வடமேற்கு டெல்லியில், மகேந்திரா பார்க் அருகில் ராம்கர் பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அங்கு ஒரு அறையில் பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளத்துடன் இறந்து கிடந்ததைக் கண்டறிந்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த பெண்ணின் சகோதரர் விகாஷ்தான், தன் சகோதரியைக் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் சகோதரர் கைது செய்யப்பட்டு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த விவகாரம் குறித்துப் பேசிய காவல்துறை துணை ஆணையர் (வடமேற்கு) உஷா , `` இறந்த பெண்ணும் அவர் சகோதரரும் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அவர்கள் இருவருக்குமிடையே ஏதோ குடும்பப் பிரச்னை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, அந்த பெண்ணை அவரின் சகோதரர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். கொலை செய்துகொண்டதை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார்" என்று பேசினார்.

இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட விகாஷிடம் டெல்லி போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சொந்த சகோதரனே, தன் சகோதரியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.