தூத்துக்குடி, அண்ணாநகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் மாயா என்ற ராம்குமார். இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்திருக்கிறார். இவரின் மனைவி மாரியம்மாள். இவர்களுக்குத் திருமணமாகி, 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. அதனால், 2 வயது பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்துவந்தனர். மாரியம்மாளின் உடன்பிறந்த சகோதரர் முருகேசன் என்பவரும் அதே தெருவில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். முருகேசனுக்குக் கடன் தொல்லை அதிகமாக இருந்ததால், அவரின் கடனை தங்கை மாரியம்மாளும், கணவர் ராம்குமாரும் அடைத்துள்ளனர். அதற்கு ஈடாக முருகேசனுக்குச் சொந்தமான வீட்டில் மாரியம்மாளும் ராம்குமாரும் வசித்துவந்துள்ளனர்.

இதற்க்டையே, முருகேசனின் மனைவி செந்தமிழ்ச் செல்வியிடம் மாரியம்மாள் ரூ.5 லட்சம் சீட்டு சேர்த்து வந்திருக்கிறார். அந்தச் சீட்டுப் பணத்தை முருகேசன் எடுத்துக்கொண்டாராம். இந்தப் பணம் தொடர்பாக மாரியம்மாளுக்கும் முருகேசனுக்கும் இடையே தகாராறு ஏற்பட்டுவந்திருக்கிறது. அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படுவதும், உறவினர்கள் விலக்கிவிடுவதுமாக இருந்துவந்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சீட்டுப் பணம் கேட்டு, ராம்குமாரின் மனைவி முருகேசனின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.
“சீட்டுப் பணத்தை உங்க அண்ணன் செலவு பண்ணிட்டார். அவர்கிட்ட இப்போ பணம் இல்ல” என முருகேசனின் மனைவி சொல்ல, “அவனுக்கு எவ்வளவு பணம் வந்தாலும் போதாது. ஒரு வாரத்துக்குள்ள பணத்தைத் தரலேன்னா பிரச்னை ஆயிடும்” என மாரியம்மாள் கூறிவிட்டுச் சென்றாராம். அத்துடன் அண்ணன் முருகேசனுக்கும் போன் செய்து பணம் தருவது சம்பந்தமாகப் பேசியிருக்கிறாராம். இந்த நிலையில், நேற்று (25-ம் தேதி) இரவு ராம்குமார் தன் வீட்டுக்கு அருகில் பைக்கில் வந்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகேசன், அவர் மகன் மகேஷ் இருவரும் ராம்குமாரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் ராம்குமாரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த மாரியம்மாளையும் சரமாரியாக வெட்டினர். அவரும் உயிரிழந்தார்.
இது தொடர்பாக தென்பாகம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். பணத் தகராறில் கிறிஸ்துமஸ் நாள் இரவில் உடன்பிறந்த தங்கை, தங்கையின் கணவரை அண்ணனே வெட்டிக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.