Published:Updated:

மூன்றாவது திருமணத்துக்காக பெற்ற குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்ற தாய்! - தூத்துக்குடி அதிர்ச்சி

தூத்துக்குடியில் மூன்றாவதாகத் திருமணம் செய்துகொள்வதற்காக ,தனது 9 மாத ஆண் குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்த தாய் உள்ளிட்ட குடும்பத்தினரை போலீஸார் தேடிவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபமலர் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியருக்கு, அதிவீரமான் என்ற 9 மாத ஆண் குழந்தை இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தத் தம்பதியர் பிரிந்து வாழ்ந்துவருகின்றனர். இந்த நிலையில், ஜெபமலருக்குத் திருமணம் நடத்திவைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால், திருமணத்துக்கு அவருடைய குழந்தை தடையாக இருப்பதாக நினைத்த ஜெபமலரும், அவரின் பெற்றோரும் குழந்தையை விற்க செய்ய முடிவெடுத்துள்ளனர்.

குழந்தையை விலைக்கு வாங்கிய செல்வமணி, புரோக்கர் கார்த்திகேயன்
குழந்தையை விலைக்கு வாங்கிய செல்வமணி, புரோக்கர் கார்த்திகேயன்

இதையடுத்து ஜெபமலர், தாய் கிருபா, தந்தை செல்வராஜ், அவரின் சகோதரர் அந்தோணி, தாய்மாமா டேனியல் ஆகியோர் கல்யாண புரோக்கரான ஜேசுதாஸ் என்பவரை அணுகியுள்ளனர். அவர், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மூலமாக குழந்தையை விற்பனை செய்ய பேசி முடித்துள்ளனர். அதன்படி, கடந்த 24-ம் தேதி குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்துள்ளனர்.

தன் குழந்தையை விற்பனை செய்த தகவலை அறிந்த மணிகண்டன், 28-ம் தேதி தனது குழந்தையை மீட்டுத்தருமாறு தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகிலுள்ள மேலச்சூரங்குடியைச் சேர்ந்த செல்வமணி, ஸ்ரீதேவி என்ற குழந்தையில்லா தம்பதியருக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, செல்வமணி, ஸ்ரீதேவி, அவர்களுக்கு உதவிய ராஜபாளையத்தைச் சேர்ந்த புரோக்கர் கார்த்திகேயன் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி ஜெயக்குமார்
செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி ஜெயக்குமார்

அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட குழந்தை, தந்தை மணிகண்டனிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை விற்பனை செய்த தாய் ஜெபமலர் உள்ளிட்ட நான்கு பேரைத் தேடிவருகின்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி ஜெயக்குமார், ``மணிகண்டன், ஜெபமலர் இவர்கள் இருவருமே ஒருவரையொருவர் இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டவர்கள். குழந்தை பிறந்த பிறகு கருத்து வேறுபாட்டால் இருவரும் தனித்தனியே வசித்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீலகிரி: வாட்டிய வறுமை.. 3 குழந்தைகளையும் விற்ற பெற்றோர்! - ஊட்டியை உறையவைத்த குழந்தை விற்பனை

ஜெபமலருக்கு மூன்றாவதாகத் திருமணம் செய்துவைக்க அவரின் பெற்றோர் முடிவு செய்ததால், அதற்கு ஒன்பது மாதக் குழந்தை தடையாக இருக்கும் என நினைத்து புரோக்கர்கள், ஜேசுதாஸ், கார்த்திகேயன் ஆகியோர் மூலமாக குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர். இதில், புரோக்கர்கள் இருவரும் தங்களின் கமிஷனாக ரூ.50,000-ஐ எடுத்துக்கொண்டு ரூ.2.5 லட்சத்துக்கு நாகர்கோவிலைச் சேர்ந்த குழந்தையில்லாத் தம்பதிக்கு விற்பனை செய்துள்ளனர். தற்போது குழந்தை தந்தை மணிகண்டனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார்.

குழந்தையின் தந்தை மணிகண்டன், ``கணவன், மனைவிக்கு இடையில கருத்து வேறுபாடு வர்றது வழக்கமானதுதான். கருத்து வேறுபட்டாலதான் நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிருந்தோம்.

மீட்கப்பட்ட குழந்தையுடன் மணிகண்டன்
மீட்கப்பட்ட குழந்தையுடன் மணிகண்டன்

என்னோட வாழ விருப்பம் இல்லைன்னா என்கிட்ட ஓப்பனா சொல்லியிருக்கலாம். வேறு கல்யாணம் செய்யுறதுக்காக இப்படிப் பெத்த குழந்தையை விற்கலாமா? அந்தப் பிஞ்சுக் குழந்தை என்ன பாவம் செஞ்சுச்சு? எங்கிட்டயாவது குழந்தையை ஒப்படைச்சிருக்கலாம். குழந்தையை விற்று அந்தப் பணத்தின் மூலமாக ஆடம்பர வாழ்க்கை வாழ நினைச்ச என் மனைவிக்கும்ம், அவளோட குடும்பத்தினருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்” என்றார் ஆவேசத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு