ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த ஒருவரின் வீட்டுக்குச் சென்று அரசின் நிவாரணத்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி இறந்தவரின் குடும்பத்தினரிடமிருந்து டிப்டாப் ஆசாமி ஒருவர் ரூ.10 ஆயிரம் வாங்கிச் சென்று ஏமாற்றியிருக்கிறார். இது குறித்து அப்போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் விபத்தில் இறந்தவர்களின் வீடுகளைக் குறிவைத்து ஆசாமி ஒருவர் மோசடி செய்துவருவதாக, அந்தந்த போலீஸ் நிலையங்களிலிருந்து புகார்கள் குவிந்தன. இதையடுத்து, இந்த வழக்கைக் கையில் எடுத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ராமநாதபுரம் அருகேயுள்ள கொத்தகுடிப் பகுதியைச் சேர்ந்த சமயத்துரை என்பவரின் மகன் ஆனந்தராஜ். இவர் சில நாள்களுக்கு முன்பு மின்சாரம் தாக்கிப் பரிதாபமாக பலியானார். இது பற்றி அறிந்த மர்ம நபர் அங்கு சென்று அவரின் குடும்பத்தினரைச் சந்தித்து `நான் ஆட்சியர் அலுவலகத்தில் நிவாரணத்தொகை வழங்கும் பிரிவில் வேலை பார்க்கிறேன். உங்களுக்கான அரசின் நிவாரணத்தொகை ரூ.3 லட்சம் வழங்கலாம் என உத்தரவு வந்திருக்கிறது. இந்தத் தொகை உடனடியாக உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்றால் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். பணம் கொடுத்தால் ஓரிரு நாளில் காசோலை பெற்றுத் தருகிறேன்' என ஆசைகாட்டியிருக்கிறார்.
அவரின் உடை, நடை, ஆங்கிலம் கலந்த பேச்சு முதலியவற்றைக் கண்ட சமயத்துரையின் குடும்பத்தினர் நமக்காக உதவ வந்திருக்கிறாரே என மகிழ்ந்து பணம் தருவதாகக் கூறியிருக்கின்றனர். அதன்படி முதற்கட்டமாக ரூ.4,500 பெற்றுக்கொண்ட டிப்டாப் ஆசாமி ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்களுடன் நாளை காலை ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தின் முதல் மாடிக்கு வந்தால் தான் காசோலையைப் பெற்றுத்தருவதாகக் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டார். அந்த நபரின் பேச்சை நம்பி ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றபோது அப்படி ஒரு நபரும் இல்லை, அது போன்ற நிவாரணமும் வழங்கப்படுவதில்லை என்பது தெரியவந்தது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்தனர்.

இந்த நிலையில், ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் நின்றுகொண்டிருந்த பணம் வாங்கி ஏமாற்றிய அந்த நபரை சமயத்துரை கண்டறிந்து பணம் கேட்டிருக்கிறார். ஆனால், பணம் தர முடியாது எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்து தகராறு செய்திருக்கிறார் அந்த நபர். இதைப் பார்த்த பொதுமக்கள் அவர் மோசடி நபர் எனத் தெரிந்துகொண்டு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, பஜார் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த நபரைப் பிடித்து காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் இப்படி ஒரு நபர் சிக்கியுள்ள தகவலறிந்து குற்றப்பிரிவு போலீஸாரும் பிடிபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்த நபர் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மகன் பிரபு (36)என்பதும், இவர் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுவதாகக் கூறி ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் அரசின் நிவாரணத் தொகை வாங்கித்தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது குறித்து சமயத்துரை மகன் நாராயணன் (20) கொடுத்த புகாரின்பேரில் பஜார் போலீஸார் வழக்கு பதிந்து, மோசடி ஆசாமி பிரபுவைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.