Published:Updated:

`கேஸை வாபஸ் வாங்க மாட்டியா..?' வீடு புகுந்து தாக்கிய கும்பல் - உ.பி-யில் மீண்டும் ஒரு கொடூரம்

தாக்குதல்
தாக்குதல்

உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் குடும்பத்தினர் மீது ஒரு கும்பல் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அபித், மிந்து, மெஹ்பூப், சாந்த் பாபு, ஜமீல் மற்றும் ஃபிரோஸ் ஆகியோர் 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேருக்கும் உள்ளூர் நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளியே வந்த அந்தக் கும்பல் ஜனவரி 9-ம் தேதி சிறுமியின் இல்லத்துக்குச் சென்றுள்ளனர். மதுபோதையில் சென்ற அந்தக் கும்பலுக்கும் சிறுமியின் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தங்கள் மீது அளித்த புகாரை வாபஸ் பெறும்படி சிறுமியின் தாயை அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மிரட்டியுள்ளனர்.

Representation Image
Representation Image

இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வழக்கை வாபஸ் பெற சிறுமியின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரத்தில் சிறுமியின் தாய் மற்றும் சகோதரியை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். ஜாமீனில் வெளியே வந்தவர்கள் சிறுமியின் குடும்பத்தைத் தாக்குவதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். சிறுமியின் குடும்பத்தைத் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

`பெண் கேட்டு வந்தான்; தரவில்லை!' - கேரள சிறுமிக்கு வால்பாறையில் நேர்ந்த துயரம்

அந்த வீடியோவில், தரையில் இரண்டு பெண்கள் விழுந்துகிடக்க ஒரு கும்பல் அவர்களின் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்துகின்றனர். சிகப்பு நிற ஆடை அணிந்த பெண் ஒருவர் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்துகிறது அந்தக் கும்பல். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தவர்களைக் கைது செய்துள்ளனர். சிறுமியின் தாயைக் கொலை செய்யும் நோக்கத்தில் அந்தக் கும்பல் தாக்கியதாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர்.

கடுமையான தாக்குதலுக்குள்ளான சிறுமியின் தாய் மற்றும் சகோதரி சிகிச்சைக்காக கான்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறுமியின் தாய் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒருவாரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தவர், வெள்ளிக்கிழமையன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துப் பேசிய கான்பூர் காவல்துறை அதிகாரிகள், ``சிறுமியின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய இருவரையும் விரைவில் கைது செய்வோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.

பின் செல்ல