Published:Updated:

`காதல் திருமணம்; டிக்டாக் பதிவு; ஆத்திரமூட்டும் பேச்சு’- நெல்லை புதுமாப்பிள்ளை ஆணவக்கொலையா?

கொலையான நம்பிராஜன்
News
கொலையான நம்பிராஜன்

நெல்லையில் காதல் திருமணம் செய்த வாலிபர் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த நம்பிராஜன் என்ற 21 வயது இளைஞரும், அதே ஊரைச் சேர்ந்த வான்மதி என்பவரும் காதலித்து வந்திருக்கிறார்கள். இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், வான்மதியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனாலும் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டார்கள். 

murder
murder

சொந்த ஊரில் குடியிருந்தால் பிரச்னை ஏற்படும் என்பதால் இருவரும் நெல்லை டவுன் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்துள்ளனர். இரு மாதங்களான நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நம்பிராஜனை அவரது நண்பரான முத்துப்பாண்டி என்பவர் மதுகுடிக்க அழைத்துச் சென்றுள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நம்பிராஜனும் முத்துப்பாண்டியும் குறுக்குத்துறை ரயில்வே கேட் பகுதியில் மதுகுடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த வான்மதியின் சகோதரரும் அவரது நண்பர்களும் சேர்ந்து நம்பிராஜனின் கழுத்தை தனியாக வெட்டியெடுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர் குடிபோதையில் ரயிலில் விழுந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக உடலைத் தண்டவாளத்தில் வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். 

நம்பிராஜன் டிக்டாக் வீடியோ காட்சி
நம்பிராஜன் டிக்டாக் வீடியோ காட்சி

போலீஸ் விசாரணையில் வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி மீது சந்தேகம் எழுந்ததால், அவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, நம்பிராஜன் தன் தங்கையைக் காதலித்துத் திருமணம் செய்ததால் ஊர்க்காரர்கள் அவமானமாகப் பேசியிருக்கிறார்கள். குடும்ப மானம் போனதாகக் கருதிய செல்லச்சாமி ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், நம்பிராஜன் டிக்டாக் செயலியில் ’ஊருக்குள்ள எது நடந்தாலும் என்னைக் கேட்காம நடக்காது..’ என்கிற ரீதியில் பதிவுகளைச் செய்து வந்திருக்கிறார். அரிவாளுடன் தோன்றி, ‘என்னை விடப் பெரிய ரவுடி எவன்டா இருக்கான்’ எனப் பேசியுள்ளார். இது கூடுதல் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் கொலை செய்ததாக செல்லச்சாமி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஒரே சமூகத்துக்குள் காதலித்து திருமணம் நடந்தபோதிலும் இந்தக் கொலைச் சம்பவத்தை ஆணவக்கொலை என்றே சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள். இது குறித்து சமூக ஆர்வலரான எவிடென்ஸ் கதிர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’நம்பிராஜனின் குடும்பம் வான்மதி குடும்பத்தை விடவும் பொருளாதாரத்தில் சற்று குறைந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அதனாலேயே காதலுக்கு வான்மதியின் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

திருமணத்துக்குப் பின்னர், வான்மதியின் தந்தை தங்கப்பாண்டியனின் தாய்மாமா கணபதி, சுப்பையா உள்ளிட்ட முக்கிய உறவினர்கள் நம்பிராஜன் வீட்டுக்குச் சென்று நூறு ரூபாய் பத்திரத்தில், வான்மதியும் நம்பிராஜனும் இனிமேல் தங்கப்பாண்டியனின் குடும்பத்தினருடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது, நல்லது கெட்டதில் கலந்துகொள்ளக் கூடாது என எழுதிக் கையொப்பம் வாங்கியிருக்கிறார்கள். 

ஆணவக்கொலைகள் சாதியின் பெயரால் மட்டுமல்லாமல் பொருளாதார அடிப்படையிலும் ஆணாதிக்க மனநிலையிலும் நடக்கின்றன.
சமூக ஆர்வலர்கள்

இவ்வளவும் நடந்த பின்னரும் திட்டமிட்டு அவரை அழைத்துச் சென்று கொலை செய்திருக்கிறார்கள். அதனால் நெல்லை மாவட்டத்தில் ஆணவப் படுகொலை என்பது சாதியின் பெயரால் மட்டுமல்லாமல் பொருளாதார அடிப்படையிலும் ஆணாதிக்க அடிப்படையிலும் நடக்கிறது. நம்பிராஜன் படுகொலையும் பொருளாதாரம் மற்றும் ஆணாதிக்க அடிப்படையில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் வரும் காட்சி போல நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். வழக்கு முடியும் வரை அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. பாதிக்கப்பட்ட நம்பிராஜன் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இனியும் காலதாமதம் செய்யாமல் ஆவணக் குற்றங்களுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்’’ எனத் தெரிவித்தார். 

கொலை செய்யப்பட்ட நம்பிராஜன்
கொலை செய்யப்பட்ட நம்பிராஜன்

இதனிடையே, நம்பிராஜன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வான்மதியின் சகோதரர் செல்லச்சாமி, மறுகால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி, செல்லத்துரை, முருகன், விஸ்வநாதன் ஆகியோரிடம் விசாரணை நடத்திய நெல்லை டவுன் போலீஸார், ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.