Published:Updated:

வியாபாரப் பேச்சு; கலர் ஜெராக்ஸ் பணம்; ஆடு மேய்க்கும் முதியவர்களைக் குறிவைக்கும் நூதன கும்பல்!

கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ள ரூபாய் தாள்கள் மாதிரி படம்.
கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ள ரூபாய் தாள்கள் மாதிரி படம்.

'பண்டிகை, வீட்டு விசேஷங்களுக்கு ஆடுகள் வேண்டும்' எனக்கூறி, கலர் ஜெராக்ஸ் போடப்பட்ட போலி ரூபாய் தாள்களைக் கொடுத்து ஆடு மேய்ப்பவர்களை ஏமாற்றும் நூதன முறை கடந்த மூன்று தினங்களாக இரு வேறு மாவட்டங்களில் நடந்தேறியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த ஆற்காடு குப்பத்தைச் சேர்ந்த முனுசாமி என்ற முதியவரிடம், நேற்று முன்தினம் (21.06.2021) மூன்று நபர்கள் சென்று 'பக்ரீத் பண்டிகைக்கு ஆடு வேண்டும்' எனக்கூறி, 4 ஆடுகளை வாங்கிக்கொண்டு 2000 ரூபாயிலான கலர் ஜெராக்ஸ் போடப்பட்ட 64,000 ரூபாயைக் கொடுத்து ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போன்ற ஒரு சம்பவம் நேற்று (22.06.2021) விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றிருக்கிறது.

திருவள்ளுர்: `பக்ரீத் பண்டிகைக்கு 4 ஆடுகள் வேணும்’ - கலர் ஜெராக்ஸ் தாள்; முதியவரை ஏமாற்றிய கும்பல்!

விழுப்புரம் - சென்னை செல்லும் சாலையில் திண்டிவனத்திற்கு முன்னதாகவே அமைந்துள்ளது செண்டூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த வசந்தா(56), நேற்று மாலை தேசிய நெடுஞ்சாலை ஓரம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு ஆட்டோவில் வந்த மூவர் 'வீட்டுல விசேஷம் உள்ளது. அதற்கு ஆடு வேண்டும்' எனக் கூறி இந்த மூதாட்டியிடம் 5 ஆடுகளை வழங்கியுள்ளனர்.

செண்டூர்
செண்டூர்

பேரம் பேசுவது போல நடித்து, ஜெராக்ஸ் போடப்பட்ட 2000 ரூபாய் தாள்கள் 13-ஐ (₹26000) வசந்தாவிடம் கொடுத்துவிட்டு, ஆடுகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்தப் பணத்தை எடுத்துச்சென்று தன் மகளிடம் கொடுத்துள்ளார் வசந்தா. 'இது போலி பணம்' என மகள் கூறவே... அதிர்ந்து போயிருக்கிறார் வசந்தா. கடைக்காரர் ஒருவரும் 'இது போலி ரூபாய் நோட்டுகள்தான்' என்று கூற, நேராக மயிலம் காவல் நிலையம் சென்று தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வசந்தாவை நேரில் சந்தித்துப் பேசினோம்.

"என் பேரு வசந்தா. நான் ஒரு பத்து வருஷமா ஆடு மேய்ச்சிகிட்டு வரேன். இதுதான் எனக்கு பொழப்பு. இத நம்பிதான் கஞ்சி குடிச்சிட்டு வரேன். போன வருஷம் நோய் வந்து நிறைய ஆடுகள் செத்துப் போச்சு. இப்போ குறைவான ஆடுகளை தான் மேய்ச்சுகிட்டு வந்தேன். வழக்கம்போல நேற்றும் சாலையோரம் ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்தேன். அப்போ, விழுப்புரத்திலிருந்து ஆட்டோ ஒன்னு வந்துச்சு. அதுல நடுநில வயசு சேர்ந்த ஒரு ஆம்பிளையும், ஒரு பொண்ணும் இருந்தாங்க. கூடவே ஒரு இளம் வயசு பையனும் வந்து இறங்கினாங்க. 'ஆடு விக்கிறீங்களா நீங்க?' அப்படினு என்கிட்ட கேட்டாங்க. இல்ல நான் ஆடி மாசம் தான் விக்கலாம்னு இருக்கேன் என்று சொன்னேன். 'வீட்டில விசேஷம் இருக்கு, அதுக்கு ஆடு வேண்டும். காலையிலிருந்து எங்கெங்கேயோ அலஞ்சிட்டோம் எங்கேயும் கிடைக்கல. ஆடி மாசம் விற்கிறத இப்போ குடுங்களேன்' அப்படின்னு கேட்டாங்க.

கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ள ரூபாய் தாள்கள் மாதிரி படம்.
கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ள ரூபாய் தாள்கள் மாதிரி படம்.

நானும் நேத்து (22.06.2021) செவ்வாய்க்கிழமை என்கிறதால கொஞ்சம் யோசிச்சேன். அவங்க என்கிட்ட தொடர்ந்து வற்புறுத்திக் கேட்டாங்க. நானும் ஒரு வழியா விலைக்குத் தர ஒத்துக்கிட்டேன். திடமான நாலு ஆடுகளைக் காட்டி 20000 ரூபாய் விலை சொன்னேன். அவங்க 16000 தருவதாக சொன்னாங்க. விலை கட்டுபிடி ஆகாது... நீங்க ஒழுங்கா காசு தர மாதிரினா பெரிய ஆடு ஒன்னு இருக்கு... மொத்தமா அஞ்சு ஆட்டுக்கும் சேத்து 26000 கேட்டேன். சரினு அவங்களும் ஒத்துகிட்டாங்க. அந்த பொம்பல வச்சிருந்த பையில இருந்து 13 இரண்டாயிரம் ரூபாய் நோட்டு (₹26000) எடுத்து எங்கிட்ட கொடுத்தாங்க. நான் அவங்க போன் நம்பர் கேட்டேன். ஒரு அட்டையை பாக்கெட்டுல இருந்து எடுத்து அதுல இருந்த நம்பரை அழிச்சிட்டு புதுசா பின் பக்கம் எழுதிக் கொடுத்தாரு.

ஆடு வித்தா சாங்கியத்துக்காக ஆடு முடியை அறுத்து வாங்குவோம். அதன்படி அவங்களே முடியை அறுத்து கொடுத்துட்டு ஆட்டோவுல ஆடுகளை ஏத்திகிட்டு போய்ட்டாங்க. கொஞ்ச தூரம் வந்ததும் 'என்ன இவங்க நாம கேட்ட காசை அப்படியே கொடுத்துட்டாங்க. 2000 ரூபாய் நோட்டு வேற சரியா வரதில்லனு சொல்றாங்களே. இது நல்ல பணமா?' அப்படினு பதட்டதோடு என் பொண்ணுகிட்ட வந்து கொடுத்தேன். எம்பொண்ணு, 'இது போலி நோட்டு'னு சொல்லி அழுதா... உடனே, கோழி கடக்காரரு கிட்ட கேட்டோம். அவரும் அதைதான் சொன்னாரு. உடனே, அவங்க கொடுத்த போன் நம்பர் அட்டை, காசை எடுத்துகிட்டு போய் 'என்னை ஏமாத்திட்டாங்க'னு புகார் கொடுத்து நடந்ததை போலீஸ் கிட்ட சொன்னேன். அவங்களும் அந்த நம்பருக்கு போன் பண்ணாங்க. சுச் ஆப்னு வந்துச்சி. அழிச்சி வச்சிருந்த நம்பரை உத்துபாத்து போட்டாங்க. ஏதோ முஸ்லீம் ஆலு பேரு வந்தது அப்படினு சொன்னாரு போலீஸ்காரரு. 'அந்த போன் நம்பர் காரங்க தான் குற்றவாளியா... இந்த அட்டை அவங்க கிட்ட எப்படி வந்துச்சுனு' விசாரிச்சா தெரியும்னு சொன்னாரு. ஆடு மேக்கிறத விட்டா... எனக்கு வேற பொழப்பு தெரியாதைய்யா..." என்று கூறி கண் கலங்கினார் வசந்தா.

சம்பவம் நடந்த இடம்.
சம்பவம் நடந்த இடம்.

மயிலம் காவல் நிலைய துணை ஆய்வாளர் சண்முகத்திடம் பேசினோம். "விசாரணை அதிகாரி, ஆய்வாளர் மூர்த்தி அவர்கள் தான். பாதிக்கப்பட்ட வசந்தா க/பெ பழனி, என்பவர்கள் கொடுத்த புகார் அடிப்படையில் இன்று காலையில் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிரமாக விசாரித்து வருகிறோம். மேலும் தகவல் கிடைத்தால் கூறுகிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு