Published:Updated:

விழுப்புரம்: பனையபுரம் கொலையில் தொடர்புடைய நபர் செஞ்சியில் தற்கொலை! -என்ன நடந்தது?

தற்கொலை (Representational Image)
தற்கொலை (Representational Image)

மனதைப் பதைபதைக்கச் செய்யும் விழுப்புரம் மாவட்ட பனையபுரம் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய சுஜித்ரா மேரியின் நண்பர் ஜாமீனில் வெளிவந்த பிறகு, செஞ்சிக் கோட்டையிலுள்ள சிவன் கோயில் மண்டபத்தில் விஷமருந்தி, தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

திருமணம் மீறிய உறவுக்குத் தடையாக இருந்த கணவனை, காதலனுடன் இணைந்து மனைவியே கொலை செய்து, வீட்டின் பின்புறம் புதைத்த சம்பவம் கடந்த மார்ச் மாதம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த பனையபுரம் பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் என்பவருடைய மகன் லியோபால் (33). இவர், சுஜித்ரா மேரி (24) என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இந்தத் தம்பதிக்கு 5, 3 வயதில் இரு குழந்தைகள் இருக்கின்றனர். லியோபால், வேன் டிரைவர் வேலை செய்துவந்ததாகக் கூறப்பட்டது. அவருடைய பெற்றோரும் சென்னையில் தங்கி கூலி வேலை செய்துவந்திருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 4-ம் தேதி, தன் மாமனார் சகாயராஜுக்கு போன் செய்து பேசிய சுஜித்ரா மேரி, உறவினரின் திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற தன் கணவரைக் காணவில்லை என்று கூறியிருக்கிறார்.

விழுப்புரம்: கணவனைக் கொன்று புதைத்து நாடகமாடிய மனைவி - திருமணம் மீறிய உறவு காரணமா?
குழந்தைகளுடன் லியோபால், சுஜித்ரா மேரி
குழந்தைகளுடன் லியோபால், சுஜித்ரா மேரி

அதைத் தொடர்ந்து சில வாரங்களாகத் தன் மகன் குறித்த தகவல்களே இல்லாததால், அதே மாதம் 21-ம் தேதி மருமகள் சுஜித்ரா மேரியைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட சகாயராஜ், ``நான் ஊருக்கு வருகிறேன். நாம் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கலாம். நீ தயாராக இரும்மா...’’ என்று கூறிவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, இரு பேரக் குழந்தைகள் மட்டுமே இருந்திருக்கிறார்கள்.

அதிர்ந்துபோன சகாயராஜ், தன் மகனையும் மருமகளையும் காணவில்லை என விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வீட்டின் பின்புறமாகப் பள்ளம் தோண்டியதைப் போன்ற அடையாளம் இருப்பதாகவும், அதில் தனக்குச் சந்தேகம் இருப்பதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார் சகாயராஜ். அதன்படி 03.03.2021 அன்று வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்ற காவல்துறையினர், சம்பந்தப்பட்ட அந்த இடத்தைத் தோண்டியபோது, கைகள் கட்டப்பட்டு, காயங்களோடு அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பதைக் கண்டறிந்தனர். `இது லியோபால்தான்' என சகாயராஜ் உறுதிப்படுத்திய நிலையில், சம்பவ இடத்திலேயே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

சம்பவ இடத்தில் செஞ்சி காவல்துறை
சம்பவ இடத்தில் செஞ்சி காவல்துறை

இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தியபோது, லியோபாலின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராதாகிருஷ்ணன் (20) என்பவருக்கும், சுபித்ரா மேரிக்கும் இடையே திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டதும், அதன் விளைவாகவே இந்தக் கொடுஞ்செயல் நடந்திருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பான செய்தியை 4.3.2021 அன்று நமது விகடன் தளத்தில் வெளியிட்டிருந்தோம். சில தினங்களிலேயே தலைமறைவாக இருந்த இருவரையும் கைதுசெய்தது விக்கிரவாண்டி போலீஸ். கடலூர் மத்தியச் சிறையில் தண்டனை அனுபவித்துவந்த ராதாகிருஷ்ணன், கடந்த மாதம் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். குடும்பத்தினரிடம், தான் ஓசூர் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற இவர், கடந்த 7-ம் தேதி அன்று செஞ்சி கோட்டையிலுள்ள சிவன் கோயில் பகுதியில் இறந்தநிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக செஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் சக்தியிடம் பேசினோம். ``விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த அன்பு என்பவரின் கொலை வழக்கிலும், அதைத் தொடர்ந்து லியோபால் என்பவரின் கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டவர் இந்த நபர். ஒரு மாதத்துக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்திருக்கிறர். ஓசூர் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வந்த இவர், அங்கு செல்லாமல் செஞ்சி பகுதிக்கு வந்திருக்கிறார். கடந்த 7-ம் தேதி அன்று காலை, செஞ்சி கோட்டை அருகேயுள்ள சிவன் கோயில் மண்டபத்தில் இறந்தநிலையில் கிடந்திருக்கிறார். அங்கு சென்ற பொதுமக்கள் அதைப் பார்த்துவிட்டு 108-க்கு தகவல் தெரிவித்துள்ளனர். குளிர்பானத்தை அருந்திவிட்டு, விஷத்தையும் குடித்துவிட்டு ஆண் ஒருவர் இறந்தநிலையில் கிடப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து டி.எஸ்.பி சாருடன் நாங்கள் சென்று பார்த்தோம்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

விசாரித்தபோதுதான், அது ராதாகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம். உடல் கூறாய்வுக்குப் பிறகு பெற்றோரிடம் உடலை ஒப்படைத்துவிட்டோம். உடற்கூறாய்வு முடிவில், ஃபேரிபோஸ் என்ற மருந்தை அருந்தி ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அதற்கான காரணம் ஏதும் இதுவரை அறியப்படவில்லை. உடலில் காயங்கள் ஏதும் இல்லை. அவரது செல்போனைக் கைப்பற்றி சோதித்துப் பார்த்ததில் சந்தேகப்படும்படியான அழைப்புகளும் ஏதுமில்லை. அவரின் உறவினர்களின் மிஸ்டு கால்களே இருந்தன. இது தொடர்பாக மேலும் விசாரித்துவருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு