Published:Updated:

``அவன அடிச்சோம், செத்துட்டான்!” - தற்பெருமையால் 30 வருடங்களுக்குப் பிறகு சிக்கிய போலீஸ் அதிகாரி

சத்யா கோபாலன்

முப்பது வருடங்களுக்கு முன்பு, ஒரு குற்றவாளியை அடித்தே கொன்றதாகக் கூறி, தானே மாட்டிக்கொண்டுள்ளார் மும்பையைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

உலகம் முழுவதும் தற்போது, சிசிடிவி கேமராக்கள் என்பது அத்தியாவசியமாக மாறிவருகிறது. இதனால், பல குற்றங்கள் முன்னதாகவே தடுக்கப்பட்டுள்ளன. பல வழக்குகளை எளிதாக முடிக்கவும், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்கவும் உதவியுள்ளது. இதே சிசிடிவி காட்சிகள்மூலம் 30 வருடங்களுக்கு முன்பு செய்த ஒரு செயலுக்காகத் தற்போது சிக்கியுள்ளார், டிசிபி பீம்ராவ் சோனவனே.

சிசிடிவி
சிசிடிவி

மும்பையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற டிசிபி பீம்ராவ் சோனவனே (Bhimrao Sonawane). கடந்த 30 வருடங்களுக்கு முன்பு, தன்னிடம் சிக்கிய ஒரு கைதியை அடித்தே கொன்றுள்ளார். இந்த விவகாரம் பற்றி தன் நண்பர்களிடம் பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் சிக்கியுள்ளார். அந்த வீடியோவில் பீம்ராவ் பேசியிருப்பதாவது, “ 1990-ம் ஆண்டு, நான் மும்பை வோர்லி பகுதி காவல் நிலையத்தில் பணியிலிருந்தேன். அப்போது, ரட்டு கோசவி என்ற குற்றவாளியைத் தேடிவந்தோம். அவன்மீது 27 வழக்குகள் உள்ளன. நீண்ட வருடங்களாக அவனைத் தேடியும் கிடைக்கவில்லை. ஒருநாள், அவன் எங்கள் காவல்நிலையத்துக்கு வந்தான். ரட்டுவைப் பார்த்ததும், அப்போது இருந்த கோபத்தில் அவனை நாயை அடிப்பதுபோல சரமாரியாகத் தாக்கினோம். அவன், உடல் முழுவதும் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில், ரட்டு அசைவில்லாமல் கிடந்தான். நான்தான் அவனது கண்களைச் சோதனைசெய்தேன். அவன் இறந்துவிட்டான். பிறகு, இதைப் பற்றி காவல் நிலையத்திலிருந்தவர்களிடம் கூறினேன். ரட்டு இறந்ததை மறைக்க முடிவுசெய்தோம். ஆனால், காவல்நிலையத்துக்கு வெளியில் ரட்டுவின் ஆதரவாளர்கள் சுமார் 400-க்கும் அதிகமானவர்கள் இருந்தனர். அவனை நிற்கவைத்து, கையில் விளங்கு மாட்டி, ரட்டு உயிருடன் இருப்பது போலவே அனைத்தையும் செட் செய்து வெளியில் அழைத்துச்சென்றோம்.

ஜெயில்
ஜெயில்

அங்கிருந்தவர்கள் என்ன ஆயிற்று எனக் கேட்டதற்கு, ரட்டுவுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறிவிட்டு, உடனடியாக அவனை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம். ஆனால், அங்கிருந்த மருத்துவர்கள் இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம் எனக் கூறிவிட்டனர். பின்னர், வேறு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, அங்கிருந்து ரட்டு தப்பிக்க நினைக்கும்போது கீழே விழுந்து இறந்துவிட்டதாக அனைத்தையும் செட் செய்து, அனைவரையும் நம்பவைத்தோம்” எனத் தன் பெருமையைப் பற்றிப் பேசியுள்ளார்.

தான் வேலைசெய்த அதே காவல்நிலையத்தில் அமர்ந்துதான் நண்பர்களிடம் இதைப் பகிர்ந்துள்ளார் பீம்ராவ். 2018-ம் ஆண்டு அவர் பேசிய சிசிடிவி கேமரா காட்சிகளைத் தற்போது வோர்லி காவல்நிலையத்தில் அளித்துள்ளார் பீமாராவின் உறவினரும், தொழிலதிபருமான ராஜேந்திர தாக்கர். பீம்ராவுக்கும் தாக்கருக்கும் இடையே பண ரீதியிலான பிரச்னை இருப்பதால், வீடியோவை எப்படியோ எடுத்துக் கொடுத்துள்ளார்.

இதுபற்றிப் பேசியுள்ள ஓய்வுபெற்ற அதிகாரி பீம்ராவ்,” என்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. நான் பேசியதாகச் சொல்லப்படும் வீடியோ 2018-ம் ஆண்டு எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

இந்த விவகாரம் பற்றி தற்போதுள்ள டிசிபி அபினாஷ் பேசியுள்ளார். “ சிசிடிவி காட்சிகளை வைத்து நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். அந்த நேரத்தில் என்ன நடந்தது போன்றவற்றை விசாரித்துவருகிறோம். இது தொடர்பாக யாரேனும் புதிதாகப் புகார் அளித்தால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடரும். நடந்த சம்பவங்கள் தொடர்பாக எங்களுக்கு தகுந்த ஆதாரங்கள் வேண்டும். அப்போதுதான் எங்களால் முறையாக விசாரிக்க முடியும். வீடியோ ஆதாரங்கள் மட்டும் போதாது” என்று குறிப்பிட்டுள்ளார்.