Published:Updated:

மும்பை: காவல் நிலையத்தில் பழைய வாகனங்களின் பாகங்கள் திருட்டு; ரூ.26 லட்சத்துக்கு விற்ற பெண் காவலர்!

கான்ஸ்டபிள் மங்கள்
கான்ஸ்டபிள் மங்கள்

மும்பை போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பழைய வாகனங்களின் உதிரி பாகங்களைத் திருடி ரூ.26 லட்சத்துக்கு விற்பனை செய்த பெண் கான்ஸ்டபிள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காவல் நிலையங்களில் விபத்துகலிலும், வழக்குகளிலும் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆண்டுக் கணக்கில் துருப்பிடித்துக் கிடப்பதைப் பார்த்திருப்போம். அவை பல்வேறு வழக்குகளோடு தொடர்புடையவை என்பதால், அவற்றைப் பாதுகாப்பது போலீஸாரின் கடமை என்பதால் அவற்றுக்கென தனி அதிகாரியை நியமித்து கண்காணிப்பது வழக்கம். அப்படிப் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பெண் காவல் அதிகாரி ஒருவர் மும்பை காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களில், இரு சக்கர வாகனங்களில் இருந்த உதிரி பாகங்களை விற்பனை செய்து சம்பாதித்திருக்கிறார். மும்பை அருகிலுள்ள வசாய் காவல் நிலையத்தில் ஸ்டோர் கீப்பர் பொறுப்பில் மங்கள் கெய்க்வாட் என்ற தலைமைக் காவலர் நியமிக்கப்பட்டார்.

கோப்புக் காட்சி
கோப்புக் காட்சி

அவரிடம் காவலர்கள் பறிமுதல் செய்யும் அனைத்துப் பொருள்கள் பற்றிய விவரங்களைப் பராமரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கெய்க்வாட் தனது பொறுப்பில் காவல் நிலையத்திலிருந்த வாகனங்களிலிருந்து உதிரி பாகங்களைத் திருடி முஸ்தாக் என்ற பழைய இரும்பு வியாபாரியிடம் விற்பனை செய்து பணம் சம்பாதிப்பது வழக்கம். வாகனங்களை அப்படியே திருடினால்தான் தெரியவரும் என்றும், உதிரி பாகங்களைத் திருடினால் தெரியாது என்ற எண்ணத்தில் இதுபோல செய்திருக்கிறார். வாகன உதிரி பாகங்கள் மட்டுமல்லாமல் பணம், நகைகள், குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் போன்றவற்றையும் போலீஸ் நிலையத்திலிருந்து திருடி விற்பனை செய்திருக்கிறார்.

இது போன்று அவர் மொத்தம் ரூ.26 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடி விற்பனை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. ஒருமுறை காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திலிருந்து உதிரி பாகங்களைத் திருடியபோது கையும் களவுமாக கெய்க்வாட் பிடிபட்டார். அவர் மீதான குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

`முகநூல் பழக்கம்.. திடீர் தற்கொலை?!’ -டி.எஸ்.பி என ஆண் குரலில் பேசிய பெண்; சிக்கிய மோசடி தம்பதி

அந்தப் பெண் காவலர்மீது திருட்டு தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் விரைவில் கைதுசெய்யப்படுவார் என்று இன்ஸ்பெக்டர் கல்யாண் தெரிவித்தார். பழைய இரும்பு வியாபாரி முஸ்தாக் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடிவருகின்றனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டது என்கிறார்கள் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு