Published:Updated:

பிணைக் கைதிகளான 21 சிறுவர்கள்; 10 மணி நேரப் போராட்டம்!- சினிமா பாணியில் உ.பியைப் பதறவைத்த குற்றவாளி

சிறுவர்களை மீட்கும் பணியில் காவலர்கள்
சிறுவர்களை மீட்கும் பணியில் காவலர்கள் ( ANI )

உத்தரப்பிரதேசத்தில் கொலைக் குற்றவாளி ஒருவர் தன் பகுதியைச் சேர்ந்த 23 சிறுவர்களை பிணைக்கைதியாகப் பிடித்து வைத்திருந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஃபரூகாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் பாதம். கொலைக் குற்றவாளியான இவர் கடந்த சில நாள்களுக்கு முன்னர்தான் ஜாமீனில் சிறையிலிருந்து வெளியில் வந்துள்ளார். இவர் தன் மனைவி மற்றும் ஒரு வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுபாஷ், நேற்று காலை மகளுக்குப் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக தன் பகுதியில் உள்ள சில சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துள்ளார்.

சிறுவர்களை மீட்கும் பணியில் காவலர்கள்
சிறுவர்களை மீட்கும் பணியில் காவலர்கள்
ANI

23 சிறுவர்களும் பிறந்தநாள் விழா என நம்பிச் சென்றுள்ளனர். சிறுவர்கள் சுபாஷின் வீட்டுக்குச் சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த மற்ற சிறுவர்களின் பெற்றோர், சுபாஷ் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டியுள்ளனர். ஆனால் உள்ளே தனியாக இருந்த சுபாஷ் கிராம மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த மக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த ஃபரூகாபாத் காவல்துறையில் நடந்த விஷயம் பற்றி ஊர் மக்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது தன் மனைவி, மகள் உட்பட 23 சிறுவர்களையும் சுபாஷ் பிணைக் கைதியாக வைத்துள்ள விவரம். பின்னர் மேலிடத்துக்குத் தகவல் தெரிவித்த காவலர்கள் சுபாஷிடம் போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

சிறுவர்களை மீட்கும் பணியில் காவலர்கள்
சிறுவர்களை மீட்கும் பணியில் காவலர்கள்

காவலர்களின் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லாத சுபாஷ் அவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். சிறுவர்கள் அனைவரையும் தன் வீட்டுத் தரை தளத்தில் வைத்து துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளார். `போலீஸார் ஏதேனும் தவறான முடிவு எடுத்தால் வீட்டில் இருக்கும் சிலிண்டரை வெடிக்கச் செய்து அனைவரையும் சேர்த்துக் கொளுத்தி விடுவேன்’ என்றும் மிரட்டியுள்ளார். இதனால் நிதானமடைந்த காவலர்கள், குழந்தைகளை உயிருடன் மீட்பதில் அதிக கவனம் செலுத்தினர்.

பின்னர் கான்பூர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் தலைமையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு கமாண்டே படையினர் சுபாஷ் வீட்டைச் சுற்றி வளைத்தனர். இவர்களைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச டிஜிபி ஓ.பி சிங் போன்ற அனைத்து உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து 23 சிறுவர்களையும் உயிருடன் மீட்பது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளனர். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி சிங், ``தன் மகளின் பிறந்த நாள் என்று கூறி 21 சிறுவர்களை வீட்டுக்கு அழைத்துள்ளார் சுபாஷ். பிறகு அவர்கள் அனைவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டி பிணைக் கைதிகளாக வைத்துள்ளார்.

ஓ.பி சிங்
ஓ.பி சிங்
ANI

குழந்தைகளை விடுவிக்க என்ன கோரிக்கை உள்ளது என நாங்கள் அவரிடம் கேட்ட போது அந்தப் பகுதி எம்.எல்.ஏவிடம் பேச வேண்டும் என்று மட்டும்தான் கூறினார். வேறு எந்தக் கோரிக்கையும் அவர் கூறவில்லை. அவரின் கோரிக்கையை நிறைவேற்றி குழந்தைகள் அனைவரையும் உயிருடன் மீட்பதே எங்களின் முக்கிய நோக்கம்” என்று பேசியுள்ளார்.

பல மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரு வயதுக் குழந்தையை மட்டும் வெளியில் அனுப்ப சம்மதித்துள்ளார் சுபாஷ். அந்தக் குழந்தை வெளியேறிய பிறகு தன் கோரிக்கையை நிறைவேற்ற காலதாமதம் ஆனதால் போலீஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த தொடங்கியுள்ளார். இதனால் பதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டக் காவலர்கள் கூரை வழியாக அதிரடியாக சுபாஷின் வீட்டுக்குள் நுழைந்த கமாண்டோ படையினர் சுபாஷை என்கவுன்டர் செய்துவிட்டு பிணைக் கைதிகளாக இருந்த அனைத்துச் சிறுவர்களையும் உயிருடன் பத்திரமாக மீட்டுள்ளனர். சுமார் 10 மணி நேர நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

சுபாஷ் பாதம்
சுபாஷ் பாதம்

சுபாஷ் பாதம் பற்றிப் பேசியுள்ள காவலர்கள், ``சுபாஷ் ஒரு கொலைக் குற்றவாளி. தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளார். அவர் சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதன் காரணமாகவே இப்படி நடந்துகொண்டுள்ளார். அவரது கோரிக்கை படி எம்.எல்.ஏவையும் நாங்கள் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தச் சொன்னோம். ஆனால் அவர் வந்ததும் எம்.எல்.ஏவுடன் பேச முடியாது என சுபாஷ் தெரிவித்துவிட்டார்” என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் மோஹித் அகர்வால் கூறியுள்ளார்.

இந்நிலையில் சுபாஷ் செய்த செயலுக்கு அவரது மனைவியை ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில மணி நேரச் சிகிச்சைக்குப் பிறகு எதுவும் பலனளிக்காததால் இன்று காலை சுபாஷின் மனைவியும் உயிரிழந்துள்ளார். இதனால் ஃபரூகாபாத் பகுதியில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.

பின் செல்ல