Published:Updated:

`வயலுக்குள் புதைக்கப்பட்ட உடல்; கிணற்றுக்குள் வீசப்பட்ட பைக்' -நெல்லையை உலுக்கிய இளைஞரின் கொலை

தோண்டி எடுக்கப்படும் சடலம்
தோண்டி எடுக்கப்படும் சடலம்

நெல்லை புறநகர்ப் பகுதியில் உள்ள வயல்வெளியில் கொலையானவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மது போதையில் நண்பரே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. 

நெல்லையை அடுத்த கரையிருப்பு சுந்தராபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர், மாசானமூர்த்தி. தூத்துக்குடி துறைமுகத்தில் தனியார் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு இரண்டு வயதில் சுதேஷ் லட்சுமணன் என்ற ஆண் குழந்தை உள்ளது. 

கூடியிருக்கும் உறவினர்கள்
கூடியிருக்கும் உறவினர்கள்

பொங்கல் விடுமுறைக்காக கடந்த 15-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றிருக்கிறார் மாசானமூர்த்தி. அப்போது, வீட்டில் இருந்து அவிக்கப்பட்ட பனங்கிழங்கு உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் சென்றவர், அதன் பின்னர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் உறவினர்கள் அனைவரும் அவரைத் தேடியுள்ளனர். அவரைக் கண்டுபிடிக்க முடியாததால் தச்சநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வயல் வெளியில் உள்ள கிணற்றுக்குள் பெட்ரோல், ஆயில் உள்ளிட்டவை மிதந்ததால் உறவினர்கள் சந்தேகமடைந்தனர். அந்தக் கிணற்றுக்குள் மாசானமூர்த்தியின் பைக் கிடக்கலாம் எனப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். மீண்டும் போலீஸாருடன் சேர்ந்து தேடியபோது அருகில் ஒரு இடத்தில் புதிதாக மூடப்பட்ட குழி இருந்தது. 

கதறி அழும் உறவினர்கள்
கதறி அழும் உறவினர்கள்

அந்த இடத்தில் மாசானமூர்த்தி கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்ததால், வருவாய்த்துறையினர் முன்னிலையில் காவல்துறையினர் இன்று அந்த இடத்தில் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த இடத்தில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு காத்திருந்த உறவினர்களும் மாசானமூர்த்தியின் மனைவி கிருஷ்ணவேணியும் உடலைப் பார்த்து உறுதிப்படுத்திய பின்னர் சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீஸார், மாசானமூர்த்தியின் நண்பர் ஒருவர் உள்ளிட்ட 10 பேரைப் பிடித்து விசாரித்து வருகிறார்கள். மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மாசானமூர்த்தி கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

தோண்டி எடுக்கப்பட்ட உடல்
தோண்டி எடுக்கப்பட்ட உடல்

தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் முன்னேற்றம் இருப்பதால் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பின் செல்ல