Published:Updated:

சென்னை: ரூ.90,000-க்கு ஃபேஷியல்; நட்சத்திர ஹோட்டலில் அறை! - பிரபல அலுவலக கொள்ளையன் சிக்கியது எப்படி?

சென்னையில் லட்சக்கணக்கில் கொள்ளையடித்த பணத்தில் 90,000 ரூபாய்க்கு ஃபேஷியல் செய்த கொள்ளையனை நட்சத்திர ஹோட்டலில் வைத்து கைது செய்திருக்கின்றனர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை சேத்துப்பட்டில் உள்ள பிரபல வணிக வளாகத்தின் 4-வது மாடியில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மேலாளர் குமரவேல் என்பவர் கடந்த 11-ம் தேதி சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் அலுவலகத்தில் உள்ள லாக்கரை உடைத்து 72 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனதாகக் குறிப்பிட்டார். அதன்பேரில் இணை கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில் துணை கமிஷனர் கார்த்திக்கேயன் வழிகாட்டுதலின்பேரில் கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

பணம்
பணம்

அப்போது முகமுடி அணிந்துக் கொண்டு வரும் மர்மநபர், அலுவலகத்தை உடைத்து பணத்தை இரண்டு பைகளில் தூக்கிக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. நீண்ட தூரம் நடந்தே செல்லும் அந்த மர்ம நபர், ஒரு இடத்தில் ஆட்டோவில் செல்வதை சிசிடிவி மூலம் போலீஸார் கண்டறிந்தனர். பின்னர் ஆட்டோ சென்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது அது திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள விடுதி அருகே அந்த மர்ம நபரை இறக்கி விட்டு செல்வது தெரிந்தது. அதனால் உதவி கமிஷனர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் திருவல்லிக்கேணியில் உள்ள விடுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு விடுதியில் போலீஸார் தேடிய நபர் தங்கியிருந்தது தெரியவந்தது. ஆனால் அந்த நபர் விடுதி அறையை காலி செய்து விட்டு சென்றுவிட்டார். அதனால் விடுதியில் அந்த நபர் கொடுத்த செல்போன் நம்பர் மூலம் அவரின் இருப்பிடத்தை போலீஸார் கண்டறிந்தனர்.

சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அந்த மர்ம நபர் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரைப் பிடிக்க வியூகம் அமைத்தனர். ஹோட்டலில் வேலைப்பார்க்கும் ஊழியர் மூலம் காபியை அந்த நபரின் அறைக்கு கொண்டு செல்ல வைத்தனர். அப்போது காபியைக் கொண்டு சென்ற ஊழியர் கதவை தட்டியதும் போலீஸார் துப்பாக்கி முனையில் அவரைப் பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது அந்த நபரின் பெயர் பாண்டுரங்கன் (57), தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது.

``மணல் கொள்ளை பற்றி வாட்ஸ்அப்பில் தகவல் கொடுங்கள்" - மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர்
பாண்டுரங்கன்
பாண்டுரங்கன்

பாண்டுரங்கனிடம் பணம் எங்கே என்று கேட்டதற்கு அவர் அமைதியாக இருந்தார். பிறகு போலீஸார் தங்கள்பாணியில் விசாரித்தபோது ஹோட்டல் அறையிலிருந்த லாக்கரில் கட்டுக்கட்டாக பணத்தை அடுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அங்கிருந்து 60 லட்சம் ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். கொள்ளையடித்த பணத்தில் மீதியை என்ன செய்தாய் என்று விசாரித்தபோது செலவு செய்ததாக பாண்டுரங்கன் கூறியிருக்கிறார். ஒரே நாளில் இவ்வளவு ரூபாயை எப்படி செலவு செய்தாய் என்று போலீஸார் கணக்கு கேட்டபோது பேஷியலுக்காக பிரபல அழகு நிலையத்துக்குச் சென்றேன். அங்கு 90,000 ரூபாய் கொடுத்து பேஷியல் செய்தேன் என்று பாண்டுரங்கன் தெரிவித்திருக்கிறார். அதற்கான பில்லையும் போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

விசாரணையின்போது பாண்டுரங்கன் மீது ஏற்கெனவே பல திருட்டு வழக்குகள் உள்ளதும், அதில் தண்டனை பெற்ற அவர் சில வருடங்கள் திருந்தி வாழ்ந்து வந்ததாகவும் கூறியிருக்கிறார். கொரோனா காலக்கட்டத்தில் பணம் இல்லாமல் சிரமப்பட்டதால் மீண்டும் திருடியதாகவும் பாண்டுரங்கன் தெரிவித்திருக்கிறார். பாண்டுரங்கனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொள்ளை நடந்ததும் துரிதமாக செயல்பட்ட உதவி கமிஷனர் ரமேஷ் தலைமையிலான போலீஸாரை உயரதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு