மதுரை கூடல்நகர் பகுதியில் வசித்து வருகிறார் பிரபல கான்ட்ராக்டர் குணசேகரன். இவர் பொதுப்பணித்துறையின் ஒப்பந்தப் பணிகளை அதிகமாகச் செய்துவரும் ஏ-1 ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவரது வீட்டிற்கு வந்த மர்மக் கும்பல் தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு போலீஸ் தோரணையில் பேசியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``உங்கள் வீட்டில் பதுக்கல் பொருள்கள் உள்ளதா என்று ஆய்வு செய்ய வந்துள்ளோம்” எனத் தெரிவித்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து 1 மணி நேரம் வீட்டைச் சோதனை செய்துள்ளனர். கடைசியாக பீரோ லாக்கரையும் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். அப்போது பீரோவில் இருந்த சுமார் 170 பவுன் நகை மற்றும் 2, 80, 000 பணம், மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு குணசேகரன் மகனிடம் கையொப்பமும் வாங்கிக்கொண்டு குணசேகரனையும் அவரது மனைவியையும் அழைத்துச் சென்று வங்கியில் உள்ள பணத்தை எடுத்துத் தரச்சொல்லி மிரட்டியுள்ளனர்.

பாதி வழியில் அவர்களின் திட்டம் மாறியதால் கொள்ளைக் கும்பல் குணசேகரனையும் அவரது மனைவியையும் வழியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். அதற்குப் பின் ஒத்தக்கடை காவல்நிலையத்திற்கு விசாரிக்கச் சென்றுள்ளனர். அப்போதுதான் தங்களின் வீட்டுக்கு வந்த மர்மக் கும்பல் போலீஸ் இல்லை கொள்ளையர்கள் என்று தெரியவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதிர்ச்சியடைந்த குணசேகரன், இது குறித்து தனது வீட்டு அருகே உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் சி.சி.டி.வி., கேமராவில் ஆய்வு செய்ததில் நடந்த சம்பவம் உறுதியானது. அதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
போலீஸ் வசனங்களைப் பேசி குணசேகரனை நம்பவைத்து 170 நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகரக் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்து வரும் நிலையிலும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.