Published:Updated:

நிழலுலக ராஜாக்கள்: ஹாஜி மஸ்தான் - மும்பையை ஆண்ட ஒரு தமிழன் | பகுதி 1

நிழலுலக ராஜாக்கள்
News
நிழலுலக ராஜாக்கள்

மும்பை நகரத்துக்குப் பல அடையாளங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது மாஃபியா அடையாளம். மும்பை மாஃபியாவுக்கான ஆரம்பம் இந்திய சுதந்திரத்துக்கும் முன்பே நேர்ந்தது.

மும்பை மாஃபியாக்களின் வளர்ச்சிக்கு முதன்முதலில் வித்திட்டது மும்பைத் தமிழர்களான `ஹாஜி மஸ்தான்’ என்று அழைக்கப்பட்ட மஸ்தான் ஹைதர் மிர்ஷா-வும் வரதராஜனும். இருவரும் மும்பை மாஃபியாவின் இரு முகங்கள். இருவேறு வழிகளில் சென்றவர்கள். ஹாஜி மஸ்தானின் கட்டுப்பாட்டில் மும்பை துறைமுகமும் தெற்கு மும்பைப் பகுதிகளும் இருந்தன. வரதராஜனின் கட்டுப்பாட்டில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியும், சயான் கோலிவாடா பகுதிகளும் இருந்தன.

தாராவி
தாராவி

ஹாஜி மஸ்தானின் சாம்ராஜ்யம் எப்படியிருந்தது தெரியுமா?

கடலூர் டு மும்பை

தமிழகத்தின் கடலூர் அருகிலுள்ள பானாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹாஜி மஸ்தான். தந்தையுடன் பிழைப்புத் தேடி மும்பைக்கு வந்தார். மும்பைக்கு வந்தபோது அவருக்கு 8 வயதுதான். மும்பை முற்றிலும் புதிதாக இருந்தது. என்ன தொழில் செய்வது எனத் தெரியவில்லை. உயிர் வாழ வேண்டும். சைக்கிள், இரு சக்கர வாகனங்களைப் பழுதுபார்க்கும் சிறிய கடை ஒன்றை ஆரம்பித்தனர். மும்பையில் தற்போது பிரபலமாக இருக்கும் கிராஃப்போர்டு மார்க்கெட் அருகில்தான் கடை இருந்தது. காலை 8 மணிக்குக் கடை இயங்கத் தொடங்கும். இரவு வரை திறந்திருக்கும். தந்தை கொடுத்த வேலைகளை மட்டுமே மஸ்தான் செய்துகொண்டிருந்தார். ஐந்து ரூபாய் மட்டுமே வருமானமாகக் கிடைத்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வீட்டிலிருந்து தினசரி கடைக்குச் செல்லும் மலபார் ஹில், கிராண்ட் ரோடு பகுதியில் ஹாஜி மஸ்தானுக்கு வேடிக்கை பார்க்க நிறைய விஷயங்கள் இருந்தன. அடுக்கு மாடிக் குடியிருப்புகளும், ஆடம்பர கார்களும் அவரது மனதை நிரப்பின. தன்னால் ஏன் ஓர் ஆடம்பர காரில் பயணம் செய்ய முடியவில்லை என ஹாஜி மஸ்தான் யோசிக்கத் தொடங்கினார். ஆடம்பர கார்களில் பயணிப்பது போன்ற கனவுகளில் வாழ ஆரம்பித்துவிட்டார். அந்த வாழ்க்கைக்குள் ஒரு நாள் நுழைய வேண்டும் என்று உறுதிபூண்டார். எனினும், மஸ்தான் வாழ்வில் பெரிய மாற்றம் இல்லை. பத்தாண்டுகள் உருண்டோடின. 18 வயதிலும் பழுது பார்க்கும் அதே வேலைதான். கனவும் உள்ளே கனன்றுகொண்டிருந்தது. அப்பாவிடம் வேறு வேலைக்குச் செல்ல விரும்புவதாகக் கூறினார். தந்தை, மஸ்தானை துறைமுகத்தில் கூலி வேலைக்குச் சேர்த்துவிட்டார்.

மஸ்தான்
மஸ்தான்

கனவை எட்டும் பாதையை அடைந்த மஸ்தான்!

கடற்கரை நகரமான மும்பை ஒரு காலத்தில் கிராமமாக இருந்தது. அடிக்கடி கடல் நீர் உள்ளே வந்ததால், நகரம் சேறும் சகதியுமாக இருக்கும். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களே மும்பைக்கு வரத் தயங்கிய காலம் அது. பிற மாநிலத்தவர்களும், தென்னிந்தியர்களும் பிழைப்புத் தேடி மும்பைக்கு வந்தனர். சேறும் சகதியுமாக இருந்த பகுதிகளில் மண்ணைப் போட்டு நிரப்பி, அதில் குடிசைகள் அமைத்து வாழ ஆரம்பித்தனர். மும்பை தனக்கான முகத்தை இப்படித்தான் அடையத் தொடங்கியது.

