Published:Updated:

தன்பாலின ஈர்ப்பு; `ஆப்' மூலம் பழக்கம்... பட்டதாரி இளைஞரை துன்புறுத்தி பணம் பறித்த மர்மக் கும்பல்!

வேதாளை கடற்கரை கிராமம்

தன்பாலின உறவுக்கு அழைத்து பட்டதாரி இளைஞரைத் தாக்கி, நகை, பணத்தைப் பறித்ததோடு, அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய ஆறு பேர் கொண்ட மர்மக் கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர்.

தன்பாலின ஈர்ப்பு; `ஆப்' மூலம் பழக்கம்... பட்டதாரி இளைஞரை துன்புறுத்தி பணம் பறித்த மர்மக் கும்பல்!

தன்பாலின உறவுக்கு அழைத்து பட்டதாரி இளைஞரைத் தாக்கி, நகை, பணத்தைப் பறித்ததோடு, அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய ஆறு பேர் கொண்ட மர்மக் கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர்.

Published:Updated:
வேதாளை கடற்கரை கிராமம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பி.இ பட்டதாரி ஒருவர், சென்னையிலுள்ள ஐ.டி கம்பெனியில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக வேலை பார்த்துவருகிறார். இந்த நிலையில், தன்னுடைய செல்போனில் 'கிரிண்டர்' (Grindr) என்ற 'ஆப்' மூலம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதில் இருவரும் பாலியல்ரீதியாக உரையாடி வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அந்த இளைஞர் பொங்கல் விடுமுறைக்காக ராமேஸ்வரத்துக்கு வந்திருக்கிறார். சொந்த ஊர் வந்திருப்பதை அந்த ஆண் நண்பருக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் நேரில் சந்தித்து தன்பாலின உறவில் ஈடுபடலாமா எனக் கேட்டிருக்கிறார். அதற்கு பாதிக்கப்பட்ட இளைஞர் சம்மதம் தெரிவித்தையடுத்து, அவரை வேதாளை கடற்கரை கிராமத்துக்குத் தனியாக வருமாறு அந்த ஆண் நண்பர் அழைத்திருக்கிறார்.

வேதாளை கடற்கரை கிராமம்
வேதாளை கடற்கரை கிராமம்

அதன்பேரில் வேதாளை கிராமத்துக்குச் செல்வதற்காக, ராமநாதபுரம் - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காத்துக் கொண்டிருந்த அந்த இளைஞரை, அவருடைய ஆண் நண்பர் இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, `ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்குச் செல்வோம்’ எனக் கூறி வேதாளை வடக்கு கடற்கரைப் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அங்கு சென்ற ஆண் நண்பர் உட்பட ஆறு பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை அடித்து, உதைத்தோடு அவரின் உடைகளைக் களைந்து நிர்வாணமாக வீடியோ எடுத்திருக்கின்றனர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகை, வெள்ளி மோதிரம், 1,000 ரூபாய் பணத்தைப் பறித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, அவரிடம் இருந்த இரண்டு ஏ.டி.எம் கார்டுகளைப் பிடுங்கி, ரகசிய குறியீடு நம்பரைத் தெரிந்துகொண்டு அங்கிருந்த ஏ.டி.எம்-மில் இரண்டு வங்கிக்கணக்கிலிருந்து ரூ.16,000 பணத்தை எடுத்திருக்கின்றனர்.

மேலும் அவரைத் தாக்கி, வீட்டில் இருப்பவர்களைத் தொடர்புகொண்டு வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பச் சொல்லுமாறு துன்புறுத்தியிருக்கின்றனர். அவர் அடி தாங்க முடியாமல் தன்னுடைய அண்ணனைத் தொடர்புகொண்டு பணம் அனுப்புமாறு தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, உடனடியாக வங்கிக் கணக்கில், அவருடைய அண்ணன் 20,000 ரூபாய் பணம் செலுத்தியிருக்கிறார்.

அந்தப் பணத்தையும் ஏ.டி.எம் மூலம் எடுத்துக்கொண்ட கும்பல், `இங்கு நடந்ததை போலீஸில் சொன்னால் உன்னுடைய நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவோம்’ என மிரட்டியிருக்கின்றனர். அதோடு, மீண்டும் இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர்.

மண்டபம் காவல் நிலையம்
மண்டபம் காவல் நிலையம்

இது குறித்து மண்டபம் காவல் நிலையத்தில் அந்த இளைஞர் புகாரளித்தார். அதன் பேரில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து, பணம் எடுத்த ஏ.டி.எம்-மிலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆறு பேர் கொண்ட அந்தக் கும்பலைத் தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் ராமேஸ்வரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.