Published:Updated:

`அதிக வட்டி; தினமும் வங்கிக் கணக்கில் பணம்!’- ரூ.20 கோடி மோசடியால் அதிர்ந்த தென்காசி

representational image
representational image

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு அலுவலர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆன்லைன் மோசடிக் கும்பலிடம் பணத்தை இழந்து தவித்து வருகிறார்கள். இரண்டு மாதங்கள் வட்டித் தொகையைக் கொடுத்த நிறுவனம் இழுத்து மூடப்பட்டு விட்டது. 

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகாமிட்ட கும்பல் ஒன்று, கிராமப் புறங்களைச் சேர்ந்த மக்களைக் குறிவைத்து களமிறங்கியுள்ளது. முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி கொடுப்பதாகத் தெரிவித்த அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்களிடம் முதலீடு செய்தவர்களுக்கு அதிக வட்டியைக் கொடுத்துள்ளனர். 

ஆன்லைன் வியாபாரம்; 2 ஆயிரம் கோடி வசூல்!- ஈரோட்டில் பிட்காயின் பெயரில் மோசடி

வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் தங்கள் நிறுவனத்துக்கு அதிக லாபம் கிடைப்பதால் அதை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கிராமப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள், கூலி வேலை செய்பவர்கள், அரசு அலுவலர்கள், ஓய்வு பெற்றவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தைச் செலுத்தியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு பகுதியிலும் ஏஜென்டுகளை நியமித்து பணத்தை வசூல் செய்திருக்கிறார்கள். அவர்களது கம்பெனியில் முதலீடு செய்பவர்களுக்கு தனியாக ஐடி நம்பர், பாஸ்வேர்டு உருவாக்கிக் கொடுத்துள்ளனர். குறைந்தபட்சமாக ரூ.7,000 முதல் 17 லட்ச ரூபாய் வரை பலரும் ஆர்வத்தோடு முதலீடு செய்திருக்கிறார்கள். 

`அதிக பணத்துக்கு ஆசை கொண்டவர்கள்தான் டார்கெட்!' - நெல்லையில் சிக்கிய மோசடி நபர்கள்

ஒரு நபர் ரூ.2,80,000 பணத்தை முதலீடு செய்திருந்தால் அவர்களது வங்கிக் கணக்கில் தினமும் ரூ.1,456 செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முதலீடு செய்தவர்களுக்கு கடந்த இரு மாதங்களாகப் பணம் கொடுத்துள்ளனர். அத்துடன், முதலீடு செய்வதற்கான நபர்களைச் சேர்த்துவிட்டால் தனியாக கமிஷன் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கும்பலை நம்பி தென்காசி மாவட்டம் புளியங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் அதிகமானோர் முதலீடு செய்துள்ளனர். இதுவரை இந்தப் பகுதியிலிருந்து சுமார் 20 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கின்றனர். 

ஏஜென்டாக செயல்பட்ட சுமதி
ஏஜென்டாக செயல்பட்ட சுமதி

தொடர்ந்து வட்டிப் பணத்தை வங்கியில் செலுத்திவந்த அந்த நிறுவனம் கடந்த சில வாரங்களாகப் பணத்தைக் கொடுக்கவில்லை. அதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் அந்த நிறுவனத்தினரைத் தொடர்புகொண்டு பேசியபோதும் உரிய பதில் கிடைக்கவில்லை. அதனால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங் கவனத்துக்குச் சென்றதும் தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த சுமதி என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினார்கள். 

தலைமறைவான ராஜதுரை
தலைமறைவான ராஜதுரை

இந்த மோசடி குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதை அறிந்த பாதிக்கப்பட்ட மக்கள், புளியங்குடி காவல்துறையிடம் புகார் அளிக்கத் திரண்டு வந்தார்கள். சுமதியிடம் நடத்திய விசாரணையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த ராஜதுரை அவருடைய மனைவி ஸ்வேதா  மற்றும் இவரது கூட்டாளிகள் குட்டிமணி, கணேசன், தங்கராஜ், ரமேஷ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது.

ஆன்லைன் வர்த்தகம் மூலம்  வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திய அவர்கள், தங்களது கம்பெனியில் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுப்பதாகத் தெரிவித்து மோசடி செய்திருக்கிறார்கள். இந்தக் கும்பல் ஏற்கெனவே பிட்காயின் மோசடியில் சிக்கி கைதானவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. 

ஆன்லைன் ரம்மி... அழியும் குடும்பங்கள்!

சுமதி என்பவர் அந்தப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்களை இந்த மோசடிக் கும்பலிடம் முதலீடு செய்ய வைத்துள்ளார். அவரை நம்பிப் பணம் செலுத்தியவர்கள் தற்போது காவல்நிலையத்துக்குப் படையெடுத்து வருகிறார்கள். தலைமறைவாக உள்ள மோசடிக் கும்பல் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு