Published:Updated:

`திருடிய இடங்கள் 20, வழக்குகளோ 40; ஸ்டார் ஹோட்டல் வேஸ்ட்!’- சகோதரி, மனைவியால் மனம்மாறிய கமலக்கண்ணன்

சென்னையில் திருடிய பணத்தில் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி ஜாலியாக இருப்பேன் என திருந்தி வாழ முடிவெடுத்த கமலக்கண்ணன் நம்மிடம் தெரிவித்தார்.

கமலக்கண்ணன்
கமலக்கண்ணன்

திருவண்ணாமலை மாவட்டம், அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் மீது சென்னை காவல் நிலையங்களில் 40-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கமலக்கண்ணனுக்கும் வேலூர் மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த கலாவுக்கும் கடந்த 29.5.2019-ல் திருமணம் நடந்தது. திருமணமான 20-வது நாளில் திருட்டு வழக்கில் கமலக்கண்ணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த கமலக்கண்ணன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். பரங்கிமலை காவல் சரகத்தில் கமலக்கண்ணனுக்கு அதிக வழக்குகள் உள்ளதால் இணை கமிஷனர் மகேஷ்வரியைச் சந்திக்கும்படி கூறினர். அதன்படி இணை கமிஷனர் மகேஷ்வரியை மனைவி கலாவுடன் சந்தித்து திருந்தி வாழும் முடிவை கூறியுள்ளார் கமலக்கண்ணன்.

கமலக்கண்ணன், கலா
கமலக்கண்ணன், கலா

கமலக்கண்ணிடம் பேசினோம். ``நான் 4-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். கொஞ்ச காலம் அப்பாவுடன் சேர்ந்து விவசாயம் செய்தேன். பின்னர் கொத்தனாராக வேலை பார்த்தேன். வேலைக்காக சென்னை வந்தேன். 2015-ம் ஆண்டு அடிதடி வழக்கில் என்னை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறையில்தான் தி.நகரைச் சேர்ந்த சீனிவாசன், விழுப்புரத்தைச் சேர்ந்த குள்ளக்குமார், பல்லாவரத்தைச் சேர்ந்த கண்ணன் ஆகியோருடன் நட்பு கிடைத்தது. நாங்கள் 4 பேரும் நண்பர்களாகினோம். சீனிவாசன்தான் எனக்கு குரு. அவர்தான் வீடுகளில் எப்படி திருட வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தார். சென்னை, காஞ்சிபுரத்தில் நான் பல இடங்களில் திருடியுள்ளேன்.

முதல்முதலாக கூடுவாஞ்சேரியில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைக் கொள்ளையடித்தோம். 3 லட்சம் ரூபாய்க்கு அதை விற்று ஜாலியாக வாழ்க்கையைத் தொடங்கினேன். அந்த வழக்கில் போலீஸார் என்னை சிறையில் அடைத்தனர். பின்னர் சிறையிலிருந்து வெளிவந்ததும் நண்பர்களோடு சேர்ந்து திருட ஆரம்பித்தேன். கைநிறைய பணம் கிடைத்ததும் என் வாழ்க்கை மாறியது. நட்சத்திர ஹோட்டல்களில்தான் அறை எடுத்து தங்குவேன். விலை உயர்ந்த உடைகளைத்தான் அணிவேன். அந்த வாழ்க்கை அப்போது சந்தோஷமாக இருந்தது. ஆனால், அதை இப்போது நினைத்துப்பார்க்கும்போது நரகமாக உள்ளது.

கமலக்கண்ணன், கலா
கமலக்கண்ணன், கலா

என்னுடைய லைஃப் ஸ்டைலைப் பார்த்து எனக்கே ஆச்சர்யமாக இருக்கும். கையில் பணம் இல்லை என்றால் திருடச் செல்வேன். பணம் செலவாகும் வரை ஜாலியாக வாழ்வேன். சென்னையில் வசதியாக வாழும் மக்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை முதலில் நோட்டமிடுவேன். பின்னர் அந்த வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிப்பேன். திருடிய பணத்தில் தானம், தர்மம் செய்வேன். எங்கு திருட்டு நடந்தாலும் என்னை போலீஸார் பிடித்து விசாரிப்பார்கள். நான் திருடாத இடத்தில்கூட திருடியதாக என் மீது போலீஸார் வழக்குகள் போட்டனர். இதுவரை 5 தடவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 20 இடங்களில் திருடியிருக்கிறேன். ஆனால் 40 இடங்களில் திருடியதாக வழக்குகள் இருக்கிறது.

இதனால் போலீஸார் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அதனால் போலீஸாருக்கு தொல்லை கொடுக்கவே திருடினேன். என்னைப் பிடித்து சிறையில் அடைத்தாலும் சில மாதங்களில் வெளியில் வந்துவிடுவேன். இப்படியே கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு தொடக்கம் வரை என் வாழ்க்கை கடந்தது. எத்தனையோ போலீஸ் அதிகாரிகள் என்னை திருந்தி வாழக் கூறினார்கள். ஆனால், என் மனம் மாறவில்லை. என் குடும்பத்திலும் நான் திருடன் என்பது தெரிந்துவிட்டது. முதலில் அவமானமாக இருந்தது. அதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர் வீடுகளுக்கு செல்வதை தவிர்த்தேன்.

வழக்குகள்
வழக்குகள்

இந்தச் சமயத்தில் என்னுடைய சகோதரியைச் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் அன்பாகப் பேசி என் மனதை மாற்றினார். உனக்குத் திருமணம் நடந்து குடும்பம் குழந்தைகள் வந்துவிட்டால் நீ திருந்திவிடுவாய் என்று கூறினார். உடனே எனக்குப் பெண் பார்த்தார். அரக்கோணத்தைச் சேர்ந்த கலாவை பெண் பார்க்க என்னை அழைத்துச் சென்றார். அவரிடம் என் மீது வழக்குகள் உள்ளன என்ற உண்மையைக் கூறினேன். திருமணத்துக்குப்பிறகு திருந்தி வாழ்வதாக சத்தியம் செய்தேன். அதற்கு கலாவும் சம்மதித்தார். இருவருக்கும் திருமணம் நடந்து சந்தோஷமாக சென்னை கொருக்குப்பேட்டையில் வாழ்க்கையைத் தொடங்கினோம்.

திருமணம் நடந்து 20வது நாளில் என்னை வேளச்சேரி போலீஸார் கைது செய்தனர். ஆனால், அந்தத் திருட்டு சம்பவத்தில் நான் ஈடுபடவில்லை. சிறையிலிருந்து 15 நாள்களுக்கு முன் ஜாமீனில் வெளியில் வந்தேன். அதற்குள் என்னுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குள்ளக்குமார், கண்ணன் ஆகியோர் குடும்பத்திற்காக திருந்தி வாழ முடிவெடுத்தனர். அதனால் நானும் என் மனைவி கலாவுக்காக திருந்தி வாழ முடிவெடுத்தேன். உடனடியாக சென்னை போலீஸ் கமிஷனரையும் இணை கமிஷனர் மகேஷ்வரியையும் சந்தித்துக் கூறினேன். அவர்களும் வாழ்த்துகள் கூறினர்.

கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த ரசீது
கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த ரசீது

தற்போது கொருக்குப்பேட்டையில் லோனில் ஆட்டோ வாங்கி ஓட்டிவருகிறேன். இப்போது எல்லாம் 500 ரூபாய்க்கு சட்டை எடுக்கவே தயக்கமாக இருக்கிறது. நான் திருடும்போது குறைந்தபட்சம் 3,000 ரூபாய்க்குதான் சட்டை வாங்குவேன். உழைத்து சாப்பிடும்போது கிடைத்த திருப்தி திருடும்போது கிடைக்கவில்லை” என்றார் தன்னம்பிக்கையுடன்

சிறைக்குச் செல்லும்போதும் திருடும்போதும் நீங்கள் செய்வது தவறு என்று உங்கள் மனதில் தோன்றவில்லையா என்று கேட்டதற்கு, `நான் அப்போது மனிதாகவே இல்லை. என் மனம் போல வாழ்ந்தேன். கால்போன போக்கில் நடந்தேன். கலாவை கரம் பிடித்தப்பிறகுதான் வாழ்க்கை என்றால் என்ற அர்த்தம் புரிந்தது’ என்றார்.