மும்பை
மும்பை

வெளியாரை இருகரம் கூப்பி வரவேற்கும் மும்பையில் 2000-ம் ஆண்டு வரை கிரிமினல்கள், மாஃபியாக்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் கேள்வியே கிடையாது. துப்பாக்கிதான் பேசும். மாஃபியாக்களின் வாழ்க்கை பகலில் உறங்கிக் கிடக்கும். இரவுதான் பணி தொடங்கும். டான்ஸ் பார்கள் மாஃபியாக்களுக்குச் சொந்த வீடுபோல. மாலை வந்தால் அதிகாலை 2 அல்லது 3 மணி வரை பேச்சுவார்த்தை நடக்கும். டான்ஸ் பார்களில்தான் பல டீல்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும். முரண்பாடுகள் எழுந்தால் துப்பாக்கி வெடிக்கும். ரத்தம் தெறிக்கும். இசை நிற்காது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1995-ம் ஆண்டு, முதன்முறையாக சிவசேனா-பாஜக கூட்டணி அரசு பதவிக்கு வந்தது. மனோகர் ஜோஷி தலைமையிலான அரசு மும்பை மாஃபியாக்களை களையெடுக்கும் பணியில் இறங்கியது. களையெடுப்புக்கு சிவசேனா தலைவர் பால் தாக்கரே தனது முழு அங்கீகாரத்தையும் வழங்கினார். சிவசேனா கூட்டணி அரசின் பதவிக்காலத்தில் 200-க்கும் மேற்பட்ட கிரிமினல்களைக் குருவியைச் சுடுவதுபோல் போலீஸார் சுட்டுக் கொன்றனர். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மும்பையை காலி செய்துவிட்டு வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர் மாஃபியாக்கள். 2000-ம் ஆண்டுக்குள் பெரும்பாலான கிரிமினல்கள் ஒழிக்கப்பட்டுவிட்டனர். ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கூட்டணி அரசு டான்ஸ் பார்களுக்குத் தடைவிதித்தது. மும்பையில் இன்றுவரை நீளும் நிழலுலகத்துக்கான விதையை மஸ்தான்தான் போட்டார்.

மஸ்தான்
மஸ்தான்

மும்பை துறைமுகத்தில் கூலி வேலைக்கு மஸ்தான் சேர்ந்தபோது இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்திருக்கவில்லை. 1944-ம் ஆண்டில் வேலைக்குச் சேர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் துறைமுகத்தில் வேலை பார்க்க நிறைய ஆட்களில்லை. பிற்காலத்தில் தமிழகத்திலிருந்து வந்த பலர் துறைமுக வேலைக்குச் சென்றனர். மஸ்தான் வேலைக்குச் சேர்ந்தபோது சரக்குகளை ஏற்றி இறக்குவதுதான் முக்கிய வேலையாக இருந்தது. சில நாள்களில் அங்குள்ளவர்களுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார். வெளிநாடுகளிலிருந்து கப்பலில் எடுத்துவரும் பொருள்களுக்கு ஆங்கிலேயர்கள் அதிக வரி விதித்தனர். சரக்குகளுக்கு வரி செலுத்தாமல் ஏமாற்றி, வெளியில் எடுத்து வந்து, அதன் உரிமையாளர்களிடம் கொடுத்தால் அதிக அளவு வருமானம் கிடைக்குமென மஸ்தான் புரிந்துகொண்டார்.

பிலிப்ஸ் ரேடியோ மற்றும் கைக்கடிகாரங்கள் அந்தச் சமயத்தில் பிரபலம். துறைமுகத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் துணையை மஸ்தான் பயன்படுத்திக்கொண்டார். தந்தை அறிவுறுத்தியபடி அவர் திருட்டு வேலை செய்யவில்லை. விதியை மீறுவது திருட்டு அல்ல என தனக்குத் தானே சொல்லிக்கொண்டார். துறைமுகத்தில் இறங்கும் பொருள்களை வரி செலுத்தாமல் வெளியில் கொண்டு வந்து, அதன் உரிமையாளர்களிடம் கொடுத்து அதிக பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார். ஆங்கிலேயர்களுக்கு ஏன் வரி கொடுக்க வேண்டும் என யோசித்து அந்தப் பொருள்களுக்கு வரி செலுத்தாமல் எடுத்துவருவதாக மஸ்தான் நியாயம் கற்பித்துக்கொண்டார்.

மஸ்தானின் செயல்களும் துடிப்பும் குறித்த செய்திகள் முக்கியமான ஒரு நபரை சென்றடைந்தன. அவர், ஷேக் மொகமத் அலி காலிப்!

