Published:Updated:

தூத்துக்குடி: பூர்வீக நிலப் பிரச்னை... மாமன் மகனால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

முக்காணி
News
முக்காணி

தூத்துக்குடியில் இரண்டு குடும்பத்துக்குள் நிலவிவந்த நிலப் பிரச்னையால், காதலைக் கைவிட்ட மாமன் மகளை உறவுக்கார இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகிலுள்ள முக்காணியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரின் மனைவி ஆறுமுகத்தம்மாள். இவர்களுக்கு பிரியா, கனகா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். முருகேசனின் பக்கத்து வீட்டில் அவரின் அக்கா லட்சுமி மீனா, அக்காவின் கணவர் தங்கராஜ் ஆகியோர் வசித்துவருகிறார்கள். இவர்களுக்கு மாரியப்பன் என ஒரு மகன். முருகேசனுக்கும், முருகேசனின் அக்கா லட்சுமிக்கும் வீடு மற்றும் பூர்வீக நிலம் சம்பந்தமாக பல ஆண்டுகளாகப் பிரச்னை இருந்துவந்திருக்கிறது.

உயிரிழந்த கனகா
உயிரிழந்த கனகா

இந்தச் சொத்துப் பிரச்னை தொடர்பாக இரண்டு குடும்பங்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில், திடீரென தனது மாமா முருகேசனின் வீட்டுக்குக் கத்தியுடன் சென்றிருக்கிறார் லட்சுமியின் மகன் மாரியப்பன். அப்போது, வீட்டில் முருகேசனும் அவர் மனைவி ஆறுமுகத்தம்மாளும் இல்லை. ``உங்க அப்பன் எங்கே... அவரு என்ன பெரிய ஆளா?’’ என்று மாரியப்பன் கேட்க, ``அப்பா வீட்ல இல்லை. வேலைக்குப் போயிட்டாங்க. உனக்கு என்ன வேணும்? முதல்ல வீட்டைவிட்டுக் கிளம்பு’’ என்று முருகேசனின் இளைய மகள் கனகா கூறியதாகச் சொல்லப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உடனே, மாரியப்பன் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து கனகாவைக் குத்தியிருக்கிறார். ரத்தவெள்ளத்தில் துடித்த தன் தங்கையைக் காப்பாற்ற முயன்ற பிரியாவின் கைகளில் குத்திவிட்டுத் தப்பியோடி விட்டார் . இதையடுத்து இருவரையும் ஆத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில், கனகா உயிரிழந்தார். இருவரது குடும்பங்களுக்கும் இடையே ஏற்பட்டு வந்த வீடு மற்றும் நிலப் பிரச்னையால்தான் மாரியப்பன் கொலை செய்தார் என்று கூறப்பட்டது.

சிகிச்சை பெற்று வரும் கனகாவின் அக்கா பிரியா
சிகிச்சை பெற்று வரும் கனகாவின் அக்கா பிரியா

ஆனால், விசாரணையில் ஏற்கெனவே கனகா, மாரியப்பனைக் காதலித்துவந்த நிலையில் நிலப் பிரச்னையால் கனகா, மாரியப்பனுடனான பழக்கத்தை நிறுத்தியதால்தான் மாரியப்பன் கொலை செய்தார் எனத் தெரியவந்திருக்கிறது. இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம். ``முருகேசனும், அவரோட அக்கா லட்சுமியும் நல்லாத்தான் பழகிட்டு வந்தாங்க. அவங்களோட பெற்றோரின் இறப்புக்குப் பிறகு வீடு, பூர்வீக நிலம் பங்குபோடுவது சம்பந்தமா பிரச்னை ஏற்பட்டுச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்தடுத்த வீடா இருந்தாலும், இதனால ரெண்டு பேரும் பேசிக்க மாட்டாங்க. ஒருகட்டத்துல நிலப் பிரச்னை கோர்ட் வரைக்கும் போயிடுச்சு. அந்த வழக்குல முருகேசனுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்ததாச் சொல்றாங்க. `ஆடு பகை ஆனா, குட்டி உறவு’ங்குற கதையா, முருகேசனின் இளைய மகள் கனகாவும், லட்சுமியின் மகன் மாரியப்பனும் விரும்பினாங்க. இது ரெண்டு பேரு வீட்டுக்கும் தெரிஞ்சு, கனகாவை முருகேசன் கண்டிச்சார்.

மாரியப்பன்
மாரியப்பன்

அதுக்குப் பிறகு மாரியப்பனிடம் கனகா பேசுறதை நிறுத்திட்டார். ஆறு மாசத்துக்கு முன்னாலயே மாரியப்பன், கனகா மேல ஆசிட் ஊத்த முயற்சி செஞ்சிருக்கார். இது சம்மந்தமா மாரியப்பனை போலீஸாரும் கண்டிச்சாங்க. `ரெண்டு பேருக்கும் சொத்துப் பிரச்னையே பெரும் பிரச்னையா இருக்குற நிலைமையில மகளை மாரியப்பனுக்கு கல்யாணம் செஞ்சு கொடுக்க முடியாது’னு ஓப்பனாவே சொல்லிட்டார் முருகேசன்.

மகள் கனகாவும் மாரியப்பனிடம் பேச்சை நிறுத்த, `எப்படி உனக்கு வேற கல்யாணம் செய்யுறாங்கனு பார்ப்போம்’னு கனகாவிடமே சொல்லிருக்கார் மாரியப்பன். நிலப் பிரச்னையில பெரியவங்களே அமைதியா இருக்குற நேரத்துல சின்னப் பையன் கத்தியை எடுத்துட்டு வீட்டுக்குள்ளே போயிருக்கான்னா, நிலப் பிரச்னைக்கு குத்தின மாதிரித் தெரியலை. காதல் விவகாரம்தான் காரணம்” என்றனர்.

கதறும் உறவினர்கள்
கதறும் உறவினர்கள்

இது குறித்து போலீஸாரிடம் பேசினோம். ``மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முருகேசனின் மூத்த மகள் பிரியா விசாரணையில் நடந்தவற்றைக் கூறினார். அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, கொலை நடந்த சில நிமிடங்களில் மாரியப்பன் அந்த வீட்டைவிட்டு பதற்றத்துடன் வெளியேறி, பைக்கில் அவசரமாகச் சென்றதை உறுதி செய்தோம். இதையடுத்து மாரியப்பன், அவரின் தாய் லட்சுமி மீனா, தந்தை தங்கராஜ் ஆகிய மூவரையும் கைது செய்திருக்கிறோம்” என்றனர்.

இரண்டு குடும்பத்திற்குமான நிலப்பிரச்னை தொடர்பான வழக்கு, திருச்செந்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, முருகேசனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து தங்கராஜ், தூத்துக்குடி முதன்மை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில்தான் மாரியப்பன், தன் மாமா முருகேசன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

கொலை
கொலை
Representational Image

கைதான மாரியப்பன், போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், "நிலப் பிரச்னையால் என் மாமா அடிக்கடி எங்க குடும்பத்தில் தகராறு செய்து வந்தார். என் மீதும் ஆத்தூர் போலீஸில் பொய் புகார் கூறியுள்ளார். நிலப்பிரச்னை தொடர்பான வழக்கில் தீர்ப்பும் அவருக்கு சாதகமானது. இதனால் அவரைக் கொலை செய்யும் திட்டத்தில்தான் வீட்டுக்குப் போனேன். ஆனால், என்னை அவரது மகள் கனகா அவதூறாகப் பேசியதால் கத்தியால் குத்தினேன்" எனக் கூறியுள்ளார்.