பாகிஸ்தானில் இந்து சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தானில் தயா பீல் என்ற 40 வயது இந்து பெண், மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரின் தலை துண்டிக்கப்பட்டு, மார்பகங்கள் வெட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செனட்டர் கிருஷ்ண குமாரி என்பவர் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமத்துக்கு சென்றார்.

இதையடுத்து, அவர் இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில், ''கணவனை இழந்த தயா பீல் (40 வயது) கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். அவரின் உடல் மிக மோசமான நிலையில் இருந்தது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க காவல் துறையினர் அந்த கிராமத்துக்குச் சென்றிருக்கின்றனர்'' என குறிப்பிட்டிருக்கிறார். கிருஷ்ணகுமாரி தான் பாகிஸ்தானின் சென்டோர்ராக பதவிவகிக்கும் முதல் இந்து சமுதாயத்தை சேர்ந்த பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகுமாரியின் இந்த ட்விட்டர் பதிவுக்கு பாகிஸ்தானின் சமூக ஆர்வலரான பாஃகிர் ஷிவா காச்சி ," இந்து சமுதாயத்தை சேர்ந்த, கணவனை இழந்த அப்பாவி பெண்ணான தயா பீல் கொடுமையான முறையில் கொலை செய்யப் பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கொலை செய்தவருக்கு தண்டனை வழங்க வேண்டும் ",என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ``இது குறித்த செய்திகளை நாங்கள் பார்த்தோம். ஆனால் இது தொடர்பான முழு விவரங்கள் எங்களிடம் இல்லை. பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு, நல்வாழ்வு ஆகியவற்றை பாகிஸ்தான் அரசு உறுதிப்படுத்த வேண்டும்'' என தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதத்தில் பாகிஸ்தானின் சிந்து என்னும் இடத்தில் லஹரி என்பவர், 18 வயதான பூஜா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு, அவர் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்று நெருக்கடி கொடுத்திருக்கிறார். பூஜா இதை மறுத்த நிலையில் அவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.