திருமணத் தகவல்களைக் கொடுக்கும் இணையதளங்கள் அதிகரித்த பிறகு, அவற்றில் கிடைக்கும் தகவல்களை எடுத்து மோசடி செய்யும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. மும்பை காஞ்சூர் மார்க் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் வரன் தேடி மராத்தி மேட்ரிமோனியல் தளத்தில் பதிவுசெய்து வைத்திருந்தார். அதில் கிடைத்த தகவல்களை எடுத்து, விஷால் சவ்ஹான் என்பவர் அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டு பேசினார்.

இருவரும் அடிக்கடி போனில் தொடர்புகொண்டு பேசினர். இதில் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக விஷால் உறுதியளித்தார். அவரின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு அவசரமாகத் தனக்குப் பணம் தேவைப்படுவதாகக் கூறி அப்பெண்ணிடம் ரூ.2.5 லட்சம் பெற்றார். அப்பெண்ணும் விஷாலும் நேருக்கு நேர்கூட சந்தித்துக்கொண்டதில்லை. இருவரும் போனில் மட்டுமே அடிக்கடி பேசியிருக்கின்றனர். அந்த நட்பைவைத்து அந்தப் பெண் விஷாலுக்கு ரூ.2.5 லட்சத்தை அவர் சொன்ன வங்கிக் கணக்குக்கு டிரான்ஸ்ஃபர் செய்துள்ளார். பணம் கைக்கு வந்ததும், அப்பெண்ணுடனான தொடர்பை அடியோடு துண்டித்துவிட்டார் விஷால்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது தொடர்பாக அந்தப் பெண் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது அந்தப் பெண் டிரான்ஸ்ஃபர் செய்த வங்கிக் கணக்கு போலியானது என்று தெரியவந்தது. அதோடு மோசடி செய்த வாலிபரையும் பெண்ணால் சரியாக அடையாளம்காண முடியவில்லை. மும்பை சயான் போலீஸ் நிலையத்திலும் அது போன்ற ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் புகார் செய்த பெண்ணிடம் பழகிய நபர் அவரிடம் நம்பிக்கையைப் பெற்ற பிறகு பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி ரூ.17 லட்சத்தை அப்பெண்ணிடமிருந்து வாங்கினார். பணத்தை அப்பெண் திருப்பிக் கேட்டபோது கொடுக்க மறுத்தார். இது குறித்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தனர்.

காஞ்சூர் மார்க் பெண்ணிடம் மோசடி செய்தவரும், சயானில் மோசடி செய்தவரும் ஒருவர் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து தீவிர விசாரணை நடத்தியல் விஷால் தானேயில் இருப்பது தெரியவந்தது. அவரின் வீட்டுக்குச் சென்றபோது எந்நேரமும் வீடு பூட்டியே இருந்தது. இதையடுத்து போலீஸார் டெலிவரி பாய் வேஷத்தில் விஷால் வீட்டுக்குச் சென்று அவரைக் கைதுசெய்தனர்.
அவரிடம் விசாரித்தபோது திருமண தகவல் இணையதளங்களில் பெயரைப் பதிவு செய்துகொண்டு, வரனுக்காகக் காத்திருக்கும் பெண்களின் போன் நம்பரை எடுத்துப் பேசி, அவர்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு, அவர்களிடம் திருமணம் செய்துகொள்வதாகவோ அல்லது பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகவோ கூறி பெண்களிடம் பணத்தை வாங்கி மோசடி செய்வதை வழக்கமாகக்கொண்டிருந்தார். அவரின் போனில் சோதனை செய்து பார்த்தபோது 35 முதல் 40 பெண்களின் விவரம் இருந்தது. அவர்களுக்கு போலீஸார் போன் செய்து விசாரித்தபோது தாங்கள் ஏமாற்றப்பட்டதாகத் தெரிவித்தனர். விஷால் பி.டெக் முடித்து எம்.பி.ஏ-வும் படித்திருந்தார். அவரிடம் போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். மும்பை முழுவதும் பெண்கள் அவரிடம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி சங்கரம்சிங் தெரிவித்தார்.