Published:Updated:

`எனக்குப் பிறந்தநாள்; உன்னைக் கைது செய்யல'- அதிகாரியால் தப்பிய வருத்தப்படாத வாக்காளர் சங்கத் தலைவர்!

`எனக்குப்பிறந்தநாள் என்பதால் உன்னைக் கைது செய்யவில்லை' என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னிடம் கூறினார் என்று வருத்தப்படாத வாக்காளர் சங்கத் தலைவர் விஜயகுமார் கூறினார். ஆனால், அதை இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மறுத்துள்ளார்.

வருத்தப்படாத வாக்காளர் சங்கத் தலைவர் விஜயகுமார்
வருத்தப்படாத வாக்காளர் சங்கத் தலைவர் விஜயகுமார்

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த முஸ்தபா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாசாலை போலீஸார் வருத்தப்படாத வாக்காளர் சங்கத் தலைவர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் விஜயகுமார், பணம் கேட்டு மிரட்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விஜயகுமாரிடம் விசாரித்த போலீஸார் அவரைக் கைது செய்யவில்லை.

வாட்ஸ் அப் குரூப் சேட்டிங்
வாட்ஸ் அப் குரூப் சேட்டிங்

இதுகுறித்து நம்மிடம் பேசிய வருத்தப்படாத வாக்காளர் சங்கத் தலைவர் விஜயகுமார் ``நான் கடந்த 2016ம் ஆண்டு இந்தச் சங்கத்தைப் பதிவு செய்தேன். மேலும், வாட்ஸ்அப் குரூப் ஒன்றையும் நடத்திவருகிறேன். அந்த குரூப்பில் ஏராளமான சமூகப் பிரச்னைகள் குறித்த தகவல்கள் வரும். அதற்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்துவந்தேன்.

`வருத்தப்படாத வாக்காளர் சங்கத் தலைவர்; என்னைப் பகைத்தால் அவ்வளவுதான்!' - போலீஸிடம் சிக்கிய இளைஞர்

ராயப்பேட்டையில் உள்ள மாலின் எதிரில் அமைந்துள்ள வணிகவளாகங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. அதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகைப்படத்துடன் புகார் தெரிவித்தேன். ஆனால், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அலைக்கழித்தனர். தொடர்ந்து நான் எடுத்த முயற்சியால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால் அங்குள்ளவர்களுக்கு என் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

எப்.ஐஆர்
எப்.ஐஆர்

இந்தநிலையில் கடந்த 3-ம் தேதி அவ்வழியாக நான் சென்ற போது என் பைக்கில் சாவியைப் பறித்ததோடு எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். உடனடியாக நான் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (100) போன் செய்தேன். அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த போலீஸாரிடம் நடந்த விவரத்தைக் கூறினேன். உடனடியாக போலீஸார் அங்கிருந்து என்னைப் புறப்படும்படி கூறினார்கள். நான், அண்ணாசாலை காவல் நிலையத்துக்குச் சென்று எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது புகார் கொடுத்தேன். இந்தச் சமயத்தில் அங்கு வந்த போலீஸ் உயரதிகாரி ஒருவர் என்னைக் கடுமையாகத் தாக்கினார். என் வயிற்றிலும் நெஞ்சிலும் ஷூ காலால் உதைத்தார்.

இரவு 7 மணியளவில் என்னைக் கைது செய்வதாகக் கூறிய போலீஸார் அதற்கான ஆவணங்களில் கையொப்பம் பெற்றனர். பிறகு என்னை மருத்துவப் பரிசோதனைக்காக கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என்னைப் பரிசோதித்த டாக்டரகள் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி கூறினர். ஆனால், போலீஸார் என்னை அங்கு அழைத்துச் செல்லவில்லை. இதற்குள் என்னைக் கைது செய்யப்போகும் தகவல் கமிஷனருக்குத் தெரிந்தது. உடனடியாக உயரதிகாரிகள் விசாரித்தனர்.

கமிஷனருக்கு அனுப்பப்பட்ட கடிதம்
கமிஷனருக்கு அனுப்பப்பட்ட கடிதம்

இதையடுத்து இன்ஸ்பெக்டர், எனக்கு இன்று பிறந்தநாள். நிரபராதியான உன்னைக் கைது செய்ய எனக்கு மனம் வரவில்லை. அதனால் உன்னை விடுவிக்கிறேன். மேலும், எனக்கு நீ ஒரு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும். வருங்காலத்தில் எனக்கோ, எனக்கு மேல் உள்ள அதிகாரிக்கோ உன்னால் எந்தவித பிரச்னையும் வரக்கூடாது என்று கூறினார். அதன்பிறகு என்னை விடுவித்தனர். அன்றைய தினம் நான் காவல் நிலையத்தில் இருந்ததற்கான ஆதாரம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. என்னை விடுவிக்க உதவிய போலீஸ் கமிஷனருக்கு நன்றி கூறி கடிதமும் அனுப்பியுள்ளேன் என்றார்.

இது குறித்து அண்ணாசாலை இன்ஸ்பெக்டர் சந்திரமோகனிடம் கேட்டதற்கு, ``அன்றைய தினம் எனக்குப் பிறந்தநாளே கிடையாது. விஜயகுமார் மீதான புகாரின்பேரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை கைது செய்யவில்லை" என்றார்.