திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உலகம்பட்டியார் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராயப்பன் (65). இவர் வீட்டுக்கருகே வசிப்பவர் ராணி. அவர் நாய் ஒன்றை வளர்த்துவந்திருக்கிறார். அந்த நாய் அந்தப் பகுதியில் உள்ளவர்களைப் பார்த்து, குரைத்துக்கொண்டும், விரட்டிக்கொண்டும் இருந்திருக்கிறது. இதனால் ராயப்பனை நாயைக் கட்டிப்போட்டு வளர்க்கும்படி கூறியதில் இரு வீட்டாருக்கும் விரோதம் இருந்திருக்கிறது.

இதற்கிடையே ராயப்பன் ஊர்ப் பெரியவர்களிடம், தனது வீட்டருகே நாய்த் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், தன் பேரன் உள்ளிட்ட சிறுவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஊர்ப் பெரியவர்களோ திருவிழா முடிந்ததும் பேசித் தீர்வு காண்பதாக உறுதியளித்திருந்தனர்.
இந்த நிலையில் ராயப்பன் நேற்று மாலை தனது விவசாயக் கிணற்றில் துணி அலசிவிட்டுத் திரும்பியபோது அவரின் பேரன்களிடம், `பக்கத்து வீட்டு நாய் வந்தால் கடிக்கும்’ எனக் கூறி குச்சியை எடுத்து வருமாறு கூறினார். இதைக் கேட்ட எலெக்ட்ரிஷன் வேலை பார்த்துவரும் ராணியின் மகன்களாக வின்சென்ட் (22), டேனியல் (20) இருவரும் தங்கள் தாயாருடன் சேர்ந்து, `குழந்தைபோல வளர்க்கும் எங்கள் நாயை நாய் என்கிறாயா?’ எனக் கூறி பிரச்னை செய்துள்ளனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து வின்சென்ட் கட்டையால் முதியவரைத் தாக்கிக் கீழே தள்ளியிருக்கிறார். இதையடுத்து டேனியல் வீட்டில் வைத்திருந்த சேவல் சண்டைக்குப் பயன்படுத்தப்படும் கத்தியைக்கொண்டு முதியவரின் நெஞ்சில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.

இது குறித்து தகவலறிந்த தாடிக்கொம்பு போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து ராயப்பனின் உடலைக் கைப்பற்றி, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் ராணி, வின்சென்ட், டேனியல்ஆகியோரைக் கைதுசெய்து ரிமாண்ட் செய்தனர். நாயை, `நாய்’ என்று திட்டிய பிரச்னைக்காக ஓர் உயிர் பறிபோன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.