நெல்லை மாவட்டம், பணகுடி பஜாரில் குடிபோதையில் ஓர் இளைஞர் அடாவடியாக வாகனங்களில் செல்வோரை அவதூறாகப் பேசிவந்திருக்கிறார். மதுபோதை தலைக்கேறிய நிலையிலிருந்த இளைஞர் செய்யும் சேட்டைகளைத் தடுக்கச் சென்ற பொதுமக்களையும் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருக்கிறார். அதனால் அங்கிருந்தவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

உடனடியாக பணகுடி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் அங்கு சென்று அந்த இளைஞரிடம் விசாரித்திருக்கின்றனர். அப்போது, அவர் பெயர் பசுபதி என்பதும் கூலித் தொழிலாளியான அவர், அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு தகராறு செய்ததும் தெரியவந்தது. அதனால் போலீஸார் அவரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்திருக்கின்றனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், காவலர் ஒருவரின் சட்டையைப் பிடித்து இழுத்து அவதூறாகப் பேசியிருக்கிறார் அந்த இளைஞர். பொதுமக்கள் முன்னிலையில் போலீஸின் சட்டையைப் பிடித்து இழுத்த சம்பவத்தை அங்கிருந்த யாரோ வீடியோ பதிவுசெய்து இணையத்தில் பரவவிட்டிருக்கின்றனர்.
அதையடுத்து, பொதுமக்களும் அங்கிருந்த காவலர்களும் சேர்ந்து பசுபதியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். போலீஸாரிடம் அவதூறாகப் பேசியதுடன் சட்டையைப் பிடித்து இழுத்ததால் அவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலீஸிடம் தகராறு செய்த போதை இளைஞரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்.சரவணன், நெல்லை மாவட்ட எஸ்.பி
இந்தச் சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட எஸ்.பி-யான சரவணனிடம் கேட்டதற்கு, “குடிபோதையில் இருந்த அந்த நபர் மீது வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைத்திருக்கிறோம். காவல்துறையைப் பொறுத்தவரை அனைவரிடமும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்கிறோம். ஆனால், சில இடங்களில் போலீஸாருக்கு எதிரான இது போன்ற சம்பவங்கள் நடந்துவிடுகின்றன. போதை நபரால் இத்தகைய சம்பவம் நடந்திருக்கிறது.
ராதாபுரம் பகுதியில் ஒரு திருட்டு வழக்கில் கைதான வெங்கடேஷ் என்ற கைதி, வயிறு வலிப்பதாகத் தெரிவித்ததால் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக குடல்வால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னதால் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தோம்.

ஆனால், கைதான வெங்கடேஷின் உறவினர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை நம்ப மறுத்ததுடன், போலீஸார் அவரை அடித்து ஏதோ செய்துவிட்டதாகப் புகார் கொடுத்தார்கள். ஆனால், மனிதாபிமானத்துடன் அவருக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததால் உயிர் பிழைத்திருக்கிறார். அதனால் பொதுமக்களும் போலீஸாரின் சூழலை உணர்ந்து அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.