Published:Updated:

சென்னை: மோதலான முன் விரோதம்; ஹோட்டலைச் சூறையாடிய கும்பல்!

சிசிடிவி-யில் பதிவான காட்சி
சிசிடிவி-யில் பதிவான காட்சி

சென்னை வேளச்சேரியில், ஹோட்டலில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. அதைவைத்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

சென்னை வேளச்சேரி, எம்.ஜி.ஆர் நகரில், ஹோட்டல் நடத்திவருபவர் ராஜேந்திரன். இவருக்கு உதவியாக ராஜேந்திரனின் குடும்பத்தினரும் இருந்துவருகின்றனர். இந்தநிலையில், ராஜேந்திரனின் ஹோட்டலுக்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் உருட்டுக்கட்டை, பீர் பாட்டில், கற்களை வீசி திடீரெனத் தாக்குதலில் ஈடுபட்டனர். அதைப் பார்த்து ராஜேந்திரனும், அவரின் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். திடீர்த் தாக்குதலால் நிலைகுலைந்த ராஜேந்திரன் குடும்பத்தினர், ஒருகட்டத்தில் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

சிசிடிவி
சிசிடிவி
representational image

அதனால் அந்தப் பகுதி போர்களமானது. பெண்களும் ஆண்களும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்தத் தாக்குதலில் ராஜேந்திரன், அவரின் மகன்கள் படுகாயமடைந்தனர். இது குறித்து வேளச்சேரி காவல் நிலையத்துக்கும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸார் வருவதைப் பார்த்த ஒரு கும்பல் தப்பி ஓடியது. காயமடைந்த ராஜேந்திரன், அவரின் மகன்களை மீட்ட போலீஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்தச் சம்பவத்தில் ராஜேந்திரனின் ஹோட்டல் சூறையாடப்பட்டது. பொருள்கள் சேதமடைந்தன. இது குறித்து ராஜேந்திரனின் குடும்பத்தினர் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அப்போது கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸாரிடம் கொடுத்தனர். அதன் அடிப்படையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

சென்னை: நள்ளிரவில் சொகுசு காரில் வந்து ஆடு திருடிய இருவர்! - சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை!
சிசிடிவியில் பதிவான காட்சி
சிசிடிவியில் பதிவான காட்சி

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``ஹோட்டல் உரிமையாளர் ராஜேந்திரனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்தது. அந்தத் தரப்பினர்தான் ராஜேந்திரனின் ஹோட்டலைச் சூறையாடியிருக்கின்றனர். அவர்களைப் பிடித்து விசாரித்தால்தான் மோதல் சம்பவத்துக்கான உண்மைக் காரணம் தெரியவரும்" என்றனர்.

இதற்கிடையில் ஹோட்டலில் நடந்த மோதல் சம்பவத்தின் சிசிடிவி வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு