கள்ளக்குறிச்சியிலிருந்து சேலம் நோக்கி நேற்று முன்தினம் மாலை தனியார் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது சேலம் அம்மாபேட்டை டி.எம்.எஸ் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து நின்றபோது, ஆறு பேர் கொண்ட கும்பல், பேருந்தின் நடத்துனரான பாலசுப்பிரமணி என்பவரைச் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அந்த நடத்துனர் ஆத்தூர், காட்டுக்கோட்டை நடுவீதி பகுதியைச் சேர்ந்தவர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். இது குறித்த தகவலின்பேரில், அம்மாபேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், பேருந்தில் வந்த பயணி மாதங்கிதாசன் என்பவரை ஆத்தூர் அருகே நடத்துனர் பாலசுப்பிரமணி, இருக்கை மாறி அமரச் சொன்னதில் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதில் ஆத்திரமடைந்த அந்தப் பயணி, தன்னுடைய நண்பர்களுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்துக்கு வரச் சொல்லி இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இது குறித்து பாலசுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில், அம்மாபேட்டை போலீஸார் வழக்கு பதிவுசெய்து, தப்பி ஓடிய ஆறு பேர் கும்பலை தேடி வந்தனர்.
இந்த நிலையில், பேருந்தில் பயணித்த அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாதங்கிதாசன், அவஉடைய நண்பர்களான மதன், தனுஷ் குமார், சுபாஷ், மணிகண்டன், சபரிநாத் ஆகியோர்மீது கொலைவெறியுடன் தாக்குதல், பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை முயற்சி போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.