Published:Updated:

கல்வராயன் மலை: மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் 37 கஞ்சாச் செடிகள்! - ரகசியத் தகவலால் ஒருவர் கைது

கஞ்சாச் செடி வளர்த்தவர் கைது.
கஞ்சாச் செடி வளர்த்தவர் கைது.

மரவள்ளிக்கிழங்கு தோட்டத்துக்குள் கஞ்சாச் செடி வளர்த்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதியிலுள்ள மூலக்காடு அடுத்த ஆணைமடுவு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். அதே பகுதியில் அவருக்குச் சொந்தமான 1 1/4 ஏக்கர் விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளார். இந்த மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தின் நடுவே கஞ்சாச் செடிகள் வளர்க்கப்படுவதாகக் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், தோட்டத்தின் நடுவே ஆங்காங்கே இருந்த கஞ்சாச் செடிகளைக் கண்டறிந்து பிடுங்கி எடுத்ததோடு, கண்ணனையும் கைதுசெய்துள்ளனர்.

தோட்டத்தில் காவல்துறை அதிகாரிகள்
தோட்டத்தில் காவல்துறை அதிகாரிகள்

சம்பந்தப்பட்ட இடம், வடபொன்பரப்பி காவல் நிலையத்துக்கு உட்பட்டிருந்தாலும், சங்கராபுரம் காவல்நிலையத்தின் வட்ட ஆய்வாளர் பாலு என்பவர் விசாரிப்பதால், அவரைத் தொடர்புகொண்டு பேசினோம். ``மொத்தம் 37 கஞ்சாச் செடிகளை, மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தின் உள்ளேயிருந்து கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளோம். சம்பந்தப்பட்ட நபர் கண்ணனையும் கைதுசெய்துள்ளோம். இதற்கு முன்பாக, 'கண்ணனின் அப்பா (தற்போது இல்லை) காலத்தில் கஞ்சா விற்பனை செய்து, அவரின் அப்பா மீது புகார் இருந்ததாக' விசாரித்ததில் தெரியவந்தது. மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்திவருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு