடந்திருக்கின்றன.