ஆரம்பத்தில் கைக்கடிகாரம் மற்றும் ரேடியோக்களை மட்டுமே வரி செலுத்தாமல் துறைமுகத்திலிருந்து வெளியில் கொண்டு வந்து கொண்டிருந்தார் மஸ்தான். பெரிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை. மாதம் 15 ரூபாய் மட்டுமே கிடைத்தது. அவர் விரும்பிய வாழ்க்கைக்கு அந்த வருமானம் போதுமானதாக இருக்கவில்லை. எப்போதும் ஆடம்பர கார், சொகுசு பங்களாவில் வாழ வேண்டும் என்ற கனவில் இருந்தார். அவரது கனவுக்கான அடுத்த திருப்பம் விரைவிலேயே நேர்ந்தது.

மஸ்தான் செய்யும் வேலையையே பெரிய அளவில் முக்கியமான ஒரு விஷயத்துக்கு செய்துகொண்டிருந்தவர் ஷேக். வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தும் வேலையைச் செய்துகொண்டிருந்தார் ஷேக். அவர் எதிர்பார்த்த துடிப்பான இளைஞராக மஸ்தான் இருந்தார். இருவரும் தொழில் கூட்டாளிகளாக மாறினர். மும்பை துறைமுகத்தில் கடத்தல் தொழில் பெரிய அளவில் பிரபலமாகாத நேரம் அது. ஆறு கைக்கடிகாரங்கள், நான்கு ரேடியோக்கள், இரண்டு தங்க பிஸ்கட்களை மட்டும் வரி கட்டி எடுத்து வர முடியும். அவற்றை வரி கட்டாமல் எடுத்து வருவதில்தான் பலரின் ஆர்வம் இருந்தது. பெரிய அளவில் தங்கத்தை க்கடத்திவரும் வகையில் எவரும் இருக்கவில்லை. அதுவே மஸ்தானுக்கு ஆதாயமானது.

மஸ்தான்
மஸ்தான்

துறைமுகத்தில் கூலியாக மஸ்தான் வேலை செய்ததால், பெரிய அளவில் அவரைச் சோதிக்க மாட்டார்கள். அதையே சாதகமாக்கினார் மஸ்தான். சிறு கடிகாரம் மற்றும் ரேடியோக்களை மட்டுமே கடத்திவந்த மஸ்தானுக்கு தங்கத்தைக் கடத்தும் வித்தை முழு அளவில் தெரியவில்லை. தங்கம் கடத்தும் வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என மஸ்தானுக்கு ஷேக் கற்றுக்கொடுத்தார். உள்ளாடைகள், தொப்பிகள் போன்றவற்றில் வைத்து அதிக அளவில் தங்கத்தை வெளியே கொண்டு வந்தனர்.

தங்க வியாபாரமும் மார்வாடிகளும்!

தங்க வியாபாரத்தில் அதிக அளவில் மார்வாடிகள் இருந்தனர். மஸ்தானின் பிரதான வாடிக்கையாளர்கள் அவர்கள்தான். அதாவது வெளிநாட்டிலிருந்து மார்வாடிகள் வாங்கி வரும் தங்கத்தை சுங்க வரி கட்டாமல் வெளியில் கொண்டு வந்து வாடிக்கையாளர்களிடம் சேர்ப்பது மஸ்தானின் வேலை. துறைமுக அதிகாரிகள் மஸ்தானுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததால், தொழில் எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் சென்றது. அதிகாரிகளைத் தனிப்பட்ட முறையில் மஸ்தான் கவனிக்கவும் செய்தார். மஸ்தானின் மாதச் சம்பளம் 15 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரித்தது. கச்சிதமாக ஷேக்கின் தங்கம், கைக்கடிகாரம், வெளிநாட்டு சிகரெட் போன்ற பொருள்களை சுங்க வரி கட்டாமல் வெளியில் கொண்டுவந்து கொடுத்ததால் ஷேக் மனதில் தனி இடத்தைப் பிடித்தார் மஸ்தான்.

ஹாஜி மஸ்தான்
ஹாஜி மஸ்தான்

தான் மட்டும் வளர்ச்சியடைந்தால் போதாது என்று துறைமுகத் தொழிலாளர்களின் நலனிலும் அக்கறை செலுத்தினார் மஸ்தான். இதனால் தொழிலாளர்கள் மத்தியிலும் மஸ்தானின் மதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. கூலித் தொழிலாளியாகப் பயணத்தைத் தொடங்கிய மஸ்தான், கடத்தல் தொழிலுக்கு மாறி, பிறகு தொழிலாளர்களின் மத்தியில் பெயர்பெற்றபோது அடுத்த முக்கியமான திருப்பம் அவரின் வாழ்க்கையில் நேர்ந்தது.

அந்தத் திருப்பம் மஸ்தானின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றத்தை உருவாக்கியது.

(தொடரும்...)

- மும்பையிலிருந்து நமது நிருபர்