சேலம், கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடாவிடம் நேரடியாகப் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில், தனது காதலனுடன் பைக்கில் சென்றதை மர்மநபர் ஒருவர் படம்பிடித்து வைத்துக்கொண்டு தன்னைத் தனியாகச் சந்தித்து மிரட்டிப் பணம் கேட்டதுடன், தன்னை அவருடன் தனிமையில் வர வற்புறுத்திவருவதாகப் புகார் அளித்திருக்கிறார். அதே போன்று ஓமலூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் தன் காதலனுடன் சேர்ந்திருக்கும் படத்தைக் காட்டி மர்மநபர் ஒருவர் தன்னிடமிருந்து இரண்டு பவுன் நகையைப் பறித்துச் சென்றதாக மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தார்.
இது குறித்து விசாரிக்க துணை ஆணையர் லாவண்யா மேற்பார்வையில், உதவி கமிஷனர் அசோகன், ஆனந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில், இந்த நகைப் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டது சேலம் வீராணம் அல்லிக்குட்டை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த சர்க்கரை வியாபாரி ராஜா என்கிற சரவணன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை அதிரடியாக போலீஸார் கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சர்க்கரை வியாபாரி சரவணன், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் பைக்கில் கட்டிப்பிடித்தபடி செல்லும் இளசுகளை நோட்டமிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அப்படி மிகவும் நெருக்கமாக இருக்கும் காதல் ஜோடிகளை அவர்களுக்குத் தெரியாமலேயே ரகசியமாகத் தனது செல்போனின் படம் பிடித்திருக்கிறார். அதில் சம்பந்தப்பட்ட பெண்களை மட்டும் பின்தொடர்ந்து சென்று, அவர்கள் அவர்களுடைய காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை காட்டி பணம் கேட்டதுடன், இவருடன் தனிமையில் இருக்கவும் வற்புறுத்தியிருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. அதன் மூலம் போலீஸார் தனிப்பட்ட விசாரணை மேற்கொண்டுவருவதுடன், இந்த நபரால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். சேலத்தில் காதல் ஜோடிகளைப் பின்தொடர்ந்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரால் பரப்பரப்பு நிலவுகிறது.